தேடுதல்

Vatican News
உலக மகிழ்ச்சி நாள் மார்ச் 20 உலக மகிழ்ச்சி நாள் மார்ச் 20 

வாரம் ஓர் அலசல்: ஆசீர்களைக் கொண்டாடுவது மகிழ்ச்சி

நாம் சரியானதொரு வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை நிரூபிப்பது, அந்த வாழ்க்கை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியில் அடங்கியுள்ளது.

மேரி தெரேசா: வத்திக்கான்

நகருக்கு ஒதுக்குப் புறத்தில், ஓலைக் குடிசை ஒன்றில், துறவி ஒருவர், சீடர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் இருவரும், ஆண்டின் ஆறு மாதங்கள் தவறாமல் காட்டுக்குச் சென்று கடுமையான தவ வாழ்வை பயிற்சி செய்துவந்தனர். ஆறு மாதங்கள் சென்று, குடிசைக்குத் திரும்பி, கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் காட்டுக்குச் சென்று அதே பயிற்சியை, அடுத்த ஆறு மாதங்களுக்கு மேற்கொண்டு வந்தனர். இவ்வாறு அவர்கள், ஒருமுறை தவத்தை முடித்து திரும்பும்போது, அவர்களின் குடிசையின் பாதிப் பகுதி, காற்றினால் அதிகம் சேதமடைந்திருந்ததைக் கண்டனர். குடிசையின் மேற்கூரையைக் காணவில்லை. அதைப் பார்த்து மிகவும் கவலையடைந்த சீடர், குருவிடம், ஐயா, இதில் ஆன்மீக நீதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆறு மாதங்களாக, ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான எல்லாத் தவங்களையும், வழிபாடுகளையும் மேற்கொண்டோம். அவற்றையெல்லாம் முடித்து திரும்பிவரும்போது, நம் வாழ்வு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும், ஆனால் இப்போது நமது குடிசை இவ்வளவு சேதமடைந்திருக்கிறது. இன்று இரவு குளிர் அதிகமாக இருக்குமே என்று கூறினார்.

அந்த சீடர் இவ்வாறு புகார் சொல்லிக்கொண்டிருக்கும்போது, குருவோ, முழந்தாள்படியிட்டு இரு கரங்களையும் விரித்தபடி இறைவேண்டல் செய்துகொண்டிருந்ததை சீடர் கவனித்தார். ஆண்டவரே உமது வழிகள் எல்லாம், எப்போதும் உம் வழிகளே. ஆறு மாதங்கள் நாங்கள் தவத்தை மேற்கொண்டோம். ஆறு மாதங்களாக நாங்கள் குளிக்கவே இல்லை. இயற்கையான காற்றின் மீதே எப்போதும் கவனம் செலுத்தி, அதை அனுபவித்துக்கொண்டிருந்தோம். நான்கு பக்கமும் அடைக்கப்பட்டிருக்கும் எங்களது குடிசைக்குள் எவ்வாறு செல்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம், ஆனால் ஆண்டவரே, உமது கருணைக்கு எல்லையே இல்லை, தாங்கள் ஏற்கனவே காற்றை அனுப்பி, குடிசையின் மேற்கூரையைத் திறந்து விட்டுள்ளீர், அதன் வழியாக எங்களுக்கு இயற்கையான காற்று கிடைக்கச் செய்துள்ளீர், நன்றி ஆண்டவரே என்று குரு செபித்துக்கொண்டிருந்தார். குருவின் செபத்தைக் கேட்ட சீடருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நமக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது, அதற்கு குரு நன்றி சொல்கிறார், நாம் மேற்கொண்ட தவத்தில் ஏதும் குறை உள்ளதோ? என்று சீடர் மனதிற்குள்ளே நினைத்தார். ஆயினும் அதை வெளியிலே காட்டிக்கொள்ளாமல், சீடர், குருவுடன் குடிசைக்குள் சென்றார். மன அமைதியை இழந்த சீடர், அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்.

