தேடுதல்

சமுதாய ஆர்வலர் சிந்துதாய் சப்கல் சமுதாய ஆர்வலர் சிந்துதாய் சப்கல்  

வாரம் ஓர் அலசல்: கருணையின் சக்தி

எனக்கு வாழ்வில் நிகழ்ந்த அனைத்துமே மற்றவரின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர எனக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் கொடைகளாகக் கருதுகிறேன்- சிந்துதாய்

மேரி தெரேசா: வத்திக்கான்

“எப்போதெல்லாம் உன்னால் இயலுமோ அப்போதெல்லாம் கருணை காட்டு. ஆனால் இது எப்போதுமே இயலக்கூடியது. அன்பும், கருணையும் ஆடம்பரமானவை அல்ல, அவை அவசியமானவை. இவையில்லாமல் மனிதநேயம் தொடர்ந்து வாழமுடியாது” என்பது 14வது தலாய் லாமா அவர்களின் பொன்மொழி. “அன்பும், கருணையும் ஒருபோதும் வீணாவதில்லை. ஏனெனில் அவையிரண்டுமே, அவற்றைப் பெறுபவரையும், கொடுப்பவரையும் ஆசீர்வதிக்கும்” (Barbara de Angelis). கருணை காட்டுங்கள், பரிவன்போடு நடந்துகொள்ளுங்கள் என்ற அழைப்புகளை, இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிக அதிகமாகவே கேட்டுவருகிறோம். உலகில் கருணைநிறை வாழ்வுமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் திகழ்பவர்களின் கடந்தகால வாழ்வுப் பாதை நம்மை பிரமிக்க வைக்கின்றது. இவர்களில் ஒருவர்தான், சிந்துதாய் சப்கல் (Sindhutai Sapkal). இந்திய குடிமகளாகிய இவர், அனாதைகளின் தாய், உலகை திரும்பிப் பார்க்க வைத்த தாய்.. என்றெல்லாம் போற்றப்படுகிறார். இவர், 273க்கு மேற்பட்ட, உள்நாட்டு மற்றும், பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். 'உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்' என்று கேட்டால், உடனே அவர் தயங்காமல் சொல்வது ''1,500க்கு மேல்" என்று. உங்கள் குடும்பம்...?  என்று கேட்டால், ''207 மருமகன்கள், 36 மருமகள்கள், பேரன் பேத்திகள் என ஆயிரத்திற்கும் மேலே இருக்கும். இவ்வாறு, மற்றொரு அன்னை தெரேசாவாக வாழ்ந்துவரும் சிந்துதாய் அவர்களின், முந்தைய வாழ்வைத் திரும்பிப் பார்த்தால், கல்லான மனதும் கரைந்துருகிவிடும்

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!

