தேடுதல்

திருநங்கை நர்த்தகி நடராஜ்  திருநங்கை நர்த்தகி நடராஜ்  

வாரம் ஓர் அலசல்: தனக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் வாழ...

பரதக் கலையில் சாதனை படைத்துவரும் நர்த்தகி நடராஜ் அவர்கள், வேதனைகளை விருதுகளாக மாற்றியிருப்பவர்

மேரி தெரேசா: வத்திக்கான் 

நர்த்தகி நடராஜ் அவர்கள் பற்றிய தகவல்களை வாசித்திருக்கிறோம். 2019ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது, 2016ம் ஆண்டில் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கவுரவ முனைவர் பட்டம், தமிழக அரசின் கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற முதல் திருநங்கை இவர். பரதநாட்டிய கலைஞராகிய நர்த்தகி நடராஜ் அவர்கள், இவ்விருதுகள் தவிர, பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராகவும் இவர் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இவரின் வாழ்க்கை, பாடமாக உள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, பரத நாட்டிய கலைக்கு தனது வாழ்வை அர்ப்பணித்துள்ள இவர், தமிழ்நாட்டில் திருநங்கை என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர், மற்றும், கடவுச் சீட்டு பெற்ற முதல் திருநங்கை ஆவார். வெள்ளியம்பலம் என்ற தனது நடனப் பள்ளியை, வெள்ளியம்பலம் அறக்கட்டளையாக மாற்றி, தன்னைப் போன்ற பல திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றி வருகிறார்.

நர்த்தகி நடராஜ்

பரதக் கலையில் சாதனை படைத்துவரும் நர்த்தகி நடராஜ் அவர்கள், வேதனைகளை விருதுகளாக மாற்றியிருப்பவர். சாதித்தே ஆக வேண்டுமென்ற இலக்கில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பவர். நர்த்தகி நடராஜ் அவர்கள், மதுரை அனுப்பானடி பகுதியில் நல்ல வசதியும், அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர். ஆண் குழந்தையாகப் பிறந்த இவருக்கு, இவரது பெற்றோர், நடராஜ் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தனர். இவருக்கு ஐந்து, அல்லது ஆறு வயது நடந்தபோதே, தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். இவர் அனுப்பானடியில் உள்ள தியாகராசர் பள்ளியில் மிகச் சிறந்த மாணவராக விளங்கினாலும், உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தன. இதனால், வீட்டிலும் வெளியிலுமாகத் தங்கியிருந்தபடி, 12ம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்ரமித்தது. இவரும், இவரைப் போலவே உணர்ந்த இவரது நண்பர் பாஸ்கரும் (இப்போது சக்தி) நடனக் கலையில் ஈர்ப்புகொண்டனர். நர்த்தகி நடராஜ் அவர்கள், தான் கடந்துவந்த பாதை பற்றி, ஊடகங்களிடம் இவ்வாறு விவரித்திருக்கிறார்.

