தேடுதல்

பாலஸ்தீனாவில் இஸ்ரேல் ஆக்ரமிப்பை எதிர்த்து Louisvilleல் பேரணி பாலஸ்தீனாவில் இஸ்ரேல் ஆக்ரமிப்பை எதிர்த்து Louisvilleல் பேரணி  

இஸ்ரேல் அரசின்மீது கண்டனம் தெரிவித்துள்ள கல்வியாளர்கள்

பாலஸ்தீன மக்கள் மீது இனவெறி அடக்குமுறையை மேற்கொண்டள்ள இஸ்ரேல் நாட்டின் கல்விக்கூடங்களோடும், மருத்துவப் பணிகளோடும் ஏனைய நாடுகள் எவ்வித தொடர்பும் வைத்திருக்கக் கூடாது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு நடத்திவரும் இனவெறி அடக்குமுறை முடிவுக்கு வரவேண்டுமென்று, உலகெங்கும் உள்ள 300க்கும் மேற்பட்ட தலைசிறநத கல்வி மையங்களில் பணியாற்றுவோரும், 15,000த்திற்கும் அதிகமான கல்வியாளர்களும் வற்புறுத்திக் கூறியுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

காசாப் பகுதியில் இஸ்ரேல் அரசு மேற்கொண்டுவரும் அத்துமீறிய ஆக்ரமிப்பு, இனவெறியின் வெளிப்பாடு என்று கூறியுள்ள கலிவியாளர்கள், அண்மையில் காசாப் பகுதியில் இஸ்ரேல் அரசு மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களால், 66 குழந்தைகள் உட்பட, 247 பேர் இறந்துள்ளது, மிகத்தெளிவான வன்முறை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் அரசு மேற்கொண்டுவரும் தாக்குதல்களும், ஆக்ரமிப்புக்களும், அவ்வாறு மேற்கொள்ளும் இனவெறி தாக்குதலுக்கு உதவிசெய்யும் வண்ணம், பல்வேறு நாடுகள் அவ்வரசுக்கு வழங்கிவரும் ஆயுத உதவிகளும், உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று கல்வியாளர்கள் வற்புறுத்திக் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கிவரும் Harvard, Yale, Princeton, Brown, Stanford, Georgetown, New York நகரின் City University, மற்றும் Berkeleyன் University of California ஆகிய கல்வி நிறுவனங்களும், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள United Educators என்ற அமைப்பைச் சேர்ந்த 6,500 பேராசிரியர்களும், இஸ்ரேல் அரசின் இனவெறி கொள்கைகளையும், செயல்பாடுகளையும் வன்மையாக கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 40 பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவோர், பெல்ஜியம் நாட்டின் 24 கல்வி அமைப்புக்களைச் சேர்ந்த 1,300 கல்வியாளர்கள், பிரித்தானியாவின் 1,600 பேராசிரியர்கள், ஆஸ்திரேலியாவின் கல்வியாளர்கள் என்று, பல்லாயிரம் பேர் தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, கனடா நாட்டைச் சேர்ந்த 2,800க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும், இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொண்டுள்ள வெறித்தனமான தாக்குதல்களைக் குறித்து வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் கல்விக்கூடங்களோடும், மருத்துவப் பணிகளோடும் ஏனைய நாடுகள் எவ்வித தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என்பதை, கல்வியாளர்கள் அனைவரும் வற்புறுத்திக் கூறிவருகின்றனர். (ICN/WAFA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2021, 15:12