தேடுதல்

பரகுவாய் நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பரகுவாய் நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

வாரம் ஓர் அலசல்: காருண்யத்திற்கு காசு தேவையில்லை

காருண்யத்திற்கு, மனிதநேயத்திற்கு காசு கிடையாது. இவை அனைத்திற்கும் மனம் வேண்டும், மனம் இருக்கிறது என்ற உணர்வு வேண்டும் - முனைவர் ஜெயந்தஸ்ரீ

மேரி தெரேசா: வத்திக்கான் 

அக்காலத்தில், பாடலிபுத்திரத்தில், அதாவது, இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில், ஆடல் அழகி ஒருவர் இருந்தார். அவர், தன் அழகால், பல ஆடவர்களை மயக்கி, முறைகேடான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பாடலிபுத்திரத்திற்கு வெளியே, புத்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரான, உபகுப்தர் என்பவர், தனியான ஓரிடத்தில், எப்போதும் ஆழ்நிலை தியானத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அந்த ஆடல் அழகி, உபகுப்தரிடம் சென்று, “சுவாமி, என்னிடம் புத்தர் சொன்ன நிர்வாணம் பற்றிப் பேசாதீர்கள், எனக்கு வேறு நிர்வாணம் எல்லாம் நன்கு தெரியும், அதை உமக்கும் கற்பிப்பேன் என்றார். அதைக் கேட்ட உபகுப்தர், அங்கிருந்து ஓடத்தொடங்கினார். அந்தப் பெண்ணும், அவரைப் பின்தொடர்ந்து, “சுவாமி? என்னிடம் எப்போது வருவீர்கள்?”  என்று கேட்டுக்கொண்டே சென்றார். “பெண்ணே! பொறுத்திரு! ஒரு நாள் நான் வந்து உன்னைத் திருப்திப்படுத்துவேன்” என்றார். அதைக் கேட்ட அந்தப் பெண், ஒரு துறவியையே தான் மயக்கிவிட்டதாக கனவுலகில் புரண்டார். ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பெண்ணின் முறைகேடான வாழ்வால், பல நோய்கள் அவரைத் தாக்கி, எவரும் அருகில் நெருங்காதபடி உடல் முழுதும் துர்நாற்றம் வீசியது. அப்பெண்ணுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூட யாரும் இல்லை. இந்நிலையில், உபகுப்தருக்கு, திடீரென்று அந்த பெண்ணிடம் தான் கூறியது நினைவுக்குவர, அவர், அப்பெண்ணைத் தேடிச் சென்றார். திடீரென உபகுப்தரை தன் வீட்டில் பார்த்த அந்த பெண், அவரிடம், “சுவாமி! என்னைத் தொடாதீர்கள், தொடாதீர்கள், உடல் முழுதும் நோய், துர்நாற்றம்” என்றார். ஆனால், உபகுப்தரின் கருணைப் பார்வை அப்பெண் மீது வெள்ளமாய்ப் பாய்ந்தது. பின்னர், உபகுப்தர் அப்பெண்ணிடம் “பெண்ணே, நீ எது கவர்ச்சி என்று இப்போது வரை நினைத்தாயோ அது கவர்ச்சி அல்ல. இப்போது உன் கண்களில் ஒளி வீசுகிறதே! அந்தக் கருணைதான் உண்மையான கவர்ச்சி. வெளிக்கவர்ச்சியெல்லாம் கவர்ச்சி ஆகாது” என்று சொன்னார். அப்பெண்ணும், அன்று முதல், உபகுப்தரின் சீடராக அவர் பின்னே சென்றார். இந்த கதையைச் சொன்ன, பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ அவர்கள், அக்கதை பற்றிய தன் எண்ணத்தை இவ்வாறு கூறியுள்ளார்.

உண்மையான மனித நேயம்

உண்மையான மனித நேயத்திற்கு விருப்பும் கிடையாது, வெறுப்பும் கிடையாது. உண்மையான துறவுக்கு வேண்டியவர்களும் கிடையாது, வேண்டப்படாதவர்களும் கிடையாது, ஆனால் இவையெல்லாமே நம் ஒவ்வொருவருக்குள்ளே இருக்கின்றன. வாழ்க்கை அவசரத்தில் அவற்றை நாம் கை மறதியாய் எங்கோ வைத்துவிட்டோம். வள்ளுவப் பெருந்தகையும், இனிய உளவாக இன்னாத கூறல், கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (குறள் எண்:100) என்று, மனத்திற்கு இன்பம் தரும் சொற்களைக் கூறுமாறு எழுதியுள்ளார். எனவே நாம் வார்த்தை வன்முறைகளைக் கைவிடுவோம். அடுத்தவரைப் பார்க்கும்போது வணக்கம் சொல்வோம், புன்னகை ஒன்றை உதிர்ப்போம், அடுத்தவரிடமிருந்து அதே வணக்கம் கிடைக்கவில்லையெனில், கடவுளே அவர்களுக்கும் அதேமாதிரியான அருளைத் தாரும், அவர்களை ஆசீர்வதியும் என்று வேண்டிக்கொண்டே நம் வழியில் நடப்போம்.

