தேடுதல்

Vatican News
நைஜீரியாவில் விடுவிக்கப்பட்டுள்ள பள்ளிச் சிறுமிகள்  நைஜீரியாவில் விடுவிக்கப்பட்டுள்ள பள்ளிச் சிறுமிகள்   (AFP or licensors)

நைஜீரியா: கடத்தப்பட்டிருந்த பள்ளிச் சிறுமிகள் விடுதலை

நைஜீரியாவின் வடமேற்கிலுள்ள, Zamfara மாநிலத்தில், கடந்த வெள்ளியன்று கடத்தப்பட்ட 317 மாணவிகளும் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நைஜீரியாவில், பிப்ரவரி 26, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில், ஆயுதம் ஏந்திய மனிதர்களால் கடத்திச் செல்லப்பட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று, மார்ச் 02, இச்செவ்வாயன்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்கிலுள்ள, Zamfara மாநிலத்தில், கடந்த வெள்ளியன்று கடத்தப்பட்ட 317 மாணவிகளும் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆயுதம் தாங்கிய மனிதர்கள்  இவ்வாறு பள்ளிச் சிறாரைக் கடத்தி விடுதலை செய்திருப்பது, ஒரு வாரத்திற்குள்ளாக, இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது என்றும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த 317 மாணவிகளும், இனம்தெரியாத ஆயுதம் ஏந்திய ஆட்களால், Zamfara மாநிலத்தின், Jangebe நகரிலுள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலிருந்து (GGSS) கடத்தப்பட்டனர்.

இதற்கு முன்னரும், இது போன்று Niger மாநிலத்தில், அரசுப் பள்ளி ஒன்றில், நாற்பதுக்கு மேற்பட்ட விடுதி மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும், குடும்பங்களுடன்  கடத்தப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். மற்றவர்கள், கடத்தப்பட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டனர்.

நைஜீரியாவில், 2020ம் ஆண்டு டிசம்பரில், அந்நாட்டு அரசுத்தலைவர் Muhammadu Buhari அவர்களின் சொந்த மாநிலத்தில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டனர். சில நாள்கள் சென்று, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

2014ம் ஆண்டு ஏப்ரலில், போக்கோ ஹராம் ஜிகாதிகளால், Borno மாநிலத்தில்,  276 பள்ளிச் சிறுமிகள் கடத்தப்பட்டனர்.

திருத்தந்தையின் செபம், அழைப்பு

பிப்ரவரி 28, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், நைஜீரியாவின் Zamfara மாநிலத்தில் 317 பள்ளி மாணவிகள் கடத்திச்செல்லப்பட்டதற்கு தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் விரைவில் விடுதலைசெய்யப்பட அனைவரும் இணைந்து செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

02 March 2021, 14:21