தேடுதல்

Vatican News
மியான்மார் நாட்டில் நீதிவேண்டி போராடி வரும் இளையோர் மியான்மார் நாட்டில் நீதிவேண்டி போராடி வரும் இளையோர் 

மியான்மாரும், சிரியாவைப்போல் மாறும் ஆபத்து - ஐ.நா. அதிகாரி

மியான்மார் நாட்டின் மீது அரசியல் அழுத்தம் கொடுக்கும் சக்தி பெற்றுள்ள நாடுகள் இணைந்து, இந்த வன்முறைகளைத் தடுக்க, கூட்டுமுயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் நீதிவேண்டி போராடி வருவோர் மீது நடத்தப்படும் வரம்பு மீறிய அடக்குமுறைகள், நாடெங்கும் ஒரு பெரிய மோதலாக வெடிக்கும் ஆபத்து உள்ளது என்றும், இந்நிலை, சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலையை ஒத்ததாக இருக்கும் என்றும், ஐ.நா. நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஏப்ரல் 13, இச்செவ்வாயன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. நிறுவனத்தின் மனித உரிமை அவையின் தலைவர், Michelle Bachelet அவர்கள் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையில், மியான்மார் நாட்டைக் குறித்து வெறும் கண்டன கூற்றுகளை வெளியிட்டு வருவது அந்நாட்டில் நிலவும் வன்முறைகளைத் தடுக்காது என்றும், அந்நாட்டின் மீது அரசியல் அழுத்தம் கொடுக்கும் சக்தி பெற்றுள்ள நாடுகள் இணைந்து, இந்த வன்முறைகளைத் தடுக்க, கூட்டுமுயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று, போராட்டக் குழுவினர் மீது இராணுவத்தினர் செலுத்திய ஏவுகணையினால், 82 பேர் கொல்லப்பட்டதையடுத்து ஐ.நா. அதிகாரி Bachelet அவர்கள் இந்த அவசர விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

வன்முறையில் காயமுற்றோருக்கு மருத்துவ உதவிகள் செய்வோரைத் தடுப்பதிலும், இறந்தோரைப் புதைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுப்பதிலும் மியான்மார் இராணுவம் ஈடுபட்டுள்ளது என்பதை, Bachelet அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு சிரியாவில் உருவான மோதல்களைப் போல், தற்போது, மியான்மார் நாட்டு மோதல்கள் மாறிவருகின்றன என்று கூறிய Bachelet அவர்கள், சிரியாவிலும், ஆரம்பத்தில், அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்கள், மிகக் கடுமையான முறையில் அடக்கப்பட்டதையடுத்து, அந்நாட்டில் ஆயுதம் தாங்கிய மோதல்கள் ஆரம்பமாயின என்பதைச் சுட்டிக்காட்டினார்.

சிரியாவில் உருவான நிலையைக் குறித்து ஐ.நா. நிறுவனம் அவ்வேளையில் விடுத்த எச்சரிக்கைக்கு உலக நாடுகள் சரியாக பதிலிறுப்பு செய்யவில்லை என்பதை நினைவுறுத்திய Bachelet அவர்கள், அதே நிலை, தற்போது மியான்மார் நாட்டிலும் உருவாகக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் மியான்மார் நாட்டில் நடைபெறும் போராட்டங்களில் இதுவரை 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், குறைந்தது 3,080 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 23 பேருக்கு இரகசியமான விசாரணைகள் நடத்தப்பட்டு, மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் அவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. (UN)

14 April 2021, 15:49