தேடுதல்

மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் மியான்மார் குழந்தைகளும், மக்களும் - கோப்புப் படம், ஜூன் 2021 மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் மியான்மார் குழந்தைகளும், மக்களும் - கோப்புப் படம், ஜூன் 2021 

இராணுவ ஆட்சியின் ஆறு மாதங்களில், மியான்மாரின் நிலை

மியான்மாரில் தற்போது தலைவிரித்தாடும் கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையுடன் சேர்த்து, அந்நாடு, பாதுகாப்பற்ற நிலையில் தத்தளிக்கிறது - ஐ.நா. உயர் அதிகாரி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 1, இஞ்ஞாயிறன்று, மியான்மார் நாட்டில் இராணுவ ஆட்சி திணிக்கப்பட்டு ஆறு மாதங்கள் முடிவடைந்த வேளையில், அந்நாட்டில் பெருகியுள்ள நெருக்கடிகளைக் குறித்து, ஐ.நா. நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

மியான்மார் நாட்டில், மக்களால் தேர்தெடுக்கப்பட்டு, Aung San Suu Kyi அவர்களின் தலைமையில், இயங்கிவந்த அரசைச் சார்ந்த தலைவர்களை, அந்நாட்டு இராணுவம் கைதுசெய்து, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் நாளன்று இராணுவ ஆட்சியை அமல்படுத்தியதை எதிர்த்து மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள், மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டு வந்துள்ளது.

இராணுவ ஆட்சியின் ஆறு மாத கால நீட்டிப்பு உருவாக்கியுள்ள மிக மோசமான தாக்கங்களைக்குறித்து தன் கவலையை வெளியிட்ட ஐ.நா. உயர் அதிகாரி இராமநாதன் பாலகிருஷ்ணன் அவர்கள், மியான்மாரில் தற்போது தலைவிரித்தாடும் கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையுடன் சேர்த்து, அந்நாடு, பாதுகாப்பற்ற நிலையில் தத்தளிப்பதாகக் கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டின் Shan, Chin மற்றும் Kachin மாநிலங்களில், 2,20,000த்திற்கும் அதிகமான மக்கள், தங்கள் இல்லங்களைவிட்டு, உயிருக்குப் பயந்து வெளியேறியுள்ளனர் என்று கூறிய பாலகிருஷ்ணன் அவர்கள், அந்நாட்டில் தற்போது, 20 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மக்கள், குறிப்பாக, குழந்தைகள் பட்டினியால்  வாடும் அவலநிலை ஒவ்வொருநாளும் கூடிவருகிறது என்றும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையும், இராணுவ ஆட்சியின் அடக்குமுறையும், மியான்மார் நாட்டை பேரிடரை நோக்கி இழுத்துச் செல்கின்றன என்று, பாலகிருஷ்ணன் அவர்கள், குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் அடக்குமுறையால், மக்களுக்குத் தேவையான அடிப்படை நலவசதிகள் மக்களை சென்றடைவதில்லை என்று கூறிய பாலகிருஷ்ணன் அவர்கள், நாட்டில் நிலவும் நலக்குறைவால், மக்கள், நலப்பணியாளர்களை தாக்கும் சூழல்கள் உருவாகியுள்ளன என்று, கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தனை துயர்கள் நடுவிலும், உதவிகள் மக்களை சென்றடைவதற்கும், மியான்மாரில் நிலவும் அவலங்களை உலகறிய செய்வதற்கும், ஐ.நா. நிறுவனம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துவருகிறது என்று, ஐ.நா. அதிகாரி பாலகிருஷ்ணன் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2021, 14:07