நான் சிறு வயதிலேயே என்னில் பெண்மையை உணர்ந்தேன். இதனால் பள்ளிப் பருவத்தில் பல்வேறு கேலிக் கிண்டல்களுக்கு ஆளானேன். எப்போது நான் என் பெண்மையை உணர்ந்தேனோ, அப்போதே என்னில் நடனம் இருந்தது. நடனத்தை நான் தேர்வுசெய்தேன் என்பதைவிட, நடனம்தான் என்னைத் தேர்வுசெய்தது என்று சொல்லலாம். ஆணாகப் பிறந்த நான், பெண்ணாக உணர்ந்த அந்தத் தருணத்தில், எனது பெண்மையை வெளிப்படுத்த அது உகந்த கலையாக இருந்தது. ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியதால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடக்க, இது வாகனமாக இருந்தது. திரைப்படங்கள்தான் எனது முதல் நடனக் குருவாக இருந்தன. அதில் நாயகிகள் ஆடிய நடனங்களைப் பார்த்தே, நடனத்தையும் அவர்கள் பேசிய வசனங்களையும் கேட்டு மொழியையும் செம்மைப்படுத்திக் கொண்டேன். அதற்குப் பிறகு, கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து ஆடிவந்தேன். ஆனால், முறைப்படி நடனம் கற்க வேண்டுமென்ற ஆசைமட்டும் தீரவில்லை. அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர் பாணி பரதக்கலையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பி.கிட்டப்பா பிள்ளை அவர்களிடம், நானும் பாஸ்கரும், 1984ம் ஆண்டில், 17வது வயதில் சரணடைந்து, தொடர்ச்சியாக 15 வருடங்கள் அவருடனேயே இருந்து, நடனம் கற்றோம். கிட்டப்பா பிள்ளைதான், எனக்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவர். அவரிடம் நடனம் கற்பதற்கே ஒரு வருடம் போராட வேண்டியிருந்தது. எனக்கு குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு போன்ற எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால், வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை மட்டுமே என்னை நடத்திச்சென்றது. எந்தத் தருணத்திலும் திருநங்கைகள் என்பதைச் சொல்லி வாய்ப்புகளைப் பெறக்கூடாது என்பதில், நானும் எனது நண்பரும் உறுதியாக இருந்தோம். ஆகவே வெறித்தனமாக உழைத்தோம். வெற்றிகள் மிகத் தாமதமாகக் கிடைத்தாலும், அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகள் நல்ல நம்பிக்கையைக் கொடுத்தன. என் திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை, ஒரு திருநங்கை என்பதால் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லும் போக்கு வலிக்கிறது. பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோதுகூட, ஒரு திருநங்கைக்கு பத்மஸ்ரீ என்றுதான் குறிப்பிட்டார்கள். இவ்வாறு ஊடகங்களிடம் கூறியுள்ள நர்த்தகி நடராஜ் அவர்கள், உலகம் தனக்காக படைக்கப்பட்டது என உணர்ந்ததாகச் சொல்கிறார். தன்னைப் போன்ற பலரை வாழவைக்க உழைத்து வருகிறார்.

ஆச்சரியங்கள்

பட்டிமன்ற பேச்சாளரான திருவாளர் அருள் பிரகாசம் அவர்கள், “இந்த நாளில் சின்னச் சின்ன வெளிச்சங்கள்” என்ற நிகழ்ச்சித் தொடரில் ஒருநாள், சில ஆச்சரியமான தகவல்கள் பற்றிக் கூறினார். கரப்பான் பூச்சி தலையே இல்லாமல் ஏழு நாள் உயிர் வாழுமாம். வண்ணத்துப்பூச்சி தன் கால்களாலேயே தன் ருசியை அறியுமாம். நத்தை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தூங்கிக்கொண்டே இருக்குமாம். நம் உடம்பிலுள்ள தசையிலே கடினமான தசை நாக்கின் தசை. புல்லைவிட வேகமாக வளரக்கூடியது கவலை. இதைவிட உலகத்திலேயே ஆச்சரியமான விடயம் வேறு ஒன்று இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது என, அருள் பிரகாசம் அவர்கள் கூறினார்.  தினமும் சகமனிதர் இறப்பதை மற்ற மனிதர்கள் பார்க்கின்றனர். இந்த இறப்புகள், இந்த உலகம் நிலையில்லாதது, இந்த வாழ்க்கை நிரந்தரமற்றது என்பதையும் உணர்த்துகின்றன. இது தெரிந்தும், உயிரோடு இருக்கும் மனிதர், ஏதோ ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதுபோன்று, இத்தனை ஆட்டம் போடுகிறார்களே அதுதான் ஆச்சரியமான விடயம். இந்த உலகத்தில் எத்தனையோ ஆச்சரியங்கள் இருந்தாலும், இந்த வாழ்க்கை நிரந்தரமற்றது என்பது தெரிந்தும் மனிதர் அந்த உணர்வின்றி வாழ்வதுதான் ஆச்சரியம் என்று இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உலக இரத்த தானம்

