தேடுதல்

Vatican News
இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 17 வயது மருத்துவ மாணவருக்கு இறுதி மரியாதை இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 17 வயது மருத்துவ மாணவருக்கு இறுதி மரியாதை 

மியான்மாரில் வன்முறை நிறுத்தப்பட இராணுவத்திற்கு அழைப்பு

மியான்மாரில் ஊடகவியலாளர் உட்பட, அமைதியான போராட்டதாரர்கள் கொல்லப்படுவது, மற்றும், கைதுசெய்யப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை – ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரின் பாதுகாப்புப் படைகள், அந்நாட்டின் அறுபதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும், பல்கலைக்கழக வளாகங்களை ஆக்ரமித்திருப்பது, அந்நாட்டின் நெருக்கடி நிலைமைகளை மேலும் அதிகரிக்கும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் யுனிசெப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுனிசெப் அமைப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமை பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், மார்ச் 19, இவ்வெள்ளி மாலையில், மியான்மார் இராணுவ அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மியான்மாரில், இராணுவ அரசுக்கு எதிராக, அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் அப்பாவி மக்கள் மீது, இராணுவம், தொடர்ந்து மேற்கொண்டுவரும் கடுமையான வன்முறைகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை, தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் உட்பட, அமைதியான போராட்டதாரர்கள் கொல்லப்படுவது, மற்றும், கைதுசெய்யப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், அடிப்படை மனித உரிமைகளை மீறுதல் நிறுத்தப்படவேண்டும், மக்களாட்சி பாதைக்குத் திரும்பவேண்டும் என்று, ஐ.நா. பாதுகாப்பு அவை உட்பட, தான் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பை, மியான்மார் இராணுவம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மாரில் நடைபெறும் பிரச்சனைக்குத் தீர்வுகாண, உறுதியான, ஒருங்கிணைந்த, பன்னாட்டு அளவிலான முயற்சி உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், அமைதியான, நிலைத்த, மற்றும், வளமான நாட்டிற்காக ஏங்கும்  மியான்மார் மக்களின் சார்பாக, தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். (UN)

மியான்மாரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியிலிருந்து இடம்பெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்களில், குறைந்தது 150 பேர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

20 March 2021, 14:13