தேடுதல்

Vatican News
கோவிட்-19 தடுப்பூசிகள் கோவிட்-19 தடுப்பூசிகள்  (AFP or licensors)

அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட முயற்சிகள்

ஒரு மாதத்திற்குள்ளாக, 32 மில்லியனுக்கு மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள், 61 நாடுகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன - WHO

மேரி தெரேசா:வத்திக்கான் செய்திகள்

ஒரு மாதத்திற்குள்ளாக, மூன்று கோடியே இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள், 61 நாடுகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், மார்ச் 26, இவ்வெள்ளியன்று அறிவித்துள்ளது.

WHO நிறுவனத்தின் இந்நடவடிக்கை பற்றி, இவ்வெள்ளியன்று செய்தியாளர்களிடம் அறிவித்த, அந்நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆதரவோடு, மூன்று கோடிக்கு மேற்பட்ட “COVAX” தடுப்பூசிகள் 61 நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

உலகில், 177 நாடுகள், கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கும் பணியைத் துவக்கியுள்ளன என்றும் கூறிய Ghebreyesus அவர்கள், இன்றிலிருந்து நூறு நாள்களுக்குள், அனைத்து நாடுகளும், இந்த தடுப்பூசிகளைப் பெற்றால், பிரச்சனையைத் தீர்க்கமுடியும் என்றும் கூறினார்.

2021ம் ஆண்டின் முதல் நூறு நாள்களுக்குள் அனைத்து நாடுகளும் தடுப்பூசிகள் வழங்கும் பணியைத் துவக்கவேண்டும் என்று, Ghebreyesus அவர்கள், இவ்வாண்டின் ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கோவிட்-19ஆல் சிறார் கல்வி பாதிப்பு

இதற்கிடையே, கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்வேளை, இவ்வாண்டில் பத்து கோடிக்கு மேற்பட்ட சிறார், எழுத வாசிக்கும் அடிப்படை திறனை இழப்பார்கள் என்று,  மார்ச் 26, இவ்வெள்ளியன்று, ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.

2020ம் ஆண்டில் இந்த பிரச்சனையை எதிர்கொண்ட சிறாரின் எண்ணிக்கை 46 கோடியாக இருந்தவேளை, அவ்வெண்ணிக்கை தற்போது 58 கோடியே 40 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும், யுனெஸ்கோ கூறியுள்ளது. (UN)

27 March 2021, 15:34