சிந்துதாய் சப்கல் அவர்கள், மகாராஷ்டிர மாநிலத்தின், வார்தா மாவட்டத்தில், பிம்ப்ரி மேகி (Pimpri Meghe) என்ற கிராமத்தில், 1948ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி,  ஆடுமாடுகள் மேய்க்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ‘சிந்தி’ என்றால், மராத்தி மொழியில் ‘கிழிந்த துணி’ என்று அர்த்தம். சிந்துதாய், பெற்றோருக்கு கூடுதல் சுமையாக வந்து பிறந்தார் என்று, அவருக்கு, அந்தப் பெயர் சூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எழுதுபலகை வாங்கக்கூட வசதி இல்லாததால், பாரதி மரத்தின் (Bharadi Tree) இலைகளில், இவர் எழுதிப் படித்தார். நான்காம் வகுப்பு படித்து முடித்த சமயத்தில், அதாவது, இவருக்கு ஒன்பது வயதானபோது, ஸ்ரீஹரி ஹர்பாஜி எனும், முப்பது வயது நிரம்பிய, மாடுமேய்க்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். 19 வயதுக்குள் மூன்று ஆண் பிள்ளைகளுக்கு, இவர் தாயானார். பண்ணையார் ஒருவர், சிந்துதாய் வாழ்ந்த கிராமத்தில், மக்களை, குறிப்பாக, பெண்களை மிரட்டி அதிகமாக வேலை வாங்கியதோடு, வேலைக்குரிய கூலியையும் சரியாகக் கொடுக்காமல் இருந்தார். எனவே, சிந்துதாய், அந்த நபர் பற்றி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று, கிராம மக்களுக்கு சாதகமாக, தீர்ப்பும் பெற்றுக்கொடுத்தார். இதுதான், சிந்துதாய் அவர்களை, பெருந்துன்பங்கள் துரத்தக் காரணமாய் அமைந்தது. சிந்துதாயின் இந்தச் செயலால் கோபமடைந்த அந்த பண்ணையார், சிந்துதாய், தன்னோடும், பல ஆண்களோடும் தகாத உறவு வைத்துள்ளார், இப்போது அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்குக்கூட நான்தான் தந்தை என்று, அவரின் கணவரிடம் பொய்யான தகவலைச் சொன்னார். மேலும், நீ அவளைக் கொல்லாவிடில் நான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்றும், அந்த நபர் சிந்துதாயின் கணவரை மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த சிந்துதாயின் கணவர், அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிந்துதாயின் வயிற்றிலே பலம்கொண்ட மட்டும் பலமுறை மிதித்து உதைத்து, நள்ளிரவில் மாட்டுத்தொழுவத்தில் அவரைத் தூக்கி வீசினார். சுயநினைவிழந்து கிடந்த சிந்துதாய், மாடுகள் மிதித்து இறந்துவிட்டார் என கிராமத்தினரை நம்ப வைப்பதற்காக அவ்வாறு அவர் செய்தார். சிந்துதாய்க்கு நினைவு திரும்பியபோது, தான் ஒரு பசுமாட்டின்கீழ் கிடந்ததை, அவர் கண்டார். அந்த பசு, அங்கிருந்த எருமை மாடுகளையும், காளைகளையும், சிந்துதாயின் அருகில் வரவிடவில்லை. அங்கு வந்த மனிதர்களையும், அந்த பசு தன் கொம்புகளால் சீறி விரட்டியது. சிந்துதாய், அந்தப் பசுவின் பாதுகாப்பிலே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அங்குக் கிடந்த ஒரு கருங்கல்லை எடுத்து தனது தொப்பிள்கொடியை இருபது துண்டுகளாக அறுத்து வீசினார். சிறிது சக்தி பெற்றவுடன் எழுந்து, அந்தப் பசுவைத் தடவி, முத்தம் கொடுத்து, நீ என்னைப் பாதுகாத்தது போல, தேவையில் இருக்கும் எல்லாருக்கும் நான் உதவுவேன் என்று உறுதி சொல்லி அங்கிருந்து வெளியேறினார் சிந்துதாய். பின்னர், அவர் தன் சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு அவரது குடும்பமும் அவரை ஏற்க மறுத்துவிட்டது.  சொந்த ஊரிலிருந்து திரும்பிய சிந்துதாய், தெருவில் பிச்சையெடுத்து தன் குழந்தையைக் காப்பாற்றத் தொடங்கினார். ஆண்களுக்குப் பயந்து, இரவு நேரங்களில் சுடுகாட்டில் தங்கினார். பிணங்களுக்குப் போடப்படும் கோதுமை மணிகளை எடுத்து கழுவி, பிணங்கள் எரியும் நெருப்பில் சமைத்து உண்டார். இதனால் இவரை மக்கள், ஆவி என்றே அழைத்தனர். ஒருகட்டத்தில், தற்கொலைதான் ஒரே தீர்வு என நினைத்த சிந்துதாய், இரயில் தண்டவாளத்தில் தன் பச்சிளம்குழந்தையைக் கிடத்திவிட்டு, இரயில் வருவதற்காக, காத்திருந்தார். அச்சமயத்தில், வயதான ஒருவரின் அழுகுரல் அவருக்கு கேட்டது. ஏறத்தாழ மாற்றுத்திறனாளியாக இருந்த அந்த முதியவர், உணவு மற்றும், தண்ணீருக்காக ஏங்கினார். உடனே இரயில் நிலையத்தில் பிச்சையெடுத்து அந்த முதியவருக்கு உதவினார். அந்த முதியவரின் குரலை கடவுளின் குரலாக நினைத்தார் சிந்துதாய். தற்கொலை செய்துகொள்வதைவிட்டு, இந்த உலகிற்கு ஏதோ மேலான ஒன்றைச் செய்யுமாறு அந்தக் குரல் கூறுவதாக நினைத்தார். எனவே சிந்துதாய், அதே நாளில், ஒரு மரத்தடியில் கைக்குழந்தையோடு உட்கார்ந்துகொண்டு, எனக்கென யாரும் இல்லை, என்னிடம் எதுவுமே இல்லை, நான் எவ்வாறு மற்றவருக்கு உதவமுடியும் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார்.

