தேடுதல்

சிங்கமும் நரியும் சிங்கமும் நரியும் 

வாரம் ஓர் அலசல்: மனிதரின் எதிரிகள் யார்?

கடவுள் மனிதருக்கு எதிரிகளை மட்டும் படைக்கவே இல்லை. மனிதரே தங்களுக்கு எதிரிகளை உருவாக்கிக் கொள்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்  

பக்தன் ஒரு நாள், கடவுளிடம், ஏன் எங்களை பாரபட்சமாகப் படைத்திருக்கிறீர்கள் என்று கேட்டான். கடவுளும் அது என்ன பாரபட்சம் என்று கேட்டார். அதற்கு பக்தன், மாட்டை படைத்த நீங்கள், அதற்கு அழகாக இரு கொம்புகளை வைத்திருக்கிறீர்கள், மனிதர்களாகிய எங்களுக்கு அப்படி ஒன்றும் இல்லையே என்று கேட்டான். அதற்கு கடவுள், மாட்டை படைத்த நான்தான், அதை அடித்துக்கொன்று சாப்பிடும் சிங்கத்தையும் புலியையும் படைத்திருக்கிறேன். எனவே மாட்டிற்குத் தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்வதற்கு ஓர் ஆயுதம் தேவை இல்லையா, அதனால்தான் அதற்கு கொம்பைப் படைத்திருக்கிறேன். மாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா மிருகங்களுக்கும், எதிரிகளை நானே படைத்திருப்பதால், அவைகளின் தற்காப்புக்கு, கொம்பு, முள், கொடுக்கு, கூரிய பற்கள் போன்று, ஒவ்வொரு விதமான பாதுகாப்புக் கவசங்களையும் நானே படைத்திருக்கிறேன். ஆனால் பக்தா, மனிதர்களாகிய உங்களுக்கு நான் எந்த பாதுகாப்பு கவசத்தையும் படைக்கவில்லை, காரணம், மனிதர், தங்களின் எதிரிகளை தாங்களே உருவாக்கிக்கொள்கின்றனர், ஆனால், மனிதர் அனைவரும் மகிழ்வாக வாழவேண்டுமென்பதே எனது விருப்பம், அதனால் மனிதருக்கு எதிராக எந்த எதிரியையும் நான் படைக்கவில்லை என்றார் கடவுள். இது, லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய கதைகளில் ஒன்று. திருவாளர் அருள் பிரகாசம் அவர்கள், சின்ன சின்ன வெளிச்சங்கள் என்ற நிகழ்ச்சியில், இந்தக் கதைக்கு, தன் பாணியில் விளக்கம் கூறியிருக்கிறார். மனிதர்கள், பேராசை, பொறாமை, கவலை, வெஞ்சினம், காழ்ப்புணர்வு, பழிவாங்குதல், வெறுப்பு போன்ற எதிர்மறைக் குணங்களால், தங்களின் எதிரிகளை, தாங்களே உருவாக்கிக்கொள்கின்றனர். எனவே கடவுள், மனிதருக்கு எதிரிகளை உருவாக்கவில்லை. ஆனால் மனிதரோ, விலங்குகளையெல்லாம், ஏன் கடவுளின் படைப்பையே அடிமைப்படுத்திவிட்டோம் என, மமதையுடன் உள்ளனர். அந்த நினைப்பால் உருவாகியுள்ள பேரழிவையும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். கடவுள் விலங்குகளைப் படைக்கும்போதே மனிதருக்கு அடிமையாகும் தன்மையோடு படைத்தாராம். இதற்கு விலங்கியல் ஆய்வாளர்கள் கூறியுள்ள, இரண்டு எடுத்துக்காட்டுக்கள் பற்றி, அருள்பிரகாசம் அவர்கள் கூறியிருக்கிறார்.