கொரோனா பெருந்தொற்று

ஓராண்டுக்கும் மேலாக, உலக சமுதாயத்தை, குறிப்பாக, தற்போது, இந்தியாவை கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, ஆழிப்பேரலையாகத் தாக்கி, கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கின்றது. இப்பெருந்தொற்று காலத்தில் காருண்யத்தோடு செயலாற்றும் மருத்துவப் பணியாளர்கள், மற்றும், தன்னார்வத் தொண்டர்களை நன்றியோடு நினைக்க, நாம் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரம், பெருந்தொற்று பரவலையும் பொருட்படுத்தாமல், இஸ்ரேல், மியான்மார் உட்பட, சில நாடுகளில் இடம்பெறும் வன்முறைகளும், போர்களும், அப்பாவி மக்களின் உயிர்களை காவுவாங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் பகைமையும், பழிவாங்கும் உணர்வுகளும் மறைந்து, மனித மனங்களில், மனிதநேயம், கருண, காருண்யம் ஆகியவை தேவைப்படுகின்றன. மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், உடன்பிறந்த அன்புணர்வு பற்றிக் கூறியுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலில் (அன்பின் மகிழ்வு 118) குறிப்பிட்டுள்ளார்.

“உன்னை அதிகம் வெறுக்கும் நபர், தன்னில் சில நன்மைத்தனத்தைக் கொண்டிருக்கிறார். உன்னை அதிகம் வெறுக்கும் நாடுகூட, தன்னில் சில நன்மைத்தனத்தைக் கொண்டிருக்கின்றது. உன்னை அதிகம் வெறுக்கும் இனம்கூட, தன்னில் சில நன்மைத்தனத்தைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மனிதரின் முகத்திலும், அவரது ஆழ்மனத்திலும், கடவுளின் சாயலைப் பார்க்கும் நிலைக்கு நீ வரும்போது, என்ன நடந்தாலும், அனைத்தையும் தவிர்த்து, அந்த மனிதரை நீ அன்புகூரத் தொடங்குவாய். உனது பகைவரை அன்புகூருவதற்கு மற்றொரு வழியும் உள்ளது. உனது எதிரியை வீழ்த்துவதற்கு உனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது, அச்சமயத்தில்தான் நீ அதை செய்யக் கூடாது.. அன்பின் மிகுந்த அழகு, மற்றும், வல்லமைக்கு நீ உயரும்போது, தீமையான அமைப்புமுறைகளைத் தோற்கடிக்க மட்டுமே நீ வழிகளைத் தேடுவாய். நீ அன்புகூரும் தனியாள்கள், அந்த அமைப்புமுறையில் சிக்கிக்கொள்ள நேரிடும்போது,  அவர்கள், அந்த அமைப்புமுறையைத் தோற்கடிக்கும் வழிகளைத் தேடு.... வெறுப்புக்கு வெறுப்பைக் காட்டுவது, இப்பிரபஞ்சத்தில் ஏற்கனவே இருக்கும் வெறுப்பையும், தீமையையும் ஆழப்படுத்தவே செய்யும். நான் உன்னைத் தாக்கினால், மற்றும், நீ என்னைத் தாக்கினால், பதிலுக்கு நான் உன்னைத் தாக்கி, மற்றும், நீ என்னைத் தாக்கி, இது முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும். அது ஒருபோதும் முடிவுறாது. எந்த இடத்திலும், யாராகிலும் ஒருவர், ஒரு நல்ல உணர்வைக் கொண்டிருந்தால், அவரே உறுதியான மனிதர். அந்த திடமான மனிதரே, வெறுப்பின் சங்கிலியை, மற்றும், தீமையின் சங்கிலியை அறுத்தெறிகிறவர்...

