தேடுதல்

Vatican News
இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலை இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலை  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல்: பெருந்தொற்று காலத்தில் நற்பணிகள்

நாம் தேவையற்ற எதிர்மறையான தகவல்களை மனதுக்குள் கிரகிப்பதால், மனச்சோர்வு, மனபயம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுகின்றன.

மேரி தெரேசா: வத்திக்கான்

கவலையின்றி இருங்கள், அச்சம் தவிருங்கள், பதட்டமின்றி இருங்கள், கைவிட்டுப்போனவற்றுக்காக வருந்தாதிருங்கள், கோபத்தை வென்றிடுங்கள், அன்புகூருங்கள், நேர்மறை எண்ணத்துடன் இருங்கள், கடவுள் காப்பார் என்று நம்பியிருங்கள்... வாழ்க்கையில் மகிழ்வோடு, சிறந்து வாழ்வதற்கு, சில உரிய உயரிய நெறிமுறைகள் என்று, இவை போன்ற அறிவுரைகளை, பலநேரங்களில் நாம் கேட்டு வருகிறோம். அச்ச உணர்வு, கவலை, மனஅழுத்தம், படபடப்பு என்று, பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. இந்த உணர்வு பல நோய்களுக்கும் காரணமாக அமைகின்றது. அச்சம் தவிர்த்து வாழ், வெற்றி பெறுவாய் என்றே மகாகவி பாரதியாரும் நெஞ்சுயர்த்திப் பாடியிருக்கிறார். துணிவோடு இருங்கள், கொரோனா குறித்து வீண் பயத்தைத் தவிர்த்து பாதுகாப்பாக இருங்கள் என்றே, பல மனநல மருத்துவர்கள் சொல்லி வருகின்றனர்.

பொள்ளாச்சி மனநல மருத்துவர் கிருத்திகா, மனநல ஆலோசகர் சிவா

அச்சம் என்பது, எந்தவொரு மாற்றத்திற்கும், எதிர்வினையாக அமைவதாகும். நாம் அச்சத்தினால்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், அது, நமது வாழ்க்கையைக் கட்டுப்படுத்த அனுமதித்தால், நம்மால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான செயலையும் செய்ய முடியாது. நாம் தேவையற்ற எதிர்மறையான தகவல்களை மனதுக்குள் கிரகிப்பதால், மனச்சோர்வு, மனபயம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுகின்றன. எனவே, நாள் முழுவதும் கொரோனா சம்பந்தப்பட்ட செய்திகளைப் பார்த்து பதட்டப்படுவதை விடுத்து, தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி, தேவையான செய்திகளை மட்டும் பாருங்கள். தொலைபேசி, மற்றும், தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிருங்கள். போதுமான நேரம் தூங்குங்கள். தினமும், அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மற்றும், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். சத்தான உணவுகளையும், காய்கறி, பழங்களை உண்ணுங்கள், அதேநேரம், புகைப்பிடித்தல் மற்றும், மதுப்பழக்கத்தைத் தவிர்த்து வாழுங்கள். மனதுக்கு பிடித்த ஏதாவது ஒரு பொழுதுபோக்கிலும், மனதுக்கு ஊக்கமளிக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள். நம்முடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றி கவலைப்படுவதைக் காட்டிலும், கட்டுப்படுத்தக்கூடிய விடயங்கள் பற்றி ஏதாவது செய்யுங்கள். கடந்த காலம், மற்றும், எதிர்காலத்தை பற்றி சிந்திப்பதைத் தவிர்த்து, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். மனம் அலைபாயாமல் இருப்பதற்கு, ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சியை செய்து வெற்றி காண முயற்சியுங்கள். தற்போது கிடைத்துள்ள நேரத்தில், சுய பரிசோதனை செய்து, தவறான எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தவிர்த்து, நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் கிருத்திகா, மனநல ஆலோசகர் சிவா ஆகிய இருவரும், ஊரடங்கு காலத்திற்கென  பரிந்துரைத்திருப்பதை,  தினமலர் நாளிதழ் பதிவுசெய்திருந்தது. சுவாமி மித்ரேஷிவா அவர்களும், கொரோனா பயமா, தீர்வு இங்கே, அதுதான் அச்சம் அகற்றி வாழ்தல் என்று சொல்கிறார். கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, இந்திய நாட்டையே கடுமையாய் உலுக்கி வருகின்ற இவ்வேளையில், தூத்துக்குடி மனித உரிமை ஆர்வலர் XD செல்வராஜ் அவர்கள், இது பற்றிப் பேசுகிறார்.