குதிரை, நாய்

பொதுவாக, குதிரை  மற்றொரு குதிரையோடு பேசும்போது தன் காதின் வழியாகத்தான் பேசுமாம். குதிரை ஏழு விதமாக தன் காதை அசைக்குமாம். அதன் ஒவ்வொரு அசைவுக்கும் ஓர் அர்த்தம் உண்டாம். அந்த அசைவை மற்றொரு குதிரைதான் புரிந்துகொள்ளுமாம். குதிரை தன் காதுகளை கீழ்நோக்கி வைத்திருந்தால், அதனிடமிருந்து எந்த ஒரு வேலையையும் வாங்க முடியாதாம். அதேபோல், அந்தக் குதிரை காதை நேரே நிமிர்த்தி இருந்தால், அது கோபமாக, வெறித்தனமாக இருக்கின்றது என்று அர்த்தமாம். எனவே நேராக இருக்கும் மனிதரின் காதைப் பார்த்த குதிரை, மனிதர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள், தங்களின் விருப்பப்படி இயக்குவதற்கு அனுமதிக்கிறது. எனவே மனிதர் குதிரையை அடிமையாக்கவில்லை. ஆனால் அடிமையாக ஆக்கிக்கொள்கின்ற குணம் ஏற்கனவே குதிரையிடம் இருக்கிறது. அதேபோல், தொடக்க காலங்களில் மனிதர் வேட்டையாடச் சென்றபோது, விலங்குகள் இருக்கும் இடங்களை மோப்பம் பிடித்துச் சொல்வதற்கு, மனிதர் நாயை, தன்கூடவே அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்களும், வேட்டையாடிய விலங்குகளைச் சமைத்துச் சாப்பிட்டபின் மீதமுள்ள எலும்புகளை நாய்க்குப் போட்டனர். அப்படித்தான் இன்றும் எலும்புகளை நாய்களுக்குப் போடும் பழக்கம் வந்ததாம். எனவே நாய் மனிதருக்கு அடிமையாகும் இயல்பை ஏற்கனவே கடவுள் படைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எனவே கடவுள் மனிதருக்குத் தேவையான எல்லாவற்றையும் ஏற்கனவே படைத்து வைத்திருக்கிறார். ஆனால் அவர் மனிதருக்கு எதிரிகளை மட்டும் படைக்கவே இல்லை. மனிதரே, தங்களுக்கு எதிரிகளை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆதலால் நண்பரையோ, அல்லது, எதிரியையோ உருவாக்கிக்கொள்வதும், நண்பரை எதிரியாக்குவதும், எதிரியை நண்பராக்கிக்கொள்வதும் அவரவர் கையில்தான் இருக்கிறது என்றும், அருள்பிரகாசம் அவர்கள் கூறியிருக்கிறார்.   

பாம்பும், கூரிய இரம்பமும்

ஒரு சமயம் பாம்பு ஒன்று தச்சுவேலைகள் நடக்கும் இடத்தில் நுழைந்து உள்ளே இருந்த பொருள்களின் மீது ஊர்ந்து நகர்ந்தபோது, ஒரு கூரிய இரம்பத்தின் பற்கள் அதன் மீது பட்டு காயம் உண்டானது. இதனால் கடுங்கோபமும் எரிச்சலும் கொண்ட பாம்பு, அந்த கூரான இரம்பத்தைக் கடித்தது. உடனே அதன் வாயிலிருந்து இரத்தம் வெளிவரத் தொடங்கியது. பாம்புக்கு எரிச்சலும் கோபமும் அதிகமானது. அதனால் அந்த இரம்பத்தைச் சுற்றி வளைத்து நொறுக்கத் தொடங்கியது. இதனால் வலி அதிகமாகி, அதன் வாயிலிருந்து இரத்தம் அதிகமாக வெளிவர வர, அது, தன் சக்தி முழுவதையும் சேர்த்து, அந்த இரம்பத்தின் மீது வேக வேகமாகப் புரண்டது. தனக்கு என்ன நடக்கிறது, தான் என்ன செய்கிறோம் என்று சிந்திக்கவோ, நிதானிக்கவோ முடியாமல், கோப வெறியில், தொடர்ந்து அந்த இரம்பத்தை இறுக்கிக்கொண்டே இருந்தது. இறுதியில் பாம்பின் உடல் இரு துண்டானது. அதன் உயிரும் பிரிந்தது.  பாம்புபோலத்தான் நாமும்கூட பல நேரங்களில், கோபத்தில் நிதானமிழந்து, எதிர்விளைவுகள் பற்றிய சிந்தனைக்கு சிறிதும் இடம்கொடாமல், புண்படுத்தும் சொற்களை அள்ளிவீசுகிறோம், மற்றும், செயல்படுகிறோம். இதனால் மனப்பதட்டம், மனஅழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றில் சிக்கிக்கொள்கிறோம். கடைசியில் உடல்நலம் கெட்டு, உறவுகளையும், ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே சீரழித்துக்கொள்கிறோம். ஆனால் தானத்தில் சிறந்த தானம், நிதானம் என்பதை மட்டும் நாம் ஒருபோதும் மறத்தலாகாது.

மனிதரின் எதிரிகள்

நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் மற்றொரு எதிரி கவலை. இன்றைய நாளில் கவலைப்பட ஒன்றுமே இல்லை என்பதே, சிலருக்கு, கவலையாகி விடுகிறது. குடிப்பழக்கம், போதைப்பொருள் போன்றவற்றுக்கு அடிமையாகிவிடும் தீய பழக்கம் போன்று, கவலைப்படுவதற்கும் சிலர் அடிமையாகி விடுகின்றனர். கவலைப்படுவது, ஒரு நோயாகவே மாறி வருகிறது என்று சொல்லப்படுகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு, ஆசிரியரின் அன்பு கிடைக்குமா, தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்குமா என்ற கவலை. இளையோருக்கு, வருங்காலம் குறித்த கவலை.  திருமணமான தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிடைக்குமா என்ற கவலை... வயதுமுதிர்ந்தோருக்கு பிள்ளைகளின் பாசம் கிடைக்குமா என்ற கவலை.. இப்படி ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு விதமான கவலைகள். இந்த கொரோனா பெருந்தொற்றின் டெல்டா நுண்கிருமி வகை, மூன்றாவது அலையாக, 98 நாடுகளில் பரவியிருப்பதாக வெளியிடப்படும் செய்திகளும், நம்மை அச்சத்திலும் கவலையிலும் உட்படுத்தியுள்ளன.

