தேடுதல்

Vatican News
பாகுபாடுகள் முற்றிலும் அற்ற உலக நாள் அடையாளம்   பாகுபாடுகள் முற்றிலும் அற்ற உலக நாள் அடையாளம்   (ANSA)

வாரம் ஓர் அலசல்: யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்?

சாதி உண்டு, ஆனால், அவை இரண்டே இரண்டுதான். பிறருடைய துன்பம் பார்த்து அவர்களுக்குப் பொருள் கொடுப்பவர்கள் உயர்ந்த சாதி, அப்படிக் கொடுக்கும் குணம் இல்லாத கஞ்சர்கள், தாழ்ந்த சாதி - அவ்வையார்

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்த ஆசிரம குரு, ஒவ்வொரு நாளும் காலையில் குளிக்கப்போகும்போது, அங்கு இருந்த மேல்தட்டு சீடர் ஒருவரின் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு செல்வார். குளித்துவிட்டு வரும்போது, அங்கிருந்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சீடர் ஒருவரின் தோள்மீது கைபோட்டுக்கொண்டு நடந்து வருவார். இதைக் கவனித்துக்கொண்டிருந்த மேல்தட்டு சீடர்கள், இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என்று தங்களுக்குள்ளே கலந்து பேசினர். குரு குளிக்கச் சென்றவுடன், அந்த ஒடுக்கப்பட்ட சாதி சீடரை வெளியே அனுப்பிவிடுவது என தீர்மானித்தனர். அன்று குரு, குளிக்கச் சென்றவுடன், அவ்வாறே, அவர்கள் செய்தனர். குரு குளித்துவிட்டு திரும்பி வந்தபோது, வழக்கம்போல், அந்த குறிப்பிட்ட சீடரைத் தேடினார். அவரைக் காணவில்லை. மற்ற சீடர்களிடம், அந்த சீடர் எங்கே என்று குரு கேட்டார். அதற்கு மற்ற சீடர்கள், குருவே, அந்தச் சீடர் இல்லாவிட்டால் என்ன, நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, அவர்களில் ஒரு சீடர் குருவின் முன்வந்தார். அப்போது அந்தக் குரு, தான் போட்டிருந்த மேல்துண்டை மறுபடியும் தண்ணீரில் நனைத்து, அதை அந்த மேல்தட்டு சீடரின் தோள்மீது வைத்து, தன் கரங்களை அதன்மீது வைத்தார். அப்போது அந்த சீடர், குருவே, நான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் இல்லையா, எதற்கு இப்படி... என்று வியப்போடு கேட்டான். அதற்கு அந்தக் குரு, உயர்ந்த சாதியின் தீட்டு எனக்கு வரக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று பதில் சொன்னார். திருவாளர்  சுகி சிவம் அவர்கள், தன் சொற்பொழிவு ஒன்றில், இந்த நிகழ்வை குறிப்பிட்டு, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு குரு வாழ்ந்திருக்கிறார் என்பது வியப்பைத் தருகிறது என்று கூறினார். அந்த நிகழ்வு தனக்குள் உணர்த்திய சிந்தனை ஒன்றையும், சுகி சிவம் அவர்கள் பதிவுசெய்தார்.

நான் இன்னொருவரைவிட உயர்ந்தவன் என்று எண்ணும் எண்ணத்தைவிட, கேவலமான ஓர் எண்ணம், இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. அத்தகைய எண்ணம், கீழ்மையிலும் கீழ்மையான கேடுகெட்ட எண்ணம். இந்த உலகத்தில், நான் மேலானவன் என்று எண்ணுவதைவிட, கீழானதோர் எண்ணம் எதுவுமே இருக்க முடியாது. சைவம் சாப்பிடுகிறவர்கள், அசைவம் சாப்பிடுகிறவர்களைவிட ஆயிரம் மடங்கு புனிதம் என்ற ஆணவத்தோடு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அசைவம் சாப்பிடுகிறவர்கள் தாழ்ந்தவர்களா? சைவம் சாப்பிடுகிறவர்கள் உயர்ந்தவர்களா? கிடையவே கிடையாது. நான் சைவம் சாப்பிடுகிறேன் என்ற உயர்வான எண்ணம் எழுகின்ற அழுக்கு மனம் இருக்கிறதே, அதுதான், அசைவம் வெளிப்படுத்தும் நாற்றத்தைவிட பெரிய நாற்றத்தை வெளிப்படுத்தும். நான் மற்றவரைவிட உயர்ந்தவன் என்று நீ நினைத்தால், அப்போது நீ கடவுளுக்கு விரோதியாகிறாய். நான் மற்றவரைவிட உயர்ந்தவன் என்று நீ நினைத்தால், அப்போது நீ கடவுளுக்கு பகைவனாகிறாய் என்பதை, திருவாளர்  சுகி சிவம் அவர்கள், ஒருமுறைக்குமேல், அந்த சொற்பொழிவில் கூறியுள்ளார். நம்மில், உயர்ந்தவர், தாழ்ந்தவர், நானா நீயா என்ற போட்டி மனப்பான்மையோ, சிந்தனையோ, எண்ணமோ எழுந்தால், அது, தற்பெருமையை, ஆணவத்தையே வளர்க்கும். இன்று உலகில், நானா, நீயா என்ற போட்டி பல்வேறு பரிணாமங்களில் நடந்தேறி வருகிறது.

