தேடுதல்

உதவும் கரங்கள் உதவும் கரங்கள் 

வாரம் ஓர் அலசல்: மனிதநேயத்திற்கு இலக்கணம் வகுக்கும் மனிதர்கள்

எனக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்தால் அது உதவி இல்லை. எந்த கட்டத்தில் எந்த நேரத்தில் யாருக்காவது ஏதாவது உதவி நான் செய்திருந்தால், அது பிற்காலத்தில் அவர் எனக்கு உதவுவார் என்ற எண்ணம் தோன்றும் - வரிந்தர் சிங்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜூலியோ டயஸ் (Julio Diaz) என்ற சமூக ஆர்வலர் ஒருவர் இருந்தார். அவர் வாழ்க்கையில் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அன்று அவர் நாள் முழுவதும் கடுமையாக வேலைசெய்துவிட்டு, களைப்போடு, நியுயார்க் நகரின் Bronx பகுதியிலுள்ள தன் இல்லத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் நடந்துசென்றுகொண்டிருந்தது ஒரு சுரங்கப் பாதை. அது இரவு நேரம். ஆள்நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில், திடீரென்று வழிப்பறி கொள்ளை இளைஞன் ஒருவன் கத்தியுடன் அவர்மீது பாய்ந்தான். அதை சற்றும் எதிர்பாராத, ஜூலியோ டயஸ் அவர்கள் திக்குமுக்காடிப் போனார். இவரது தொண்டைப் பகுதியில் கத்தியை வைத்த அந்த இளைஞன், பிடிவாதம் பிடிக்காமல் உனது மணிப்பர்சை கொடுத்துவிடு. அப்படிச்செய்துவிட்டால் நீ உயிரோடு போகலாம், ஏதாவது சத்தம் போட்டு தப்பித்துக்கொள்ள நினைத்தால், உன் தொண்டையை அறுத்துக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். அவருக்கு, அவனது வேகத்தைப் பார்த்தால் அவன் செய்துவிடுவான் போலிருந்தது. அவரும் அமைதியாக தன் கால்சட்டைப் பையிலிருந்து மணிப்பர்சை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் அதை அவரது கையிலிருந்து வேகமாகப் பறித்துக்கொண்டு ஓட முற்பட்டபோது, டயஸ் அவர்கள் அன்பொழுக அவனிடம்  பேசினார். தம்பி, கொஞ்சம் நில். இந்தக் குளிரில் நீ இரவெல்லாம் எப்படி உன் வீட்டிற்குப் போகப் போகிறாய், இந்தா குளிர்தாங்கும் இந்த மேலாடையைப் போட்டுக்கொள். உன்னைக் குளிர் தாக்காது என்று, தான் போட்டிருந்த மேலாடையைக் கழற்றி அவனிடம் கொடுத்தார். இவரது இந்த அணுகுமுறை அந்த வழிப்பறி கொள்ளையனுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. தயங்கிபடியே அவர் அருகில் வந்து அதைப் பெற்றுக்கொண்டு போக முற்பட்டபோது, அவனைப் பார்த்து, உன்னைப் பார்த்தால், சாப்பிடாமல் பசியோடு இருப்பதாகத் தெரிகிறது. உனக்கு விருப்பமானால் என்னோடு வருகிறாயா, அருகில் நல்ல ஓர் உணவகம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்று டயஸ் அவர்கள் சொன்னார். அவர் இப்படி அக்கறையோடு கேட்டதும், அந்த வழிப்பறி இளைஞன் தன் நிலையை மறந்து ஆகட்டும் என தலையசைத்தான். ஆயினும், அவரோடு செல்வதற்குமுன், அவரிடம் ஏதாவது ஆயுதங்கள் இருக்கின்றனவா என்பதையும் அவன் ஆய்வுசெய்யத் தவறவில்லை. அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று தெரிந்தபிறகுதான் அந்த உணவகம் செல்ல அவன் சம்மதித்தான். நான் எத்தனையோ பேரிடம் வழிப்பறி செய்திருக்கிறேன், ஆனால், இவர் எந்தப் பதட்டமும் இல்லாமல் என்னோடு பழகுகிறார் என்று அவன் நினைக்கத் துவங்கினான். அந்த உணவகமும் வந்தது. அங்கு இருந்த பணியாளர்கள் அனைவருமே ஜூலியோ டயஸ் அவர்களைப் பணிவோடு வணங்கினார்கள். அதைக் கவனித்த அந்த வழிப்பறி இளைஞன், அந்த உணவகத்தில் அவருக்குத் தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தனர். ஆனால் இவர் யாரிடமும் என்னைக் காட்டிக்கொடுக்கவில்லையே என்றும் நினைத்தான். உணவுக்குக் கட்டணம் செலுத்தவேண்டிய நேரமும் வந்தது. அப்போது டயஸ் அவர்கள், தம்பி, எனது பணம் உன்னிடம்தான் இருக்கிறது, அந்த பர்சைக்கொடு, உணவுக்குப் பணத்தைச் செலுத்திவிட்டு அப்படியே அந்த மணிப்பர்சை உன்னிடம் தந்துவிடுகிறேன் என்று சொன்னார். அவனும் அதைக் கொடுத்தான். அவரும் அந்த உணவுக்குரிய பணத்தை மட்டும் எடுத்துக்கொடுத்துவிட்டு, மிகுந்த பணம் இருந்த அந்த மணிப்பர்சை அவர் அப்படியே அவனிடம் கொடுத்துவிட்டார். அவ்வளவுதான். அவனது மனதிலே மிகப்பெரிய மாற்றம். அதற்குப்பின்னர் ஜூலியோ டயஸ் அவர்களின் வழிகாட்டுதலில், அந்த வழிப்பறி இளைஞன் புதிய மனிதனாய் புதிய பாதையில் வாழத் துவங்கினான். ஒருவரின் அன்பான அணுகுமுறை, அதிசயங்களை நிகழ்த்தும் என்று, வலைக்காட்சியில் இந்த நிகழ்வைப் பதிவுசெய்துள்ள V.Kaivalyam David அவர்கள் கூறியுள்ளார். ஆம். ஒருவரின் பரிவன்பு, அதனை அனுபவிப்பவரின் அனைத்து தீய நடவடிக்கைகளையும் நொறுங்கிப்போகச் செய்கின்றது. ஒருவரின் அன்பான அணுகுமுறை, அரக்கர்களை, ஏன் சிலசமயங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக்கூட மாற்றிவிடும் சக்தி படைத்தது. மற்றவரது தன்னலமற்ற அன்பால் புது வாழ்வைப் பெற்றவர்கள் பற்றிச் சொல்லப்படும் பகிர்வுகள், அதைக் கேட்பவரின் வாழ்வுக்கும் புது உந்துதலை அளிக்கின்றன.