இறைவழி பற்றி உரைகள் ஆற்றும், Mahatria அவர்கள், இந்த கதையைச் சொன்னதோடு, இந்த கதை, இரு படிப்பினைகளை உணர்த்துகின்றது என்றும் கூறியுள்ளார்.  ஒன்று,  புகார் கூறும் மனது ஒருபோதும் மகிழ்ச்சியை அனுபவிக்காது. மற்றொன்று, நன்றியுள்ள நெஞ்சம், எப்போதும் மன அமைதியை அனுபவிக்கும். அந்த குருவின் இதயம் முழுவதும் நன்றியால் நிறைந்திருந்தது. அதனால் அவரால் அமைதியாக உறங்க முடிந்தது. அதற்கு நேர்மாறாக, சீடரின் இதயம் புகார்களால் நிறைந்திருந்தது. அதனால் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. வாழ்க்கையில், நம் எதிர்பார்ப்புக்களுக்கு எதிராக காரியங்கள் நடைபெறும்போது, நம்மில் பலர், புகார் கூறும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். வெப்பம் அதிகமாக இருந்தால், குளிர்  அதிகமாக இருந்தால், மழை பெய்தால், மழை பெய்யாவிட்டால், சாலைகள் ஒழுங்காக இல்லாவிட்டால், வாகன நெருக்கடி இருந்தால்,  உணவு ருசியாக இல்லையென்றால், இவ்வாறு எல்லாமே பிரச்சனையாக நமக்குத் தெரிகின்றன. எல்லாவற்றுக்குமே புகார் சொல்கிறோம். புகார் சொல்லும் மனது ஒருபோதும் மன அமைதியோடு இருப்பதில்லை. அதனால் மகிழ்ச்சியாகவும் அதனால் இருக்க முடிவதில்லை. அதற்கு மாறாக, வாழ்க்கையில் நன்றியுணர்வோடு இருப்பவர்கள், மன அமைதியோடு, மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் எல்லாமே சரியாகச் சென்றுகொண்டிருக்கின்றது என்பது இல்லை, ஆனால் அவர்கள், தங்கள் வாழ்க்கையில் சரியாகச் செல்வது, எது என்பதை மட்டுமே நோக்குகின்றனர். அந்தக் குடிசையில் அந்த குருவும், சீடரும் அன்று இரவு படுத்திருந்த நேரத்தில் மழை பெய்தது. குடிசை நனைந்தது சீடர், கோபத்தில் குடிசைக்கு வெளியே வந்தார். ஆனால் குருவோ, அந்த நேரத்திலும், கரங்களை அகல விரித்து, ஆண்டவரே, உமது வழிகள் எல்லாம், எப்போதுமே உமது வழிகளே. நாங்கள் ஆறு மாதங்களாக குளிக்காமல் இருந்ததற்கு இப்போது மழையால் எங்களைக் குளிப்பாட்டி தூய்மைப்படுத்தியுள்ளீர், நன்றி என்று நடனமாடிச் செபித்துக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் சீடர், அவரிடம் சென்று, குருவே வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. இப்போது எல்லாமே தவறுதலாகச் சென்று கொண்டிருக்கின்றன, ஆண்டவரே உமது வழிகள் எல்லாம் உமது வழிகளே, நன்றி, நன்றி என்றே சொல்கிறீர்கள், நன்றி சொல்வதற்கு, இங்கு என்ன இருக்கிறது என்று கேட்டார். சீடர் சொல்வதைக் கேட்ட குரு, நடனமாடுவதை நிறுத்திவிட்டு, சீடர் பக்கம் திரும்பி இவ்வாறு சொன்னார். உனக்கு ஒன்று தெரியுமா, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்றுகூட எனக்குத் தெரியாது. நான் யாரிடம் செபிக்கின்றேன் என்றுகூட எனக்குத் தெரியாது. எனது செபங்கள் கேட்கப்படுமா என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால், நான் வாழ்க்கையில் எதிர்கொள்வது அனைத்திற்கும் நன்றியுணர்வோடு இருப்பது,  எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துள்ளது, அதுவே வாழ்வதற்கு சரியான அணுகுமுறை என்பது மட்டும் எனக்குத் தெரிகிறது என்று பதில் சொன்னார். இவ்வாறு சொல்லிவிட்டு, ஆண்டவரே, இவ்வாறு வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு இத்தகைய சீடரை எனக்கு கொடுத்ததற்காக நன்றி என்று சொல்லி, மீண்டும் குரு நடனமாடத் தொடங்கினார். உண்மையை உணர்ந்த சீடரும், ஆண்டவரே, வாழ்க்கையை சரியாக அணுகுவதற்குக் கற்றுக்கொடுத்த இந்த குருவுக்காக நன்றி என்று சொல்லி, அவரும் நடனமாடத் தொடங்கினார். நாம் சரியானதொரு வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை நிரூபிப்பது, அந்த வாழ்க்கை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியில் அடங்கியுள்ளது. ஆனால், எதற்கும் புகார் சொல்லும் வாழ்க்கையை வாழப் பழகிக்கொண்டால், அது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியற்றதாக, துயர்மிக்கதாகவே அமைக்கும். இவ்வாறு, Mahatria அவர்கள் கூறினார்.  

