தேடுதல்

Vatican News
கழைக்கூத்து கழைக்கூத்து  

வாரம் ஓர் அலசல்: கருணையின் ஆசான்கள்

ஐய்ய.. காசு கொடுக்கிறா, உம்பிள்ளைன்னா வேற.. என் புள்ளைன்னா வேறயா.. புள்ளையைக் காப்பாத்தினத்துக்குப்போயி காசு கொடுக்கிறா.. போ சாமி.. - கழைக்கூத்து நடத்தும் மனிதர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருவாளர் எஸ்கேபி கருணா அவர்கள், திருவண்ணாமலையில், மிகப்பெரிய செல்வந்தர். இரு பொறியியல் கல்லூரிகளுக்குப் பொறுப்பாளர். இவர், ஒருசமயம், மேல்மலையனூர் என்ற ஊரில், தனது தங்கையின் ஒன்றரை வயது மகனுக்கு காதணி விழா ஒன்றை நடத்தினார். அந்த விழா முடிந்து எல்லாரும் விருந்துண்ண அமர்ந்தபோது அந்த குழந்தையைக் காணவில்லை. விழாவுக்கு வந்த எல்லாரும் பதறிப்போய், குழந்தையை நாலாபக்கமும் தேடினர். அந்தக் குழந்தை, அவரது தங்கைக்கு, பத்து ஆண்டுகள் சென்று, தவமிருந்து பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று. அக்குழந்தைகளில் ஒன்று, பிறந்தவுடனேயே இறந்துவிட்டது. அவற்றில் உயிர் பிழைத்த, இந்த மகனை மிகவும் பாதுகாப்பாக, செல்லமாக வளர்த்துவந்தார், கருணா அவர்களின் மருத்துவர் தங்கை. அன்று அந்த ஊர் கோவில் திருவிழாவும்கூட. அதனால் கூட்டம் அலைமோதியது. கருணா அவர்கள், குழந்தையைத் தேடிக் களைத்துப்போய் திரும்புகையில், அந்த ஊரில் கழைக்கூத்து நடந்துகொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு கழைக்கூத்து நடத்தும் மனிதர், தனது எட்டு வயது மகளை, ஒரு கம்பி மீது நடக்க வைத்து, தன் உடலை சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தார். சுற்றிநின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில், ஒரு மூலையில், தனது மருமகன் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்ததை கருணா அவர்கள் பார்த்தார். உடனே அவர், அவனை அள்ளி அணைத்து கண்ணீரோடு முத்தமிட்டுக்கொண்டிருந்தார்.

கழைக்கூத்து நடத்திய மனிதரின் கருணை

கருணா அவர்களைப் பார்த்த, கழைக்கூத்து நடத்திய மனிதர், சாட்டையால் தன்னை அடித்துக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, அவரிடம் வந்து, சாமி, இது உங்க பிள்ளையா, ரோட்டில தன்னந்தனியா நின்னு அழுதுக்கிட்டிருந்துச்சு, நான்தான் கூட்டிவந்து சாப்பிட பழம் கொடுத்தேன் என்று கூறினார். இந்த நிகழ்வு பற்றி, தன் நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டுள்ள கருணா அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார். சாமான்யர்கள், ஒன்றுமில்லாதவர்கள் பற்றி, அதுவரை நான் நினைத்துப் பார்த்ததில்லை, ஆனால் இந்த மனிதரின் எளிய சொற்கள், ஏழைகள் யார் என்பதை எனக்கு உணர்த்திவிட்டன. நான் உடனே எனது சட்டை பாக்கெட்டிலிருந்து பணப்பையைத் திறந்து, அதில் அந்த காதணி விழாவுக்காக நான் கொண்டு வந்திருந்த ஏறத்தாழ எழுபதாயிரம் ரூபாயையும் அவரிடம் கொடுக்கப்போனேன். அதில், எல்லாமே இரண்டாயிரம் ரூபாய் தாள்களே இருந்தன. ஆனால், அந்த கழைக்கூத்து மனிதர், அதை ஏறெடுத்துக்கூட பார்க்காமல், அப்படியே அதை தனது இடது கையால் தள்ளி விட்டுவிட்டு, ஐய்ய.. காசு கொடுக்கிறா, உம்பிள்ளைன்னா வேற.. என் புள்ளைன்னா வேறயா.. புள்ளையைக் காப்பாத்தினத்துக்குப்போயி காசு கொடுக்கிறா.. போ சாமி.. என்று சொன்னார். அப்போது கருணா அவர்கள், எனது பொறியியல் கல்லூரியில் அதிகம் படித்தவர்களே பணியாற்றுகிறார்கள். அவர்களது ஊதியத்தில் 500 ரூபாய் கூடுதலாகத் தருகிறேன், பக்கத்து ஊரிலுள்ள எனது மற்றொரு பொறியியல் கல்லூரிக்குப் போகச்சொன்னால், வேலையைவிட்டுப் போகிறேன் என, அன்றே அவர்கள் எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் களைக்கூத்து நடத்தும் இந்த மனிதர், பணம் பெரிதல்ல, மனிதமே பெரிது என்பதை கற்றுக்கொடுத்தார். இவரை எனது மனம் வாழ்த்தி நன்றி சொல்லியது என்று கூறியுள்ளார்.

