தேடுதல்

கந்தமால் நினைவு நாள் கந்தமால் நினைவு நாள் 

கந்தமால் நாளன்று, மனித உரிமைகள் விருது உருவாக்கம்

ஆகஸ்ட் 25, இப்புதனன்று, கந்தமால் நாள் கடைபிடிக்கப்பட்ட வேளையில், NSF என்றழைக்கப்படும் 'தேசிய ஒருமைப்பாட்டு அவை' என்ற அமைப்பு, மனித உரிமைகள் விருதுகளை நிறுவியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன், 2008ம் ஆண்டு, ஆகஸ்ட் 24, 25 ஆகிய இரு நாள்கள் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள கந்தமால் மாவட்டத்தில் இந்து அடிப்படைவாத கும்பலால், கிறிஸ்தவர்கள் வதைக்கப்பட்ட நிகழ்வின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 25ம் தேதி, கந்தமால் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு, ஆகஸ்ட் 25, இப்புதனன்று, கந்தமால் நாள் கடைபிடிக்கப்பட்ட வேளையில், NSF (The National Solidarity Forum) என்றழைக்கப்படும் 'தேசிய ஒருமைப்பாட்டு அவை' என்ற அமைப்பு, மனித உரிமைகள் விருதுகளை நிறுவியுள்ளது.

மனித உரிமைகளைக் காப்பதிலும், மக்களிடையே முன்னேற்றம், நல்லிணக்கம், மற்றும் அமைதியை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ள அரசு சாரா அமைப்புக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்றும், இவ்வாண்டுக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், NSF அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், முனைவர் ராம் புனியானி (Ram Puniyani) அவர்கள் கூறினார்.

கந்தமால் வன்முறைகளைத் தொடர்ந்து, அந்த அநீதியை உலகறியச் செய்த 70 நிறுவனங்கள் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள NSF அமைப்பு, இந்த வன்முறையால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது.

"மனித உரிமைகள் மற்றும் குடியரசு சார்ந்த விடுதலை" என்ற தலைப்பில், ஆகஸ்ட் 25 இப்புதனன்று, NSF அமைப்பு ஏற்பாடு செய்த இணையவழி கருத்தரங்கு ஒன்றில், இந்தியாவின் சட்டக்குழுவின் தலைவராகவும், டில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றிய Ajit Prakash Shah, இந்தியாவின் தேர்தல் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய Shahabuddin Yaqoob Quraishi, திரைப்பட இயக்குனர் Javed Akhtar ஆகியோர் உரையாற்றினர்.

மனித உரிமைகள், மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட கந்தமால் வன்முறைகளுக்கு, இன்னும் சரியான தீர்ப்புகள் கிடைக்காமல் இருப்பது, இந்திய குடியரசுக்கும், நீதித்துறைக்கும் பெரும் இழுக்காக அமைந்துள்ளது என்று NSF அமைப்பு கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2021, 13:43