நன்றியுணர்வு

ஒரு சமயம், செல்வந்தர் ஒருவர், தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில், அவரோடு சேர்ந்து அனைவரும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த விருந்திற்கு காரணம் என்னவென்று எவருக்கும் தெரியவில்லை. எனவே அவர்களில் ஒருவர், கொஞ்சம் தயங்கித் தயங்கி, அந்த செல்வந்தரிடம் சென்று, நண்பரே, எதற்கு இந்த ஏற்பாடு என்று கேட்டார். அதற்கு அவர், நான் எனது Mercedes காரில் சென்றுகொண்டிருந்தேன். அது விபத்துக்குள்ளாகி முழுவதுமாக சேதமடைந்துவிட்டது. ஆனால் அதன் ஓட்டுனருக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை, அந்த ஓட்டுனரே நான்தான் என்று ஆடிக்கொண்டே சொன்னார். அவர் வியப்புடன் தன்னைப் பார்த்ததும், ஆடுவதை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தர், இவ்வாறு சொன்னார். நண்பர்களே, இந்த கார் போனால் என்ன, நான் மேலும் பத்து Mercedes கார்களை வாங்குவேன், ஆனால் என் உயிர் போயிருந்தால்...! அறுபது ரூபாய் பொம்மை கார், அல்லது 60 இலட்சம் Mercedes கார் எதுவாக இருந்தாலும், அவை பணத்தால் வாங்க முடிந்த பொம்மைகளே. எனவே, பொருள்களுக்கு அவற்றுக்குரிய இடங்களைக் கொடுங்கள். அப்போதுதான் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் கடவுள் உங்களுக்கு வழங்கியுள்ள ஆசீர்களை, நற்பேறுகளைக் கொண்டாட ஆரம்பியுங்கள். அப்போது மகிழ்ச்சி தானாக பிறக்கும். 

உலக மகிழ்ச்சி நாள்

மகிழ்ச்சியாக வாழ்வது, மனித உரிமைகளில் ஒன்று. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2012ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, உலக மகிழ்ச்சி நாளை உருவாக்கியது. அந்த அவையின் அறிவிப்பின்படி, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 20ம் தேதி, ஒவ்வொரு தலைப்பில்,   உலக மகிழ்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. இவ்வாண்டு உலக மகிழ்ச்சி நாள், மார்ச் 20, வருகிற சனிக்கிழமையன்று, அமைதியாய் இரு, ஞானத்தோடு இரு, கனிவுடன் இரு என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகின்றது. கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம், ஏன் மூன்றாம் அலையின் நெருக்கடிகளில் நாம் வாழ்ந்து வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மகிழ்ச்சியோடு பலர் உள்ளனர். மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது. அது கடைச்சரக்கும் அல்ல. மாறாக, அது நம் வாழ்வின் செயல்களிலிருந்து வெளிப்படவேண்டும்.

ஆட்சியர் அன்பழகன்

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்களிடம், புற்றுநோயால் தாக்கப்பட்ட ஏழைத் தாய் ஒருவர், 21 வயது நிரம்பிய தன் மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவிகேட்டு மனு கொடுத்திருந்தார். கூலிவேலை செய்யும் அந்த தாய்க்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள். மகள் ஏற்கனவே இறந்து விட்டார். கணவரும் குடிபோதைக்கு அடிமையாகிவிட்டார். பிறந்தபோதே செவித்திறனை இழந்த, மகனால் பிறர் உதவியின்றி நடக்க முடியாது. இதனால் அந்த தாய், எங்குச் சென்றாலும் மகனைத் தூக்கிக்கொண்டேதான் சென்றுள்ளார். இதனால் அந்த தாய்க்கு, மாற்றுத்திறனாளி அமர்வதற்கு ஏற்றவகையில் இருக்கை வசதிகொண்ட,  இரு சக்கர ஒரு மோட்டார் வாகனம் ஒன்றை ஆட்சியர் அன்பழகன் அவர்கள், தன் சொந்த செலவிலேயே வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இருக்கையில் தன் மகனை அமரவைத்தபோது, அந்த தாயிடம் வெளிப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உண்மையான மகிழ்ச்சியின் பிறப்பிடம் எதில்? இல்லாதவருக்கு உதவுவதில், பெற்றுள்ள ஆசீர்களுக்கு, நற்பேறுகளுக்கு நன்றியுணர்வுடன் இருப்பதில்...

15 March 2021, 15:16