தேடுதல்

Vatican News
காலநிலை மாற்ற நெருக்கடிநிலைக்கு எவ்வகையிலும் காரணமாக இல்லாத வறியோரின் துயரங்கள் காலநிலை மாற்ற நெருக்கடிநிலைக்கு எவ்வகையிலும் காரணமாக இல்லாத வறியோரின் துயரங்கள் 

ஆகஸ்ட் 19 - உலக மனிதாபிமான நாள் 2021

காலநிலை மாற்ற நெருக்கடிநிலைக்கு எந்த விதத்திலும் காரணமாக இல்லாத வறியோர், இந்த நெருக்கடி நிலையின் மிகக் கடினமான துன்பங்களை ஒவ்வொரு நாளும் சந்தித்துவருகின்றனர் - OCHA அமைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்ற நெருக்கடிநிலை என்ற பந்தயத்தில் நாம் தோற்றுவருகிறோம், ஆனால், மனதுவைத்தால், இந்தப் பந்தயத்தை நாம் வெல்லமுடியும் என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், உலக மனிதாபிமான நாளுக்கென வழங்கிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மனிதாபிமான நாளையொட்டி, 2021ம் ஆண்டுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையக்கருத்து, காலநிலை மாற்ற நெருக்கடிநிலையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

ஐ.நா.வின் மனிதாபிமான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் OCHA என்ற அலுவலகம், "காலநிலை மாற்ற நெருக்கடிநிலை என்ற பந்தயத்தில் நாம் யாரையும் பின்னே விட்டுவிட்டுச் செல்லமுடியாது" என்ற சொற்களை, 2021ம் ஆண்டின் மையக்கருத்தாக வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் நிலவும் காலநிலை மாற்ற நெருக்கடிநிலைக்கு எந்த விதத்திலும் காரணமாக இல்லாத வறியோரும், சமுதாயத்தின் விளிம்புகளில் தள்ளப்பட்டுள்ளோரும், இந்த நெருக்கடி நிலையின் மிகக் கடினமான துன்பங்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர் என்று, OCHA அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுச்சூழல் சீரழிவுகளால் ஏற்படும், புயல் மழை, வெள்ளம், காட்டுத்தீ, போன்ற இயற்கைப் பேரிடர்களால், வறியோர், தங்கள் குடியிருப்புகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து, புலம்பெயர்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை, OCHA தன் செய்தியில் கூறியுள்ளது.

இவ்வாண்டு கடைபிடிக்கப்படும் உலக மனிதாபிமான நாளன்று, நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓட்டம், நடை, நீச்சல், விளையாட்டு என்ற பல்வேறு உடல் சார்ந்த முயற்சிகள் அனைத்தும் எண்ணிக்கைகளாக கணக்கெடுக்கப்பட்டு, #TheHumanRace என்ற சமூக வலைத்தளம் வழியே, COP26 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று OCHA அமைப்பு கூறியுள்ளது.

18 August 2021, 14:56