தேடுதல்

இயற்கையோடு அமைதியில் வாழ கூட்டேரஸ் அழைப்பு

இயற்கை, மற்றும், நம் பூமிக்கோளத்தை மதிக்கும்போது, நம்மையே நாம் மதிக்கின்றோம் – ஐ.நா.வின் அந்தோனியோ கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சூன் 05, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, சுற்றுச்சூழல் உலக நாளுக்கு செய்தி வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இயற்கை, மற்றும், நம் பூமிக்கோளத்தை மதிக்கும்போது, நம்மையே நாம் மதிக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்லுயிர்கள் அழிவு, காலநிலைச் சிதைவு, மாசுகேட்டின் அதிகரிப்பு ஆகிய மூன்று பிரச்சனைகளால், நோயுற்றுள்ள நம் பூமிக்கோளத்தைக் குணப்படுத்துவதற்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது நம் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவேண்டும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்னும், சுற்றுச்சூழல் உலக நாளையொட்டி, சூன் 04, இவ்வெள்ளி மாலையில், “சூழலியலை மறுசீரமைப்பு செய்வது குறித்த பத்து ஆண்டுகள்” என்ற திட்டம் ஒன்றையும் துவக்கி வைத்துப் பேசியுள்ள கூட்டேரஸ் அவர்கள், சீரழிக்கப்பட்டுள்ள சூழலியல் அமைப்புக்களை மாற்றியமைப்பதற்கு, நமக்கு இன்னும் காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.

வேகமாக இடம்பெறும் காடுகள் அழிவு, ஆறுகளும், பெருங்கடல்களும், மாசடைதல், மேய்ச்சல் நிலங்கள் சுரண்டப்படல் போன்றவை, பூமிக்கோளம், நன்னிலைக்கு வரமுடியாத அளவுக்கு இட்டுச் சென்றுள்ளன என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், நம் சமுதாயங்களின் வாழ்வையே தாங்கிப்பிடித்துள்ள பல்லுயிர்களையும், சுற்றுச்சூழலையும் நாம் பாழ்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

நம்மால் இயற்கை உலகு காயப்பட்டிருப்பது, நாம் வாழ்வதற்குத் தேவையான உணவு, தண்ணீர், மற்றும் ஏனைய வளங்களை அழித்துள்ளது என்றும், மனித சமுதாயத்தின் நாற்பது விழுக்காட்டினரின், அதாவது 320 கோடி மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்கனவே ஊறுவிளைவித்துள்ளது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

இயற்கையோடு அமைதியில் வாழவும், அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு பூமிக்கோளத்தை உருவாக்கவும், உலக அளவில் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்றும், சுற்றுச்சூழல் உலக நாள் செய்தியில், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலக அளவில் இடம்பெற்றுள்ள சுற்றுச்சூழல் சீர்கேட்டால், ஒவ்வோர் ஆண்டும், குறிப்பிட்ட காலத்திற்குமுன்பே 90 இலட்சத்திற்கு மேற்பட்ட மரணங்கள் இடம்பெறுகின்றன, மற்றும், கோடிக்கணக்கான மக்களின் நலமும், மாண்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும், 45 நாடுகளில், 71 கோடிக்கு மேற்பட்ட சிறார், காலநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள நெருக்கடியில் வாழ்ந்துவருகின்றனர் என்றும் ஐ.நா.வின் கூட்டேரஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2021, 15:39