சிந்துதாயின் புதிய வாழ்வு

அந்நேரத்தில், சிந்துதாய் அவர்கள், அந்த மரத்தின் ஒரு கிளையை ஒருவர் ஓங்கி ஓங்கி வெட்டிக்கொண்டிருந்ததைக் கவனித்தார். அந்தக் கிளை சரிந்து, சிந்துதாய்க்கும், அவரது மகளுக்கும் நிழல் கொடுப்பதைப் பார்த்தார். இதுவே தனது கேள்விக்குப் பதில் என்பதையும் சிந்துதாய் உணர்ந்தார். தான் எவ்வளவுதூரம் அடித்து வதைக்கப்பட்டிருந்தாலும், மற்றவருக்கு ஏதாவது என்னால் செய்யமுடியும் என்று நினைத்தார் சிந்துதாய். உடனே அங்கிருந்து புறப்பட்டு, வீடற்று, கைவிடப்பட்டு, தெருவில் அலைந்த அனாதைச் சிறாரைத் தேடி, அவர்களுக்குத் தாயாக இருக்கத் தொடங்கினார். எப்படியோ நன்றாகப் பாடவும் கற்றுக்கொண்டு, பாடியே பிச்சையெடுத்து, அந்தச் சிறாரைக் காப்பாற்றினார். நாளடைவில் சிந்துதாயைக் கவனித்த மக்கள், அவருக்கென கருணை இல்லம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தனர். தற்போது அவரது கருணை இல்லத்தில் 1,500க்கும் மேற்பட்ட அனாதைச் சிறார் உள்ளனர். அவர்களை மருத்துவர்களாக, கல்வியாளர்களாக, வழக்கறிஞர்களாக, விவசாயிகளாக, அவர் உருவாக்கியுள்ளார். சிந்துதாய் அவர்களின் சமுதாயநலப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு 2021ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதும், அளிக்கப்பட்டுள்ளது.

சிந்துதாயின் முன்னாள் கணவர்

இதற்கிடையே, சிந்துதாயின் முன்னாள் கணவர், வீடின்றி தனித்துவிடப்பட்ட நிலையில் தனது எண்பதாவது வயதில் சிந்துதாயிடம் தஞ்சம் கேட்டுச் சென்றார். அவரை விரைவில் அடையாளம் கண்டுகொண்ட சிந்துதாய், அவரைத் தான் மன்னிப்பதாகவும், இப்போது மனைவியாக இல்லாமல், ஒரு தாயாக அவரை ஏற்பதாகவும் கூறியுள்ளார். அந்த கருணை இல்லத்திற்கு வருவோரிடம் அவரை, தன் மூத்த மகன் என்றே அறிமுகம் செய்து வைக்கிறார் சிந்துதாய். பசுமாட்டின் பாதுகாப்பில் பெற்றெடுத்த பெண் குழந்தையை, மற்றோரு அறக்கட்டளைக்குத் தத்து கொடுத்துள்ளார். அந்தக் குழந்தை இன்று, மருத்துவராக, மற்றொரு கருணை இல்லத்தை பராமரித்து வருகிறார். சிந்துதாய் அவர்கள், 84க்கும் மேற்பட்ட கிராமங்களின் புனர்வாழ்வுக்காகவும் போராடியுள்ளார்.

வேதனைகளை இறையாசீராக ஏற்ற துசிந்துதாய்

“துன்பமும், மன்னிப்பும், ஒருவரை எவ்வளவு சிறந்தவர்களாய், வலிமையானவர்களாய் மாற்றுகின்றன என்பதையும், எத்தனை இடர்கள் நேர்ந்தாலும், தன் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை வைப்பதன் பயனையும் உணர முடிகின்றது. வாழ்க்கையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற பேரார்வம் இருந்தால், அந்த உங்கள் இலட்சியத்திலிருந்து உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது”. இவ்வாறெல்லாம், சிந்துதாய் அவர்களிடமிருந்து சிறந்த வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக, பலர் பதிவுசெய்துள்ளனர். “எனக்கு வாழ்வில் நிகழ்ந்த அனைத்துமே மற்றவரின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர எனக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் கொடைகளாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைப் பாதை, நிறைய முள்களாலானது. ஆனால் நான் அந்த முள்களை எனது நண்பர்களாக்கிக்கொண்டேன். அதனால் எனது வாழ்வும் அழகானதாக மாறியுள்ளது. அந்த அழகை நான் பலருக்கு அளிக்க முடியும்”.  சிந்துதாய் அவர்களை, புனே நகரில் சந்தித்தபோது, இவ்வாறு அவர் தன்னிடம் கூறியதாகவும், ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை, உங்களது வாழ்க்கையையும் மாற்றும் என்றும், Redhanath Swami அவர்கள், ஒரு நிகழ்வில் கூறியுள்ளார். பெருஞ்செல்வமின்றி செல்வாக்குப் பெற முடியும், கருணையின் சக்தி, பணபலம் செய்துகாட்டுவதைவிட மிக மிகப் பெரியது. பணம், அறிவு, திறமை போன்ற சக்திகள், கருணை என்ற பண்பை அடித்தளமாகக் கொண்டு அமைப்பவரின் வாழ்வு வளம்பெறுவது மட்டுமல்ல, உலகிலும் பெரியதொரு நல்தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இரக்கத்தின் கருவிகளாக நாம் வாழ்வதே, உலகில் உண்மையான நல்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே, ஒற்றை மனிதராகச் சாதித்துள்ள, சிந்துதாய் அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் எனவும், Redhanath Swami அவர்கள், கூறியுள்ளார். இறை இரக்க விழாவாகிய ஏப்ரல் 11, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், நாம் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுள்ளோம், இரக்கமுள்ளவர்களாக வாழ்வோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.       

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2021, 14:56