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள்

கொரோனாவிலிருந்து போராடி மீண்டவர்கள், பேருதவி செய்தவர்கள் என்ற தலைப்பில், இம்மாதம் 4ம் தேதி ஒளிபரப்பான, “நீயா நானா” என்ற நிகழ்ச்சியின் வலைக்காட்சிப் பதிவில், நால்வரின் பகிர்வுகளைக் கேட்க நேர்ந்தது. அந்நிகழ்ச்சியை நடத்திய திருவாளர் கோபிநாத் அவர்கள், கொரோனாவின் இரண்டாவது அலையால் கடுமையாய்த் தாக்கப்பட்டு குணம் பெற்ற, ஒரு பெண்மணியிடம், நீங்கள் இந்நேரத்தில் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி இவ்வாறு கூறினார்.

நான் பெருந்தொற்று பாதிப்பால் மூச்சுவிடமுடியாமல் ஒரு வாரமாக மிகவும் துன்புற்றேன். நான் படுத்திருந்த வார்டில் தினமும் இறப்புக்கள்தான். நானும் பிழைக்கமாட்டேன் என, மருத்துவர்கள் எனது குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டனர். தொடர்ந்து எனக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கு எனது கணவரும் ஒருநாள் முழுவதும் சென்னையில், பல இடங்களுக்கும் சென்று கேட்டார். கிடைக்கவில்லை. இறுதியில் எனது உறவினர் ஒருவர் திருவாளர் வரிந்தர் சிங் அவர்களது தொடர்பு எண்ணைக் கொடுத்தார். எனது கணவர், சிங் அவர்களிடம் தொலைபேசியில் பேசினார். இன்றைக்கும் மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள், நாளை காலையில் உங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வந்து சேரும் என்று சிங் அவர்கள் பதில் சொன்னார். அவர் சொன்னபடியே ஆக்சிஜன் சிலிண்டரும் வந்தது. அன்று அவர் உதவிசெய்யவில்லையென்றால் இப்போது என்னால் இங்கு பேசிக்கொண்டிருக்க முடியாது. அந்த ஆக்சிஜன் சிலிண்டருக்கு அவர் எங்களிடம் பணமே வாங்கவில்லை,  இலவசமாகவே அதைக் கொடுத்தார்.

