தேடுதல்

Vatican News
கடவுளின் விருப்பத்தைத் தேடும் கைகள் கடவுளின் விருப்பத்தைத் தேடும் கைகள் 

வாரம் ஓர் அலசல்: ஆக்கையில் மறைந்திருக்கும் அதிசயங்கள்

மனித இதயம், ஒரு கர்மயோகி. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நிமிடத்திற்கு நிமிடம் எழுபது முறையும், ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சம் முறையும், துடித்துக்கொண்டே இருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான் 

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். வண்ணத்துப் பூச்சி உடம்பில், ஓவியங்கள் அதிசயம். துளைசெல்லும் காற்று இசையாதல் அதிசயம். குருநாதர் இல்லாத, குயில்பாட்டு அதிசயம்” என்று ஒரு திரைப்பட பாடல் உள்ளது. ஆம்.  நாம் வாழ்கின்ற இந்த பூமிக்கோளம் விந்தையிலும் விந்தைமிக்க பல்வேறு அதிசயங்களால் நம்மை பிரமிக்க வைத்து வருகின்றது. இயற்கையில் வெளிப்படும் அதிசயங்கள் தவிர, மனிதரின் கலைவேலைப்பாடுகளும் நம்மையெல்லாம் வியப்படையச் செய்து வருகின்றன. பழங்கால உலக அதிசயங்கள், நவீன உலக அதிசயங்கள், உலகம் இதுவரை அறிந்திராத ஐந்து உலக அதிசயங்கள் என்று, அதிசயங்கள் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது. ஒரு சிறிய ஆல மர விதையில் இவ்வளவு பெரிய விருட்சம் ஒளிந்துகொண்டிருப்பது அதிசயம்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, ஆறடி அடித்தளத்தில், 200 அடிக்கு மேலே உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலும் அதிசயம்தான். உணவில் நாம் சேர்க்கும் ஒரு துகள் உப்பில் நூறு கோடி அணுக்கள் இருப்பதும் அதிசயம்தான். இவ்வாறு, ஒரு அணுவிலும், ஒரு துகளிலும், ஏன், நம் கண்களுக்குத் தெரியாத ஒரு கிருமியிலும்கூட, கொடூரமான பெரிய பெரிய அதிசயங்கள் ஒளிந்திருப்பதை இக்காலக்கட்டத்தில் நாம் அனுபவித்து வருகிறோம். கடந்த ஓராண்டிற்கும் மேலாக, ஒரு நுண்கிருமி, உலகம் முழுவதையும் அச்சத்தோடு வியக்க வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வெளிப்புற அதிசயங்களைப் பார்த்து வியந்துகொண்டிருக்கும் நாம்,  நமது ஆக்கையில், அதாவது நம் உடலுக்குள் மறைந்திருக்கும் அதிசயங்களையும் பார்ப்போம். மனித உடல் பற்றி சித்தர் பாடல் ஒன்று இவ்வாறு சொல்கிறது.

கூறுவேன் தேகமது என்னவென்றால், குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி, மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு, வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி, தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி, தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி, ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி, அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே’. உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, அவற்றின் ’இருப்பிடம்’ மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக்கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைகளைச் சேர்த்து, இரத்தத்தை ஊற்றி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி, உடல் என்ற ஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக, இந்த சித்தர் பாடல் நமக்கு விவரிக்கிறது.

கல்யாணமாலை நிகழ்வில் மருத்துவர் சாய் சதீஷ்

ஒளிந்திருக்கும் அதிசயங்கள் என்ற தலைப்பில், கல்யாணமாலை என்ற அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சியில், இதய நோய் மருத்துவர் சாய் சதீஷ் அவர்கள், நம் உடல் பற்றிக் கூறியிருப்பது நம்மை மேலும் அதிசயிக்க வைக்கின்றது. சென்னை அப்பெல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் இவர், அறுவை சிகிச்சையே இல்லாமல், வால்வுகளை மாற்றும் திறன் படைத்தவர். இந்தியாவிலேயே அவர் ஒருவர்தான், இந்த சிகிச்சைமுறையைச் செய்பவர். இவ்வாறு அந்நிகழ்வில், திருமதி மீரா நாகராஜன் அவர்கள், மருத்துவர் சாய் சதீஷ் அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். மருத்துவர் சாய் சதீஷ் அவர்கள் சொல்கிறார்...

