தேடுதல்

Vatican News
உரோம் உலகளாவிய இயேசு சபை தலைமையகத்திற்கு முன்பாக ஆர்வலர்கள் உரோம் உலகளாவிய இயேசு சபை தலைமையகத்திற்கு முன்பாக ஆர்வலர்கள்  (Society of Jesus)

அருள்பணி ஸ்டானின் மரணம், மனித உரிமைகள் பதிவில் அழியாத கறை

போதிய சட்டமுறைப்படியான ஆதாரமின்றி சிறையிலுள்ள அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் விடுதலைசெய்யப்படவேண்டும் என்பதையே, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களது மரணம் நினைவுபடுத்துகின்றது - Mary Lawlor

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவரும், புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும், நாற்பது ஆண்டுகளுக்குமேல் நீதியை ஊக்குவித்தவருமான, இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர், தடுப்புக்காவலில் இறந்தது, இந்தியாவின் மனித உரிமைகள் பதிவேட்டில், என்றென்றும் ஓர் அழியாத கறையாக இருக்கும் என்று, ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

உடல்நலன் மற்றும், கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்புக்கு, மும்பை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தவேளையில், இம்மாதம் 5ம் தேதி மரணமடைந்த, 84 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார், மற்றும், தொடர்ந்து கேள்விகளால் நச்சரிக்கப்பட்டார் என்று, ஐ.நா. அதிகாரி Mary Lawlor அவர்கள் கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் அவர்களது உடல் நிலை, சிறையில் மோசமாகி வருவதைக் குறிப்பிட்டு, அவர் விடுதலைசெய்யப்படவேண்டும் என்று, பல விண்ணப்பங்கள் விடுக்கப்பட்டதையும் தவிர்த்து, அவர் தடுப்புக்காவலில் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்டு நான் நிலைகுலைந்தேன் என்று, Lawlor அவர்கள், ஜூலை 15, இவ்வியாழனன்று வெளியிட்ட தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஐ.நா.வால் 2020ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி Lawlor அவர்கள், இந்திய அதிகாரிகள், உலகளாவிய மனித உரிமைகள் சட்டத்தை மதிப்பதற்கு கடமைப்பட்டுள்ளனர் என்பதை ஐ.நா. அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், அவர்களோடு தானும் இணைந்து குரல்கொடுத்ததாக தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் ஏன் விடுதலைசெய்யப்படவில்லை, ஏன் அவர் தடுப்புக்காவலில் இறக்கவேண்டும்? என்ற கேள்விகளை, தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாகவும், Mary Lawlor அவர்கள் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலம் அல்லது பழங்குடியின மக்களின் உரிமைகள் போன்றவற்றுக்காக உழைப்பவர்கள், அதிகம் தாக்கப்படும் நிலையை எதிர்கொள்கின்றனர் என்பதையும், போதிய சட்டமுறைப்படியான ஆதாரமின்றி சிறையிலுள்ள அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் விடுதலைசெய்யப்படவேண்டும் என்பதையுமே, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களது மரணம் நினைவுபடுத்துகின்றது என்றும், Mary Lawlor அவர்கள் கூறியுள்ளார். (UN)

16 July 2021, 15:57