போர்கள் முடிய திருத்தந்தை அழைப்பு

கடந்த சில நாள்களாக பாலஸ்தீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயுள்ள காஸா பகுதியில், கடுமையான வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இத்தாக்குதல்களில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். மே 17, இத்திங்கள் காலையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் இன்னும் கடுமையாய் இருந்தன என்று பிபிசி செய்திகள் கூறுகின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமெரிக்க ஐக்கிய நாடு உள்ளிட்ட, வேறு சில நாடுகள் இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று, தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றன. இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஆயுதங்களின் இடைவிடாத இரைச்சல் நிறுத்தப்படுமாறும், உலகளாவிய சமுதாயத்தின் உதவியோடு, அமைதியின் பாதையில் நடக்குமாறும், இஸ்ரேல், மற்றும், பாலஸ்தீனிய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். மே 16, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வானக அரசியே வாழ்த்தொலி உரையாற்றியபின் இவ்வாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

புனித பூமியில் இடம்பெறும் தாக்குதல்கள், நிறுத்தப்படுமாறும், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனிய ஹமாஸ் புரட்சிக்குழுவுக்கும் இடையே ஒப்புரவு இடம்பெறுமாறும், “கடவுளின் பெயரால்” கேட்டுக்கொள்கிறேன். இத்தாக்குதல்களில் இறந்தவர்களில் பலர் சிறார் என்பது, கொடூரமானது, மற்றும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இவர்களின் மரணம், மக்கள், வருங்காலத்தைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை, மாறாக, அதை அழிக்கவே விரும்புவதைக் காட்டுகின்றது. இஸ்ரேல் மற்றும், காஸாப் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறை, தொடர் மரணங்கள், மற்றும் அழிவையே பிறப்பிக்கும். உடன்பிறந்த உணர்வு, மற்றும், நல்லிணக்க வாழ்வைக் காயப்படுத்தும். போரிடும் தரப்புகள், உடனடியாக உரையாடலில் ஈடுபடவில்லையெனில், அது, இந்தக் காயங்களைக் குணப்படுத்துவதைக் கடினப்படுத்தும். உரையாடல், மற்றும், மன்னிப்பின் பாதையைக் கண்டுகொள்ளவும், அமைதி, மற்றும், நீதியைப் பொறுமையுடன் கட்டியெழுப்பவும், உடன்பிறந்த உறவுகளுக்கு இடையே, பொதுவான நம்பிக்கை, நல்லிணக்கம் ஆகியவை படிப்படியாகத் திறக்கப்படவும், இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனியர்களுக்காகச் செபிப்போம்.

மே 16, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், இத்தாலியில் வாழ்கின்ற மியான்மார் மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மாரில் இடம்பெற்றுவரும், வன்முறைத் தாக்குதல்கள் மற்றும், அடக்குமுறை ஆகியவை நிறுத்தப்பட்டு, அந்நாட்டில் அமைதி நிலவச் செபித்தார். மியான்மார் விசுவாசிகளும், தீமைக்கு முன்னால் தலைவணங்காமல், வேதனையால் நசுக்கப்படுவதற்கு தங்களை அனுமதிக்காமல், ஏமாற்றப்பட்ட, மற்றும், தோற்கடிக்கப்பட்டவர்களின் கசப்புணர்வில் வீழ்ந்துவிடாமல்,  அனைவரின் இதயங்களும் அமைதிக்காக மனம் மாற இறைவேண்டல் செய்யுமாறு, திருத்தந்தை கூறினார்.

காருண்யத்திற்கு, மனிதநேயத்திற்கு காசு கிடையாது. இவை அனைத்திற்கும் மனம் வேண்டும், மனம் இருக்கிறது என்ற உணர்வு வேண்டும், இந்த உணர்வை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கக்கூடிய அறிவு வேண்டும். பொதுவாக நாம் அறிவால் சிந்தித்து, மனதால் உணர்வோம், ஆனால் உண்மையான மனிதநேயம் உள்ளவர்கள், இதயத்தால் சிந்தித்து அறிவால் உணர்வார்கள். இதைத்தான் மகாத்மா காந்தியும், புனித அன்னைதெரேசாவும் செய்தனர். மனித நேயம் இருக்கும்போது, மனஇறுக்கம் குறைந்துபோகும், கண்கள் பிரகாசமாய் இருக்கும், காதுகள் நன்றாக கேட்கும். கணியன் பூங்குன்றனார் சொன்னதுபோல, யாதும் ஊரே யாவரும் கேளிர் (புறநானூறு:192) என்ற பண்பு பிறக்கும். இவ்வாறு பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ அவர்கள் சொல்லியிருக்கிறார். மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள் சொன்னது போல், காருண்யப் பண்பை வளர்த்துக்கொள்ள, நம்பிக்கையோடு முதல் படியில் அடியெடுத்து வைப்போம். அப்போது முழுப்படிக்கட்டுகளையும் பார்க்கவேண்டிய அவசியமிருக்காது. வெறுப்பின் சங்கிலியை, மற்றும், தீமையின் சங்கிலியை அறுத்தெறிகிற மனிதர்களாக, காசின்றி வழங்கவல்ல காருண்ய மனிதர்களாக வாழ்வோம்.

17 May 2021, 15:03