தேடுதல்

Vatican News
அப்துல் கலாம் அவர்களின் சிலை வடிக்கப்படுகிறது அப்துல் கலாம் அவர்களின் சிலை வடிக்கப்படுகிறது  

வாரம் ஓர் அலசல்: வாழ்க்கை உயர ஓர் எண்ணம், ஒரு செயல்

உலகமே ஒரு போர்க்களம், அதில் நம் வாழ்க்கை ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் வெற்றிபெறுவதற்கு சரியான ஆயுதம், போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற, நம் நம்பிக்கை - நெப்போலியன்

மேரி தெரேசா: வத்திக்கான் 

படிக்க வாய்ப்பில்லாத இளைஞன் ஒருவன், ஏதாவது ஒரு வேலை செய்து பிழைப்பு நடத்த விரும்பினான். அதனால், ஒரு பெரிய முட்டைக் கடை முதலாளியிடம் வேலைக்குச் சேர்ந்தான். அவன் ஒவ்வொரு நாளும் முட்டைகளை கூடைகளில் அடுக்கி, அவற்றை சைக்கிளில் வைத்துக்கட்டி, கடை கடையாய்ச் சென்று அவற்றை விற்றுவரும் வேலை அவனுக்குக் கிடைத்தது. இப்படி முதல் நாளில் பத்து கூடைகள் நிறைய ஆயிரம் முட்டைகளை அடுக்கி, அவற்றை சைக்கிளில் வைத்துக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஒரு திருப்பத்தில், வாகனம் ஒன்று, அவனது சைக்கிளை இடித்துவிட்டது. அதனால் அவன் வண்டியிலிருந்த ஆயிரம் முட்டைகளும் உடைந்து விட்டன. அய்யோ... என்று, அந்த இடத்திலேயே தலையில் கைவைத்தபடியே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான் அந்த இளைஞன். கனநேரத்தில் அந்த இளைஞனை வேடிக்கைப் பார்க்க, ஒரு கூட்டமே கூடிவிட்டது. இது நடந்து ஒரு ஐந்து நிமிடத்தில் அந்தப் பக்கமாய் வந்த ஒரு பெரியவர், அந்த இளைஞனின் தோள்மீது கைவைத்து, தம்பி. கவலைப்படாதே, வாழ்க்கையில், இப்படியெல்லாம் சிக்கல்கள் வருவது சாதாரணம் என்று தட்டிக்கொடுத்தார். பின்னர், அவர் தன் சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து, தம்பி, உனது கஷ்டத்தில் நானும் பங்குகொள்கிறேன் என்று, அதை அவனிடம் கொடுத்தார். அதைப் பார்த்த மற்றவர்களும், தங்கள் பைகளிலிருந்து பணத்தை எடுத்துக் அவனிடம் கொடுத்தனர். சிறிது நேரத்தில் 1,250 ரூபாய் சேர்ந்துவிட்டது. அந்த முட்டைகளின் விலையே ஆயிரம் ரூபாய்தான். கடைசியாக அந்தப் பக்கம் வந்த பெரியவர் ஒருவர், இந்தா 25 ரூபாய். இதுதான் என்னால் கொடுக்க முடிந்தது. ஆனால் தம்பி, நீ இப்போது இளைஞனாக இருக்கிறாய். வருங்காலத்தில், நீ ஒருவரை நன்றியோடு நினைக்க விரும்பினால், சற்றுமுன்னர் இந்தச் சூழலை உருவாக்கிக் கொடுத்து, உன்னைக் காப்பாற்றிய அந்த பெரியவரை மட்டும் மறந்துவிடாதே என்று கூறினார். அதற்கு அந்த இளைஞன், ஐயா, அவர்தான், எனது முதலாளி என்று பதில் சொன்னான். இந்த நிகழ்வை ஒரு கூட்டத்தில் பதிவுசெய்த புலவர் இராமலிங்கம் அவர்கள், எதிர்மறைச் சூழலை நேர்மறைச் சூழலாக அமைக்கின்ற முறை தெரிந்துவிட்டால், நாம் வாழ்க்கையில் ஜெயித்துக்கொண்டே இருக்கலாம் என்று முத்தாய்ப்பாக கூறினார். இதுதான் வாழும் கலை. கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் கடுமையான சூழல்களில், சமுதாய ஊடகங்கள் வழியாக, பலர் நம்பிக்கை விதைகளை விதைத்து வருகின்றனர்.

