தேடுதல்

Vatican News
மியான்மாரில் எதிர்ப்புப் போராட்டங்கள் மியான்மாரில் எதிர்ப்புப் போராட்டங்கள்   (AFP or licensors)

மியான்மாரில் தேசிய ஒன்றிப்பு அரசு உருவாக்கப்படவேண்டும்

"உலகளாவிய மியான்மார் வசந்தகால புரட்சி" என்ற தலைப்பில், இப்பூமிக்கோளத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற மியான்மார் குடிமக்கள், தங்கள் நாட்டில் சனநாயகம் நிலவ வலியுறுத்திவருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் தேசிய ஒன்றிப்பு அரசு அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிநாடுகளில் வாழ்கின்ற மியான்மார் குடிமக்கள், ஜூலை 17, இச்சனி, 18, இஞ்ஞாயிறு ஆகிய இரு நாள்களில், பல்வேறு இடங்களில், பேரணிகளை நடத்துகின்றனர்.

மியான்மார் நாட்டிற்காக, நியாயமான காரியங்களில் ஈடுபட்டு இறந்தவர்கள், தற்போது மக்களாட்சிக்காகப் போராடுகையில் இறந்தவர்கள் ஆகிய அனைவரும், இப்பேரணிகளில் நினைவுகூரப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகின்றனர்.

"உலகளாவிய மியான்மார் வசந்தகால புரட்சி" என்ற தலைப்பில், இப்பூமிக்கோளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வு பற்றி பீதேஸ் செய்தியிடம் பேசிய, இத்தாலியிலுள்ள மியான்மார் குழுமத்தின் தலைவர்களில் ஒருவரான, Thuzar Lin அவர்கள், 1947ம் ஆண்டில் கொல்லப்பட்ட, அதிபர் ஆங் சான் தொடங்கி, இந்நாள்களில்  அந்நாட்டின் அனைத்து இனங்களின் வீரமக்களையும் நினைத்து செபித்து மரியாதை செய்தோம் என்று தெரிவித்தார்.

இவ்விரு நாள்களின் நிகழ்வுகளில், மியான்மார் நாட்டிற்காக, மறைசாட்சிகளாக இறந்தவர்களையும் நினைவுகூர்கின்றோம் என்றும், லின் அவர்கள் கூறினார்.

மியான்மாரின் சனநாயக கட்சித் தலைவரான ஆங் சான் சூச்சி அவர்களின் தந்தையான ஆங் சான் அவர்கள், 1947ம் ஆண்டில், விடுதலை இயக்கத்தின் வெற்றிக்குப்பின் கொல்லப்பட்டார்.

இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியன்று மியான்மார் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, அந்நாட்டில் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து, இடம்பெற்று வருகின்றன. (Fides)

17 July 2021, 14:58