பிக்பாக்கெட் திருடரின் கருணை

வைக்கம் முகமது பஷீர் என்பவர், கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் புகழோடு வாழ்ந்தவர். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்திருந்த இவர், மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவர். கப்பல் பணியாளர், சமையற்காரர், சூதாட்ட விடுதி ஊழியர், சூபி துறவி உட்பட 26 விதமான வேலைகளை இவர் செய்திருக்கிறார். அதேநேரம், கடுமையான வறுமையையும் இவர் சந்தித்திருக்கிறார். பத்மஸ்ரீ விருது, உட்பட பல விருதுகளைப் பெற்றிருப்பவர். பல நூல்களையும் இவர் படைத்திருக்கிறார். முகமது பஷீர் அவர்கள், தனக்கு அறுபது வயது நடந்தபோது நடந்த ஒரு நிகழ்வை, தன் நூல் ஒன்றில் இவ்வாறு பதிவுசெய்திருக்கிறார்.

ஒருநாள் தீவிர சிந்தனையோடு எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென பசி எடுத்தது. கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு மணி 9. அப்படியே மூன்று கிலோ மீட்டர் தூரம் மெதுவாக நடந்து ஓர் உணவகத்திற்குச் சென்று, மசால்தோசை ஒன்று சாப்பிட்டேன். அதன் விலை இரண்டு ரூபாய். பணம் கட்டுவதற்காக, சட்டைப் பையில் பணப்பையைத் தேடினேன் காணவில்லை. அப்போது உணவக முதலாளி என்னிடம், மணிப்பர்சு இருக்காதே, தொலைந்திருக்குமே.. இப்படித்தானே நீயும் சொல்வாய் என்று, வார்த்தைளால் அவமானப்படுத்தினார். எழுத்தாளராகிய என்னை மாவு ஆட்டச் சொல்வார்களோ என்று பயந்தேன். ஆனால் அந்த முதலாளி, நீ இங்கு மாவாட்ட வேண்டாம், உனது சட்டையை கழற்றி இந்த மேஜை மீது வைத்துவிட்டு, எல்லார் முன்னும் நில் என்று சொன்னார். மிகுந்த அவமானத்தோடு சட்டையைக் கழற்றி மேஜை மீது வைத்தேன். அங்குச் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஏறத்தாழ 80 பேர் என்னைப் பார்த்தனர். ஒருவர்கூட எழுந்துவந்து,  இரண்டு ரூபாய்தானே என, என்னிடம் கொடுக்கவில்லை. பின்னர் அந்த முதலாளி, எனது வேட்டியையும் அவிழ்க்கச் சொன்னார். கூனிக்குறுகி வேட்டியை அவிழ்க்கப்போன என்னை, எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவரின் குரல் தடுத்தது. அந்த உணவகத்திற்கு ஓடிவந்த அழுக்கான உடை அணிந்த மனிதர் ஒருவர், இரண்டு ரூபாய் தானே, நான் தர்றேன் என, முதலாளியிடம் அதைக் கொடுத்தார். பின்னர், அவர், வா பெரியவரே என்று, என்னை வெளியே கூட்டிவந்தார். பின்னர் அந்த மனிதர், இந்த ஊரில் திருடர்கள் அதிகம். கவனமா இருக்கக்கூடாதா, பர்சை இப்படியா பறிகொடுப்பாய் என்றார். பின்னர், தனது லுங்கியில் மடித்துவைத்திருந்த இருபது பணப்பைகளைக் காட்டி, இதில் எது உன்னுடையது என்று கேட்டார். எனது பணப்பை அந்த மனிதரிடம் இருந்தது. ஆனாலும் அதை நான் அவரிடம் சொல்லவில்லை. அந்த மனிதர் அங்கிருந்து ஓடிவிட்டார். ஐயோ அவரது பெயரைக் கேட்காமல் விட்டுவிட்டோமே, அதனால் என்ன, அவர் பெயர், அறம் என்பதாகவோ கருணை என்பதாகவோத்தான் இருந்திருக்கவேண்டும். இந்த உலகத்தில் அவருக்கு இரு பெயர்கள்தான் இருக்கமுடியும். ஒன்று அறம், மற்றொன்று கருணை.