தொழிலதிபர் யூசுப் அலி

சூன் 03, கடந்த வியாழனன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் ஒருவர், எதிர்முகச் சூழலை நேர்முகச் சூழலாக மாற்றியுள்ள ஒரு செயலை ஊடகங்கள் பதிவுசெய்துள்ளன. யூசுப் அலி என்ற அந்த தொழிலதிபர், அபு தாபியில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும், 'லுாலு' என்ற பன்னாட்டு குழுமத்தின் (LuLu Group International :conglomerate company) தலைவராவார். 45 வயது நிரம்பிய பெக்ஸ் கிருஷ்ணன் என்ற இந்தியர் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த, 2012ம் ஆண்டில் ஒருநாள், காரில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த சிறார் மீது, அவரது கார் மோதியதில், ஆப்ரிக்க நாடான சூடானைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்துக்கு காரணமான கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரும், கிருஷ்ணனை மன்னிக்க மறுத்துவிட்டு, சூடானுக்குத் திரும்பிவிட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதிமன்றமும், கிருஷ்ணனுக்கு, மரண தண்டனை விதித்து, தீர்ப்பளித்தது. இதற்கிடையே, தொழிலதிபர் யூசுப் அலி அவர்கள், கிருஷ்ணனுக்கு உதவிசெய்ய விரும்பினார். அவர், உயிரிழந்த அச்சிறுவனின் குடும்பத்தைச் சந்தித்து பேசினார். இழப்பீடாக, அவர், அவர்களுக்கு ஏறத்தாழ ஒரு கோடி ரூபாயை (500,000 திர்ஹாம்) இழப்பீடாக வழங்கினார். இதையடுத்து கிருஷ்ணனுக்கு, அவர்கள் பொது மன்னிப்பு வழங்கினர். இந்நிலையில், அபு தாபியில், அல் வாட்பா சிறையில் இருந்த கிருஷ்ணன், சூன் 03, கடந்த வியாழனன்று விடுவிக்கப்பட்டார். பெக்ஸ் கிருஷ்ணன் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பேசும் போது இது எனக்கு ஒரு மறுபிறப்பு. எனது குடும்பத்தைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்வதற்குமுன், ஒரு முறை யூசுப் அலி அவர்களைப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை என்று கூறி உள்ளார்.