ஜூன் 14, இத்திங்கள் உலக இரத்த தானம் வழங்குவோரின் நாள். “இரத்தத்தைக் கொடுங்கள், உலகத்தைத் தொடர்ந்து துடிக்க வையுங்கள்” என்ற தலைப்பில் இத்திங்களன்று, இரத்த தான உலக நாள் சிறப்பிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஜூன் 13, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், உலக இரத்த தானம் வழங்குவோரின் நாளைக் குறிப்பிட்டார். மனத்தாராளத்தோடு இரத்தம் தானம் செய்வோருக்கு, திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்ததோடு, இரத்த தானம் செய்யவும் அனைவரையும் ஊக்கப்படுத்தினார். முன்பெல்லாம் இரத்தம் மட்டுமே தானமாக வழங்கிய காலம் போய், இப்போது, பிளாஸ்மா மற்றும், ஹீமோகுளோபின் போன்ற இரத்தத்தின் கூறுகளும் பிரித்தெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. இதனால் இரத்த தான முறைகளே புதுமையடைந்துள்ளன. ஒரு யூனிட் ரத்தம் தானம் செய்தால், நம் உடலிலுள்ள, தேவையற்ற கலோரிகள் குறைவதாகக் கூறப்படுகிறது. எனவே இரத்த தானம் செய்வதால் நம் உடலுக்கும் நன்மைகள் கிடைக்கின்றன. கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், பலர் இரத்தம் தானம் மற்றும், பிலாஸ்மா தானம் செய்து பலரின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர். அதேநேரம், இந்த வாழ்க்கையும், உயிரும், பதவியும், பட்டமும், செல்வமும், வறுமையும் நிரந்தரமற்றவை என்பதையும் பெருந்தொற்று நினைவுபடுத்தி வருகின்றது. ஆயினும், ஒவ்வொரு நாளும் நாம் வாழ்வதற்கு கடவுள் அருள்பொழிந்து வருகிறார். எனவே கடவுளின் அருளால் வாழ்ந்துவரும் நாம், மற்றவருக்குப் பயனுள்ள முறையில் வாழவேண்டுமென்றே எதிர்பார்க்கப்படுகிறோம்.

பிறருக்காக வாழ்தல்

ஒரே ஊரைச் சேர்ந்த இரு இளைஞர்கள், துறவி ஒருவரது ஆசிரமத்தில் ஐந்து ஆண்டுகள் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். ஒரு நாள் அவ்விருவரும், “நாம் இருவரும் இங்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகின்றனவே! பயிற்சிகள் எல்லாம் முடிந்துவிட்டனவா...! இது குறித்து நமது குரு எதுவும் சொல்லமாட்டேன் என்கிறாரே!” என்று தங்களுக்கிடையே பேசிக்கொண்டனர். இது பற்றிக் கேள்விப்பட்ட துறவியும், அவர்களிடம், “உங்களுடைய பயிற்சிக் காலம் முடிந்துவிட்டது. நீங்கள் இங்கிருந்து போகலாம்” என்றார். உடனே அவர்களும் ஊருக்குப் புறப்பட்டனர். அந்த ஊருக்குச் செல்லும் பாதையோ ஒற்றையடிப் பாதை. அதனால் இருவரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அந்த துறவியும், இவர்களுக்குத் தெரியாமலே, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். போகும் வழியில், பாதையில் முட்செடிகள் கிடந்தன. இதைப் பார்த்ததும், முதலில் சென்ற இளைஞன், பின்னோக்கி வந்து, அந்தப் பாதையைவிட்டு சற்று விலகிச் சென்றான். இரண்டாவதாகச் சென்ற இளைஞனோ, பாதையில் கிடந்த முட்செடிகளை அகற்றிவிட்டு, அதே பாதையில் நடந்து சென்றான். அவன் இவ்வாறு செய்யும்பொழுது, அவனுடைய உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதை பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த துறவி, இரண்டாவது இளைஞனிடம், “உன்னுடைய பயிற்சிக் காலம் முடிந்துவிட்டது, நீ வீட்டிற்குப் போகலாம்” என்றார். பின்னர் முதலாவதாகச் சென்ற இளைஞனிடம், “உனக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகின்றது. அதனால் நீ என்னோடு வா!” என்றார். இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப்போன முதலாவது இளைஞன், எனக்கு ஏன் பயிற்சி தேவைப்படுகின்றது. நான் பாதையில் கிடந்த முட்செடிகளின்மீது விழுந்துவிடாமல், நன்றாகத்தானே தாவினேன்” என்றான். அதற்குத் துறவி அவனிடம், நீ உன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டாய்; ஆனால், அவனோ தனக்குப் பின்னால் வருபவரைப் பற்றியும் கவலைப்பட்டான். பிறரைப் பற்றிக் கவலைப்பட்ட அவனுக்குப் பயிற்சி தேவையில்லை. உன்னைப்பற்றி மட்டுமே கவலைப்பட்ட உனக்குப் பயிற்சி தேவைப்படுகின்றது என்றார். ஆம், நாம் அனைவரும் நமக்காக மட்டுமல்லாமல், பிறருக்காகவும் வாழவேண்டும். இந்த பெருந்தொற்று காலத்தில் இந்த உணர்வு அதிகமாகத் தேவைப்படுகிறது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2021, 15:42