பொதுவாக நம்மில் பலர் செய்வதென்ன? அழுக்கான கந்தல் ஆடையுடன் தெருக்களில் அலைகிறவர்களை, அல்லது பசிக்காகக் கையேந்துபவர்களைப் பார்த்தவுடன் பையில், சில சில்லறைக் காசுகளைத் தேடுவோம் அல்லது முகம் சுளித்து ஒதுங்கிச் செல்வோம், அல்லது ஏதாவது வித்தியாசமான வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்வோம். மேலும், ஆட்டோ ஓட்டுனர்கள், கைவண்டிக்காரர்கள், துப்பரவுத்தொழிலாளர்... இவர்கள் போன்றோரும் சமமாண்போடு நடத்துப்படுகிறார்களா என்பது சமுதாயத்தின் மனசாட்சிக்கு கேள்வியாக வைக்கப்படுகின்றது. ஆனால் இத்தகைய மனிதர், தங்களின் கருணைப் பண்பால், மற்றவரின் அகக்கண்களைத் திறந்து விடுகின்றனர். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியிருப்பதுபோன்று, இந்த ஏழை எளிய மனிதர்களின் கருணை பொங்கும் உள்ளங்கள், கடவுள் வாழும் இல்லங்களாக உள்ளன. அன்பும் கருணையும், ஏழைகள், மற்றும், பொருள் இல்லாதோரிடம் இருக்கின்றன என்பதை, கழைக்கூத்தாடி மனிதரும், பிக்பாக்கெட் திருடரும் உணர்த்திவிட்டனர். நடமாடும் கோவில்கள், தெய்வப் பிறவிகள், மாமனிதர்கள், மனிதநேயர்கள், கருணையை கற்றுத்தரும் ஆசான்கள்  என்றெல்லாம், இந்தக் கருணை இதயங்களை, நாம் நெஞ்சார உறுதியோடு வாழ்த்தலாம். வாழ்த்தவேண்டும். அதேநேரம், இத்தகைய மனிதர்களின் மாண்பு மதிக்கப்பட தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் மனிதர்களையும் நாம் போற்றவேண்டும்.

அருள்பணி ஸ்டான் சுவாமி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், பீமா கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டு மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்த ஜூலை மாதம் 5ம் தேதி இறைபதம் சேர்ந்தார். இவர் கைதுசெய்யப்பட்டது, இவரது சிறைவாழ்வு, தடுப்புக்காவல் மரணம் ஆகியவை, இந்திய நடுவண் அரசைத் தவிர, நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இவரது இறப்பு குறித்துப் பேசிய, வழக்கறிஞர் பீட்டர் மார்ஜின் அவர்கள், “தங்களுக்குத் தொடர்பில்லாத பொய் வழக்குகளில் பழங்குடியினர் கைதுசெய்யப்படுவதை எதிர்த்து வாழ்நாள் முழுக்கப் போராடிய ஸ்டான் ஸ்வாமி அவர்கள், தனக்குத் தொடர்பில்லாத வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோது இறந்தது துயரம்’’ என்று வேதனையோடு பதிவுசெய்துள்ளார். மனித உரிமைச் செயற்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன் அவர்கள், ‘‘இது ஸ்டான் ஸ்வாமியின் மறைவு அல்ல. இந்தியாவில் நீதிமன்ற நடைமுறைகளும்,  இந்திய அரசியலமைப்புச் சட்டமும் செத்துப்போய்விட்டன. அதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என்று கொதித்துள்ளார். தந்தை ஸ்டான் அவர்களின் மரணம்... அழியாக்கறை.. ஆயுள் பழி! அரசு படுகொலை என்று, பலரும், இந்திய நடுவண் அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். ‘‘எனக்கு இங்கு நடப்பவை, எனக்கு மட்டுமே அல்ல. இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருப்பவை. அறிவுசார் தளத்தில் செயல்படுபவர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், போராளிகள் என, பலர் சிறைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் செய்த காரியம், அதிகார வர்க்கத்தின் அட்டூழியங்களைக் கேள்வி கேட்டதுதான். இதில் என்னையும் இணைத்துக்கொண்டதில், நான் பெருமைப்படுகிறேன். நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. இந்த விளையாட்டுக்கான விலை எதுவாயினும் அதை நான் கொடுக்கத் தயார்.’’ இந்த வார்த்தைகள், தந்தை ஸ்டான் அவர்கள், கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் பேசியவை. நவீன நாளின் இறைவாக்கினராக, மறைசாட்சியாகப் போற்றப்படும் அருள்பணி ஸ்டான் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, கருணையைக் கற்றுத்தரும் ஏழைகளுக்காக, குரலற்றவர்களின் குரல்களாகச் செயல்பட துணிச்சலைப் பெறுவோம்.   

12 July 2021, 14:27