சிறுவனின் கால் குணமடைய உதவிய முஸ்லிம் பெரியவர்

ஒருசமயம் இந்துக் குடும்பம் ஒன்று, கோழிக்கோட்டிலிருந்து கரூரில் நடந்த புதுமனை புகுவிழா ஒன்றிற்குச் சென்றிருந்தது. ஆனால் அந்த விழா அன்று நடக்கவில்லை. காரணம், அன்று அந்த வீட்டில் கோழிக்கோடு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன், அந்த வீட்டில் சமையலறைக்குச் சென்று, எரிந்துகொண்டிருந்த நீளமான கரண்டியை தன் தொடை மீது வைத்துவிட்டான். அதனால் அவனது தொடை எரிந்துவிட்டது. அவனது காலை எடுத்துவிடவேண்டும் என்று பலரும் கூறினார்கள். அவனது பெற்றோரோ, சகுனம் சரியில்லை என்று வருந்தியதோடு, அவனின் அந்த ஒரு காலை வாழை இலையில் வைத்து கட்டி, அவனைத் தூக்கிகொண்டு கோழிக்கோட்டிற்கு இரயிலில் புறப்பட்டார்கள். ஒரு இரயில் நிலையத்தில் அந்தச் சிறுவனைப் பார்த்த, பெயர் தெரியாத முஸ்லிம் பெரியவர் ஒருவர், ஆட்டுப்பாலை துணியில் நனைத்து, இந்த வெந்த புண்ணின் மீது மூன்று நாள்களுக்குத் தடவினால், அவனது கால் முற்றிலும் குணமாகிவிடும் என்று சொன்னார். அந்த பெரியவர் கூறியதை, அந்த சிறுவனின் தந்தை நம்பவில்லை. ஆனால் தாயோ நம்பினார். ஊர் திரும்பியதும் அந்த புண்ணின் மீது ஆட்டுப்பாலை தடவினார்கள். புண் குணமாவது தெரிந்தவுடன் அவனின் தந்தையும் விடுமுறை போட்டுவிட்டு, தன் மகனுக்கு அதே மருத்துவத்தைச் செய்தார். சிறுவனின் காலும் அற்புதமாய்க் குணமானது.

அந்த சிறுவன், நான்தான் என்று, சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையேற்று நடத்திய சிறப்பு பட்டிமன்றம் ஒன்றில், உரையாற்றிய ஒருவர் தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்து வைத்து, தனது வாதத்தைத் தொடங்கினார். எனது குடும்பம் இந்து குடும்பம் என்ற மத வேற்றுமை பார்க்காமல், அந்த முஸ்லிம் பெரியவர் உதவினார். அன்று முஸ்லிம் ஒருவரால் குணமடைந்த இந்துவாகிய நான், இன்று, எனது சொந்தக் காலோடு நின்று, கிறிஸ்தவராகிய சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன். மகனே நீ எந்த முஸ்லிம் மனிதரைப் பார்த்தாலும், கையெடுத்துக் கும்பிட்டுக்கொள் என்று, எனது அன்னையும், எனக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார். நானும் அவ்வாறே செய்து வருகிறேன். ஆம். நமக்குள்ளே எந்தவித மத வேறுபாடும் கிடையாது. ஆனால் மதவேறுபாடுகளைப் பார்ப்பவர்கள் அரசியல் தலைவர்களே. இவ்வாறு அந்த மேடையில், அந்த பட்டிமன்ற பேச்சாளர் சொன்னார். இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள், மதஒற்றுமைக்குச் சான்றாக, உள்ளன. இந்த பெருந்தொற்றால் இறந்த இந்தமத சகோதரர்களை, எத்தனையோ முஸ்லிம் அமைப்புகள், இந்துமத மரபுப்படி நல்லடக்கம் செய்து வருகின்றன. இவ்வாறு எல்லா மதத்தவருமே, மற்ற மதத்தவருக்கு நற்பணிகள் ஆற்றி வருகின்றனர்.

அன்று அந்த முஸ்லிம் பெரியவர், அந்த இந்துக் குடும்பத்தின், எதிர்முக நிகழ்வை, நேர்முக நிகழ்வாக மாற உதவினார். ஆம். இவ்வாறு நம் வாழ்க்கையிலும் எத்தனையோ ஊர் பெயர் தெரியாத பலர் கூறிய சிறு சிறு அறிவுரைகள், உதவிகள் போன்றவை நம் வாழ்க்கையையே மாற்றி இருப்பதை உணர்ந்து வருகிறோம். நாமும் அவ்வாறு பிறரது வாழ்க்கை உய்வுபெற உதவியிருக்கிறோம். தஞ்சை புவனேஸ்வரி என்பவர், ஒளி-ஒலிக்காட்சி ஊடகத்தில் தன் சிந்தனைகளை அருமையாகப் பதிவுசெய்திருக்கிறார்.     