அண்மை ஆய்வறிக்கையின்படி, உலகில் எண்பது விழுக்காட்டு மக்கள் ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி, தங்களுக்கே தெரியாமல் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்களாம். நமது மூளையும், நம்மிடமுள்ள ஒரு பழக்கத்தை நோக்கியேதான் வேலைசெய்யுமாம். எனவே நமது மூளையைப் பழக்கிப்படுவதுகொள்வது நமது கையில்தான் உள்ளது. கவலை என்ற இந்த எதிரியை முறியடிப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? கவலை வரும்போது நமது வாழ்க்கையில் நடந்த நல்ல காரியங்களை நினைவுக்குக் கொண்டு வரலாம். தினமும் நாம் காலையில் உயிரோடு எழுந்திருப்பது,  உடுத்திக்கொள்ள ஆடைகள் இருப்பது, காலுக்கு காலணிகள் இருப்பது, உணவு கிடைப்பது... இவையெல்லாமே நல்ல காரியங்கள்தான். இவ்வாறு சிறிய சிறிய காரியங்களை நினைத்து நன்றிசொல்லி, அவற்றில் மகிழ்வைக் காணத் தொடங்கும்போது நமது மூளையின் போக்கை நம்மால் மாற்ற முடியும். தேவையில்லாமல் வாழ்க்கையை வீணாக்கும், கவலை என்ற தீய எதிரியையும் நம்மிடமிருந்து அகற்றமுடியும். எதுவும் நம் கையில் இல்லை, நம்மைக் கடந்த ஓர் இறைசக்தியே நம்மை வழிநடத்துகிறது என்பதை, இந்த கோவிட் -19 பெருந்தொற்று மிக நன்றாகவே உணர்த்தி வருகிறது. ஆனால் இன்றைக்கு நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடி மட்டுமே நம் கையில் இருக்கின்றது. அதைப் பயன்படுத்தி கவலைகளை நீக்கி வாழப் பழகிக்கொள்வோம். கவலைப்படும்படியாக நிகழ்வுகள் நடக்கையில் அதை அகற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்வோம். நடந்தது எல்லாம் நன்மைக்கே, நடப்பது எல்லாம் நன்மைக்கே, நடக்கப்போவதும் நன்மைக்கே என்ற நல்லெண்ணத்தோடு வாழக் கற்றுக்கொள்வோம்.

நடப்பதும் எல்லாம் நன்மைக்கே

காட்டு அரசன் சிங்கம் பற்றிய கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறோம். சிங்கம், வேட்டையாடச் சென்றபோது, கால் விரலில் அடிபட்டு, விரல் துண்டானது. அந்த காட்டிலுள்ள மிருகங்கள் எல்லாம், ஒவ்வொன்றாக வந்து சிங்கத்திற்கு ஆறுதல் கூறின. அவ்வாறு வந்த குள்ளநரி ஒன்று, சிங்கத்திடம், ஊம்... நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. அதைக் கேட்ட சிங்கம், கோபம்கொண்டு, அந்த குள்ளநரியை குகைச்சிறையில் அடைக்குமாறு கட்டளையிட்டது. பின்னர், சில மாதங்கள் சென்று, நொண்டி நொண்டி நடந்த அந்த சிங்கம், ஒரு கூண்டில் மாட்டிக்கொண்டது. அச்சமயத்தில் காட்டிற்கு வேட்டையாடவந்த அரசரின் பணியாள்கள், நம் இளவரசர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது என்று, அந்த சிங்கத்தை, கூண்டோடுத் தூக்கிச் சென்றனர். ஆனால் அங்குச் சென்று, அதனைக் கூண்டிலிருந்து இறக்கியபோதுதான் அது நொண்டி என்பதை அறிந்தனர். அதனால், அரசரின் பணியாள்கள் அந்தச் சிங்கத்தை மீண்டும் காட்டில் விட்டுவிட்டனர். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்பதற்கு எடுத்துக்காட்டாக, பல நிகழ்வுகள், கதைகள் சொல்லப்படுகின்றன. எனவே, இந்த உண்மையை உணர்ந்து, நாமே உருவாக்கிக்கொள்ளும் எதிரிகளிடமிருந்து நம்மை மீட்டெடுப்போம். உரோம் நகரில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விரைவில் பூரண நலம்பெற இறைவனை மன்றாடுவோம்.   

05 July 2021, 13:29