ஜாவேத் கான்

கொரோனா இரண்டாம் அலையில், இந்தியாவின் வட மாநிலங்களில், ஆக்சிஜன் பற்றாக்குறைதான், பொதுமக்களை மிகவும் கதிகலங்கச் செய்திருக்கிறது. இவ்வேளையில், தனிமனிதர்கள் சிலரும், தங்களால் இயன்ற உதவிகளைத் செய்துவருகிறார்கள். மும்பையில், ஷானவாஸ் ஷேக் என்பவர், ஆக்சிஜன் சேவையை வழங்குவதற்காக, தன்னுடைய புது வாகனத்தையே விற்றுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் ஜாவேத் கான் என்ற ஆட்டோ ஓட்டுநர், தன் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து, தன்னுடைய ஆட்டோவில், ஒரு நோயாளி சுவாசிக்கும் அளவுக்கு, ஆக்சிஜன் சிலிண்டரையும், தேவையான கருவிகளையும் வாங்கிப் பொருத்தி, ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் போலவே மாற்றி அமைத்துள்ளார். மேலும், இவர், ஆட்டோவில் கொரோனா நோயாளிகளைக் கட்டணமின்றியும் அழைத்துச் செல்கிறார். ஜாவேத் கான் அவர்கள், இந்த பணியின் வழியாக, பத்துக்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறார். இவர், வீட்டில் ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல், உதவி தேவைப்படுவோருக்காக உழைத்து வருகிறார்.

பாட்னா கவுரவ் ராய்

பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில், விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்றவர். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் ஆக்சிஜனுடன்கூடிய படுக்கை கிடைக்காமல் அல்லாடியவர். அவருடைய மனைவி அலைந்து திரிந்து, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிவந்த பிறகே, அவரால் பிழைக்க முடிந்தது. தான்பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் அடையக் கூடாது என்கிற நோக்கத்தில், கவுரவ் ராய் அவர்கள், சொந்தப் பணத்தில், வீட்டிலேயே, ‘ஆக்சிஜன் வங்கி’ ஒன்றைத் தொடங்கியுள்ளார். இவர், நாள்தோறும் பத்து கிலோ எடை கொண்ட 200 ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கையாள்கிறார். பிஹார் மாநிலத்தில், எங்கிருந்து அழைப்பு வந்தாலும், சிரமம் பார்க்காமல் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு, கட்டணமின்றி, தன்னுடைய காரில் கொண்டுபோய் வழங்கிவருகிறார். இதுவரை இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,100 பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். இவர், கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் ‘ஆக்சிஜன் மனிதர்’ எனவும் பெயரெடுத்திருக்கிறார். இந்த பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கமும், தன் பிறரன்புச் சேவையை ஆரம்பித்துள்ளது. அன்பு இதயங்களே, இந்த பெருந்தொற்றின் இரண்டாவது அலையில், இந்தியாவில், பலர், தன்னலம் பாராது, நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், குறிப்பிட்ட தேதியில் நடைபெற உதவி வருகின்றனர். இந்த பெருந்தொற்று பற்றிய விழிப்புணர்வு சேவைகளையும் ஆற்றிவருகின்றனர். எனவே, இந்த பெருந்துன்பக் காலக்கட்டத்தில், கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கவனமுடன் பின்பற்றி, நோய் பற்றிய அச்சம் தவிர்த்து, நலமோடு வாழ்வோம். பிறர் வாழவும் உதவுவோம்.

வாரம் ஓர் அலசல்: பெருந்தொற்று காலத்தில் நற்பணிகள்

 

 

10 May 2021, 15:25