ஓர் எண்ணம் ஒரு செயல் உயர்த்தும்-தஞ்சை புவனேஸ்வரி

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வோர் ஆசை இருக்கிறது. ஒவ்வோர் இலக்கு இருக்கிறது. ஆனால் எல்லாரலுமே அந்த ஆசையை நிறைவேற்ற முடிவதில்லை. காரணம், நம்மால் முடியும் என நாம் நம்புவதில்லை. ஆனால், என்னால் முடியும், முயன்று பார் என்ற ஓர் எண்ணம், ஒரு செயல், எப்படி பலரது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வைக்கிறது, அது அவர்களை உயர்த்துகிறது என்பதற்கு, தமிழகத்தில், உலகத்தளத்தில் பல சான்றுகள் உள்ளன. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்த ஒரு குழந்தைதான், நூறு கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களின் குடியரசுத் தலைவராக உயர முடிந்தது. செருப்புக்குக்கூட வழியில்லாத ஒரு விவசாயியின் மகன்தான், விண்வெளி ஆய்வுக்கூடத்தின் தலைவராக முடிந்தது. ஒரு துணிக் கடையில் கணக்கு எழுதி பிழைப்பு நடத்திய ஓர் ஏழைத் தந்தையின் மகன் இராமனுஜம் அவர்களே கணிதமேதையாகப் புகழ்பெற முடிந்தது. சிறுவயதிலேயே தந்தையை இழந்து பள்ளிப்படிப்பைத் துறந்த, படிக்காத மேதை கர்மவீரர் காமராஜர்தான் பலர் படிக்கக் காரணமாக இருந்தவர். இப்படி, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையால் உயர்ந்த எத்தனையோ வழிகாட்டிகளைக் கூற முடியும். யாராவது ஒருவர் நம்மைப் பார்த்து முட்டாளே என்று சொல்லிவிட்டால், அந்த ஒரு சொல், அந்தக் கனமே நம்மை சினமூட்டும். அப்படியிருக்க, நாம் வெல்வோம் என்ற நம்பிக்கையான ஓர் எண்ணம் ஏன் நம்மை மாற்றாது, ஏன் நம்மை உயர்த்தாது... எந்த நிலையிலும் எந்த சூழலில் வேண்டுமானாலும் நாம் இருக்கலாம், பிறரால் அவமதிக்கப்படலாம், எள்ளி நகையாடப்படலாம், ஒன்றுக்கும் உதவாதவன் என்று வசைபாடப்படலாம். உலகில் முதன் முதலில் மாடிவீடு கட்டி வாழ்ந்தது தூக்கணாங்குருவிதான். இன்று உலகப் புகழ்பெற்ற கட்டட கலைஞர்களால் கட்டமுடியாத கட்டடம்தான், வெறும் செம்மண்ணால் கட்டப்படும் கரையான்புற்று. உலகமே ஒரு போர்க்களம், அதில் நம் வாழ்க்கை ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் வெற்றிபெறுவதற்கு சரியான ஆயுதம், போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற, நம் திறமையில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை என்று, மாவீரன் நெப்போலியன் ஒருமுறை சொன்னார். தோல்விகள், பழிச்சொற்கள், அவமானம், வறுமை நம்மைச் செதுக்கும். அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டால், நாம் வணங்கப்படும் சிலையாவோம். பொறுமை இழந்தால் மிதிக்கப்படும் கல்லாவோம். சிலையாவதும் கல்லாவதும் நம் கரத்தில்தான் இருக்கிறது.

எனவே அந்த இளைஞனுக்கு உதவிய முட்டைக்கடை முதலாளி போன்று, அந்த இந்து சிறுவனுக்கு உதவிய முஸ்லிம் பெரியவர்போன்று வாழ்ந்து காட்டுவோம். ஓர் எண்ணம், ஒரு செயல் நமக்கு வழிகாட்டுகிறது. அது நமக்கு வெற்றி தருகிறது,

07 June 2021, 14:53