எல்லாருக்கும் ஆக்சிஜன் இலவசம்

இவ்வாறு அந்தப் பெண்மணி, நா தழுதழுக்க நன்றியுணர்வோடு கூறினார். அந்தப் பெண்மணிக்கு உதவிய சிங் அவர்களும், அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி நடத்துனர், சிங் அவர்களிடம், இப்பெண் பேசுவதைக் கேட்கும்போது உங்களுக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது எனக் கேட்டார். அப்போது சிங் அவர்கள் தனது சமுதாய சேவை பற்றி எடுத்துரைத்தார். எல்லாருக்கும் ஆக்சிஜன் இலவசம் என்ற பெயரில் நாங்கள் நடத்தும் சமுதாய சேவையில், இதுவரை 500 கொரோனா நோயாளிகளைக் காப்பற்றியிருக்கிறோம். எங்களது உதவியால் குணமடைந்த ஒருவரை நேரில் பார்த்துப் பேசுவது இதுவே முதன்முறை. ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்த, ஆறு முதல் பத்து மணி நேரத்திற்குள்ளாக, எங்களது தன்னார்வலர்கள், அந்த சிலிண்டரை அவர்கள் வீட்டிற்கே கொண்டுபோய் கொடுத்துவிடுவார்கள். அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்த நிலையை வலைக்காட்சி வழியாகப் பார்த்தேன். அவர் பிழைக்கமாட்டார் என்றுதான் எனக்குத் தோன்றியது. ஆனால், அவர், இப்போது என்முன்னால் அமர்ந்து பேசுவதைக் கேட்கும்போது பெருமையாக இருக்கிறது. நான் மனிதனாய் இருப்பதில் இன்று பெருமையடைகிறேன் ஆனால் இதற்குமுன், என்னால் உதவிபெற்ற ஒரு நோயாளியைக்கூட நான் பார்த்ததில்லை. பார்க்காமலே உதவிசெய்கிறேன். இவ்வாறு, தான் பணியாற்றுவதற்குரிய காரணத்தையும், சிங் அவர்கள், அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

வரிந்தர் சிங்

எனக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்தால் அது உதவி இல்லை. எந்த கட்டத்தில் எந்த நேரத்தில் யாருக்காவது ஏதாவது உதவி நான் செய்திருந்தால், அது பிற்காலத்தில் அவர் எனக்கு உதவுவார் என்ற எண்ணம் தோன்றும், நான் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக சமூக  சேவை செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு யாரையும் தெரியாது. நான் சேவைபுரியும் ஆள்களைச் சந்திக்கமாட்டேன் என்ற நம்பிக்கையில்தான் இதனைச் செய்துகொண்டிருக்கிறேன். அந்தப் பெண்மணி பேச ஆரம்பித்தபோது கவனித்தேன். நான் மனிதனாய் இருப்பதில் இன்று பெருமையடைகிறேன் என்று, வரிந்தர் சிங் அவர்கள் கூறினார்.

கொரோனா கால உதவிகள்
கொரோனா கால உதவிகள்

ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச்செல்ல ஆட்டோ

இதே “நீயா நானா” நிகழ்ச்சியில், கொரோனாவிலிருந்து மீண்டுவந்த மற்றொருவர் பேசுகையில், தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்மணியைச் சுட்டிக்காட்டி, இவர்களால்தான் நான் உயிர்பிழைத்தேன் என்று கூறினார். நாங்கள் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ அவசர ஊர்தியில் சென்றுகொண்டிருந்தபோதே ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது, அந்தநேரத்தில் இந்த அம்மாதான் எங்களுக்கு உதவிசெய்தார்கள் என்று கூறினார். அவருக்கு அடுத்து பேசிய அந்தப் பெண்ணும், ஆக்சிஜன் கிடைக்காமல் எனது அம்மா இறந்தார். அதனால், நாங்கள் ஓட்டும் ஆட்டோவை ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச்செல்வதற்காகப் பயன்படுத்தியுள்ளேம். இதுவரை ஐம்பது நாள்களில் ஏறத்தாழ 600 பேருக்குமேல் காப்பாற்றி இருக்கிறோம். எங்களது ஆட்டோ காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு மருத்துவமனையின்முன்தான் நிற்கும்.

மனிதர்களாகிய நாம் யார், நம் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்பதை, பேருதவி புரியும் இத்தகைய மனிதர்கள் உணர்த்தி வருகின்றனர். இவர்கள், முன்பின் அறியாத, முகம் தெரியாத, உதவிதேவைப்படும், மனிதர்களுக்கு, எந்தக் கைம்மாறும் கருதாமல் உதவி வருகின்றனர். இந்த மனிதர்கள் இயேசு கூறிய நல்ல சமாரியர்களாகச் செயல்படுவதில், மகிழ்ச்சி காண்கிறார்கள். பொதுவாக மகிழ்ச்சியாக வாழ்கின்றவர்கள், மக்களை அன்புகூர்கிறார்கள், பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள், மனிதநேயத்திற்கு உண்மையான இலக்கணம் வகுத்துத் தருகிறார்கள். பிரதிபலன் நோக்காத அன்புச் செயல்கள் அதிசயங்களை நிகழ்த்துகின்றன.

26 July 2021, 14:05