கை, மூளை 

இந்த உடலின் ஒவ்வொரு பகுதியிலும் இலட்சக்கணக்கான இரகசியம் ஒளிந்திருக்கின்றது. நம் கையில் எத்தனை எலும்புகள். இந்தக் கையில், பெரிய விரலால் சுண்டுவிரலைத் தொடும் ஒரே உயிரினம் மனிதர்தான். இந்தக் கையாலே கராத்தேயில் செங்கலை உடைக்கிறோம், அதேநேரம் வயலின், வீணை, பியானோ, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளையும் மீட்டுகிறோம். அதே கையாலே கலைகளையும் படைக்கிறோம். இப்படி நம் கையை நடத்துகின்ற நம் மூளை, உலகத்திலுள்ள சிறந்த சூப்பர் கணனியாகும் மற்றும், நம் மூளை கனவேகம் உடையது. வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வாகனத்தில் புறப்படும்போது, சாலையில் வருகின்ற வாகனங்களைப் பார்த்து, நில் நிற்க கவனி என்ற விதிமுறைகளை கவனித்து, நம்மை பாதுகாப்பாக அலுவலகத்தை அடையச் செய்வது நமது மூளை. இதனை ஒரு கணனி புரோகிராமாக எழுத எத்தனை பக்கங்கள், எத்தனை வருடம் தேவைப்படும் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

சிறுநீரகம், நுரையீரல்

அடுத்து நமது சிறுநீரகம். இது, உலகத்தில் நமக்குத் தெரிந்த மிகச் சிறந்த வடிகட்டி. ஒரு சிறுநீரகத்தில் ஒரு இலட்சம் சிறிய வடிகட்டிகள் உள்ளன. நம் இரத்தத்தில் உள்ள உப்பின் அளவும், கடல் நீரிலுள்ள உப்பின் அளவும் சமமாக இருக்கிறது. அந்த உப்பின் அளவை மிகச் சிறிய அளவில் வடிகட்டும் வேலையைச் செய்வது சிறுநீரகம். இரத்த அழுத்தத்தையும், ஹைட்ரஜன் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற சிறுநீரகம் போன்ற செயற்கை சிறுநீரகத்தை, இவ்வளவு வளர்ந்துள்ள நவீன அறிவியலால் இன்னும் தயாரிக்க முடியவில்லை. அடுத்து நம் சுவாசத்திற்கு உதவும் நுரையீரல். இதனை விரித்தால், அது டென்னிஸ் விளையாட்டு மைதானம் அளவுடையது. அது, நம் சுவாசத்திலே எழுபது விழுக்காடு நச்சு நுண்ணுயிர்களை வெளியேற்றுகிறது.

இதயம்

அடுத்து நம் இதயம். நம் உடம்பின் பம்பே இதயம்தான். உணர்ச்சிகளின் இல்லிடமான இதயம், ஒரு கர்மயோகி. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நிமிடத்திற்கு நிமிடம் எழுபது முறையும், ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சம் முறையும், துடித்துக்கொண்டே இருக்கிறது. இதயம் மட்டுமே, நம் உடம்பிலிருந்து வெளியே எடுத்து வைத்தாலும் துடிக்கும் ஒரேயோர் உறுப்பாகும். இது தன் ஒவ்வொரு துடிப்பிலும், இரத்தத்தை, 96 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான இரத்த குழாய் வழியாக அனுப்பிக்கொண்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு வாகனத்தை நாம் ஓட்டும்போது, அது ஒரு நூறு கிலோ மீட்டர் தூரம் சென்றவுடன், அதன் வேகத்தை மாற்றுகிறோம். ஆனால் இதயம் அப்படி அல்ல. அது இடைவிடாமல் தன் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. அத்தகைய இதயம் நம்மிடம் பேசுவதை, குறிப்பாக, இந்த கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் கேட்கவேண்டும் அல்லவா. இதயநோய் மருத்துவர் சாய் சதீஷ் அவர்கள், நம் உடலின் அதிசயங்கள் பற்றி இருபது மணிநேரங்கள்கூட பேசலாம் என்று, சில உறுப்புகள் பற்றிய அதிசயங்களை மட்டும், அந்நிகழ்வில் பேசியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கிருமியின் இரண்டாவது அலையின் கடுந்தாக்கம், நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவையை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல்வேறு நாடுகள் உதவிக்கரங்களை நீட்டியுள்ளன. அதேநேரம், இந்த பரவலை வைத்து, தடுப்பூசி நிறுவனங்கள் 1.11 இலட்சம் கோடி ரூபாய் இலாபம் சம்பாதிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தி இந்து தமிழ் திசை ஊடகம் கூறியுள்ளது. இந்தியாவில், சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும், வழங்குவதாக அறிவித்துள்ளதாம். அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம், தனது கோவாக்ஸின் தடுப்பூசியை, மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியாருக்கு 1200 ரூபாய்க்கும், வழங்குவதாக அறிவித்துள்ளதாம். பெருந்தொற்றின் இரண்டாவது அலை, இந்தியாவை இந்த அளவிற்குப் பாதித்துள்ளதற்கு, மத்திய அரசின் கொள்கைகளில் ஆற்றலின்மையே காரணம் என்று, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆக்சிஜன் வங்கி