மியான்மார் நிலவரம்

மியான்மாரில், இந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி, இராணுவம் நடத்திய அராஜக நடவடிக்கையை எதிர்த்து, அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பிப்ரவரி 28ம் தேதி, இஞ்ஞாயிறன்று, யாங்கூனில் மக்கள், பெரிய அளவில் போராட்டம் நடத்தியவேளை, அந்த போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய, கண்ணீர் புகை மற்றும், உயிர்க்கொல்லி குண்டு வீச்சு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர், மற்றும், முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை குறித்து, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமை பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இந்த வன்முறைக்கு எதிரான தங்களின் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு, வன்முறையைப் பயன்படுத்துவது நிறுத்தப்படுமாறு மியான்மார் இராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகில் அப்பாவி மக்களின் நீதிக்கான குரல்கள் அமுக்கப்படுகின்றன. தங்களை உயர்வாகவே கருதும் அதிகாரிகளின் வன்முறைக் கரங்கள் வலுவடைந்து வருகின்றன. இந்தியாவில், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை இரத்துசெய்யக்கோரி, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக, விவசாயிகள் மேற்கொண்டுவரும் நீதிப் போராட்டம் பற்றி நாம் அறிந்ததே.

அருள்பணி ஸ்டான் சுவாமி

மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சமுதாயப் போராளியான, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், உயர் சாதியினரால் துன்புறுத்தப்பட்ட, தங்களின் நியாயமான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட, தலித் மற்றும், பழங்குடி இன மக்களுக்காக, தன்னை அர்ப்பணித்திருந்தவர். அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தலோஜா சிறையிலிருந்து எழுதியுள்ள மடல்கள், ஏழைகள் எதிர்கொள்ளும் துன்பங்களை தோலுரித்துக் காட்டுகின்றன. தலோஜா சிறையில், அறிவாளிகள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள், மாணவத் தலைவர்கள் போன்ற பலரும் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்திய ஆளும் சக்திகளுக்கு இணங்காமல், அவர்களை எதிர்த்து கேள்விகளைக் கேட்டதாலே இந்நிலை.  ஏழைகளுக்கான நீதியைப் பெறும் என் பயணத்தில் இவர்கள் என் புதுத் தோழர்கள். தலோஜா சிறையில், கைதிகளுக்கு மத்தியில் மனிதாபிமானம் குமிழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இங்கு நீ என்பது முதலில் வர, நான் என்பது பிறகே வர, நாம் என்பதே சுவாசக் காற்றாய் இருக்கிறது. இங்கே நிறைய இளம் முகங்களைப் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. தலோஜா சிறையில் நிலவும் பொதுவுடைமைப் பண்பை எல்லா மனிதர்களும், சுய விருப்பமாக, சுய சுதந்திரமாக ஆரத்தழுவிக்கொள்வார்களேயானால், எல்லாருமே இப்பூமித்தாயின் உண்மையான குழந்தைகள் ஆகிவிடுவார்கள்.

பாகுபாடுகள் முற்றிலும் அற்ற உலக நாள்   

மார்ச் 01, இத்திங்கள் பாகுபாடுகள் முற்றிலும் அற்ற உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாளில், பாகுபாடுகள் முழுவதுமாக அகற்றப்படவேண்டும் என்ற குரல்கள் உரக்க ஒலித்தன. இதற்குப் பதில் அளிக்கும் முறையில், ஐ.நா.வின் தீர்மானத்தின்படி, 2014ம் ஆண்டு மார்ச் முதல் தேதி, இந்த உலக நாள், முதன் முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. வயது, பாலினம், தேசியம், இனம், நிறம், உயரம், உடல் எடை, தொழில், கல்வி, மத நம்பிக்கை போன்ற பாகுபாடுகளின்றி, அனைவரும் வாழ்வை, மாண்புடன் முழுமையாக வாழ்வதற்கு இந்நாள் அழைப்பு விடுக்கிறது. ஆயினும் பல நாடுகள், பாகுபாட்டிற்கெதிரான சட்டங்களைக் கொண்டிருக்கின்றன. பல நாடுகள், நிர்வாகத்தின் ஒரு பாதையாக, பாகுபாடுகளைப் பயன்படுத்துகின்றன. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும், பாகுபாடு என்பது ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமையான்’ என்று, வள்ளுவர் குறள் எழுதி, குலத்தால் உயர்வு தாழ்வு பாராட்டும் கொடுமையை அன்றே கடுமையாய்க் கண்டித்திருக்கிறார். அவ்வைப் பாட்டியும், சாதி உண்டு, ஆனால், அவை இரண்டே இரண்டுதான். பிறருடைய துன்பம் பார்த்து அவர்களுக்குப் பொருள் கொடுப்பவர்கள் உயர்ந்த சாதி, அப்படிக் கொடுக்கும் குணம் இல்லாத கஞ்சர்கள், தாழ்ந்த சாதி என்று அன்றே சொன்னார். மகாகவி பாரதியும், சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! என்று பாடினார்.

ஆன்மிகத்தின் உயர்ந்த நோக்கம், இறைவனை அடைவதுதான். அவரை அடைவதற்கு சாதி ஒரு தடையே இல்லை. எனவே, நாடு, இனம், நிறம், வயது, பாலினம், உயரம், உடல் எடை, தொழில், கல்வி, மத நம்பிக்கை போன்ற பாகுபாடுகளை அகற்றி, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற அழுக்கான எண்ணம் அகற்றி, மனித உடன்பிறந்த உணர்வோடு, அனைவரையும் நம் சகோதரர், சகோதரிகளாக ஏற்று வாழ்வோம். கோவிட்-19 சூழலில் இந்தப் பண்பு மிகவும் தேவைப்படுகின்றது. “ஒரு சிறிய புள்ளி, ஒரு பெரிய வாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஆனால் மேலும் சில புள்ளிகள் தொடர்ச்சியைக் கொடுக்கும். ஆம். ஒவ்வொரு முடிவும், புதியதொரு ஆரம்பம்” (Kingsley Glass).

01 March 2021, 14:53