தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் கைதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் கைதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் 

நீதித்துறையின் மனசாட்சியை உலுக்கிய ஒரு நிகழ்வு

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம், மக்களாட்சியின் கழுத்தை நெரிக்கும் அரசின் சட்டங்களை நீக்கவும், குடியரசைக் காக்கவும் வேண்டிய முயற்சிகளில் ஈடுபட நம்மை அழைக்கிறது – 108 சமுதாய நல அமைப்புக்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம், இந்திய நாட்டின், குறிப்பாக, நீதித்துறையின் மனசாட்சியை உலுக்கி எடுத்த ஒரு நிகழ்வு என்றும், உலகின் பார்வையில், இந்திய நீதித்துறையின் மதிப்பை, பெருமளவு தாழ்த்தியுள்ள ஒரு நிகழ்வு என்றும், இந்தியாவில் பணியாற்றும் 100க்கும் மேலான சமுதாய நல அமைப்புக்கள் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

ஜூலை 5ம் தேதி, இந்திய அரசு, மற்றும், நீதித்துறையினரால் அதிகாரப்பூர்வமாகக் கொல்லப்பட்ட 84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம், மக்களாட்சியின் கழுத்தை நெரிக்கும் அரசின் சட்டங்களை நீக்கவும், குடியரசைக் காக்கவும் வேண்டிய முயற்சிகளில் ஈடுபட நம்மை அழைக்கிறது என்று, இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடிமக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவும், அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் பெற்றுள்ள அடிப்படை உரிமைகள், படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருவதையும், குற்றங்களைக் குறைப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள நீதித்துறை, ஆயுதம் தாங்கி அச்சுறுத்தும் ஒரு கும்பலாக மாறிவருவதையும், கடந்த பத்தாண்டுகளில், அதிகம் காணமுடிகிறது என்று இவ்வறிக்கை கூறுகிறது.

‘சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள UAPA என்ற அடக்குமுறை சட்டத்தின் கீழ், 2015ம் ஆண்டுக்கும் 2019ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 7050 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறும் இவ்வறிக்கை, இவர்களில் 2.2 விழுக்காட்டினர் மட்டுமே குற்றவாளிகள் என்பது இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று, 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் ஏதுமின்றி குற்றவாளியென பழிசுமத்தப்பட்டு, கொல்லப்பட்ட அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், குற்றமற்றவர் என்பதை நிலைநாட்டவும், அரசின் சார்பாகவும், நீதித்துறையின் சார்பாகவும் நிகழும், அநீதியான அடக்குமுறைகள் நீக்கப்படவும், ஜூலை 23, இவ்வெள்ளியன்று நாடெங்கும் பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள, 108 சமுதாய நீதி அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர நாள் துவங்கி, ஆகஸ்ட் 28ம் தேதி முடிய நாடெங்கும் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு நாள்களில், தொடர்ச்சியாக, உண்ணா நோன்பு, மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதற்கும் இவ்வமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பீமா கொரேகான் என்ற இடத்தில் வன்முறையைத் தூண்டினர் என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டு இன்றளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள், மருத்துவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர் தலைவர்கள் ஆகியோரில், 5 பேர், மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆகஸ்ட் 28ம் தேதி, கைது செய்யப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, அவர்கள் கைது செய்யப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் முறையில், நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜார்கண்ட் பழங்குடியினரின் தலைமைச் சங்கம், ஸ்டெர்லைட்க்கு எதிரான மக்கள் இயக்கம், பெங்களூரு இந்திய சமுதாய நிறுவனம், தமிழ்நாடு சமுதாய கண்காணிப்பு, அரசின் அடக்குமுறை மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் இயக்கம், ஆகிய அமைப்புக்கள் உட்பட, 108 சமுதாய நல அமைப்புக்கள் இணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளன.

22 July 2021, 14:25