இந்தியா முழுவதும், ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்துவரும் நிலையில், இராஜஸ்தானில், ஜோத்பூரில், நிர்மல் கெலாட் என்ற சமூக ஆர்வலர், புதுமை முயற்சியாக, ஆக்சிஜன் வங்கி ஒன்றைத் துவக்கியுள்ளார் என்பது ஆறுதல் தரும் செய்தி. இவரது தாய், கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டதால், இவர், ஆக்சிஜன் வங்கியை துவக்கி, ஆக்சிஜனை சேகரிக்கும் சிறிய கருவிகளை வாங்கியுள்ளாராம். இந்த கருவியின் விலை, 40 ஆயிரம் ரூபாய். இந்த கருவி, வெளியில் உள்ள காற்றை சேகரித்து, அதிலிருந்து நைட்ரஜனை பிரித்து, ஒவ்வொரு நிமிடத்துக்கும், 5 லிட்டர் சுத்தமான ஆக்சிஜனை வழங்கும். இந்த கருவியில் குழாயை இணைத்து, வீட்டிலேயே, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை வழங்க முடியும். இந்த கருவியை, தினமும். 100 ரூபாய் வாடகைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக, நிர்மல் கெலாட் அவர்கள் அறிவித்துள்ளார். (தினமலர் செய்தி, ஆக்சிஜன் வங்கி)

நலமாக வாழ..

நாம் ஒவ்வொருவரும் நம் குடும்பங்களுக்குக் கொடுக்கக்கூடிய பெரிய அன்பளிப்பு, நம் நலமான வாழ்வு. எனவே, மனித உடலின் அதிசயங்களை அறிந்து, வியந்து, கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, நமக்கு வழிகாட்டப்படும் நாட்டு மருந்துகள் மற்றும், ஏனைய விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வைப் பாதுகாத்துக்கொள்வோம். இப்பெருந்தொற்று பற்றிய அச்சமே, பலரின் உயிரைக் காவு வாங்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. எனவே பயத்தை அகற்றுவோம். கல்யாணமாலை அமைப்பு நடத்திய நிகழ்வில், ஆன்மா பற்றி உரையாற்றிய, திரு.இந்திரா சொளந்தர்ராஜன் அவர்கள் கூறியதுபோன்று, நம் உயிர் நம் கையில் இல்லை. அது எப்போது போகும் என்று யாருக்குமே தெரியாது. நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. இன்னும் சொல்லப்போனால் நம் வாழ்க்கை ஓர் அச்சிடப்பட்ட புத்தகம். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு நாள். அந்த பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் நடக்கிறது. இந்த உலகத்தில் அதை மாற்றுவதற்கு யாரும் இல்லை. இதுவரை மாற்றியவரும் இல்லை. வாழ்க்கையில் எதுவுமே நாம் நினைப்பது போல் நடப்பது இல்லை. அவ்வாறு நடப்பதைப்போல நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு நடக்க நடக்க அதை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றவர்களாகவும் இருக்கிறோம். 700 கோடி மக்களுக்கும் இது பிசகாமல் நடந்துகொண்டிருக்கின்றது. (திரு.இந்திரா சொளந்தர்ராஜன்). மருத்துவர் சாய் சதீஷ் அவர்கள், கல்யாணமாலை அமைப்பு நடத்திய அந்த நிகழ்வில், சிறுவயதில் பசித்தால் அழுகை. களைப்பானால் தூக்கம். ஆனால் நாம் வளர வளர இதயத்தின், உடலின் பேச்சைக் கேட்கத் தவறுகிறோம். பசித்தாலும் சாப்பிடாமல் வேலைசெய்கிறோம். ஆனால் வயதானபின் இதயத்தின் பேச்சைக் கேட்க ஆசைப்படுகிறோம். ஆனால் அது முடிவதில்லை. எனவே நம் உடல், இதயம் நம்மிடம் பேசுவதற்குச் செவிசாய்ப்போம் என்று கூறினார். பல பெரியோர் சொல்வது போல, காலாற நடந்து, கண்ணயர்ந்து தூங்கி, வயிறாரச் சாப்பிட்டு, மனதார சிரித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.

26 April 2021, 15:24