தேடுதல்

Vatican News
ஆனி சலிவன், ஹெலன் கெல்லர் ஆனி சலிவன், ஹெலன் கெல்லர் 

வாரம் ஓர் அலசல்: மாற்றம், முன்னேற்றம்

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றிகொண்டு வாழ்வது என்பதை, ஆனி சலிவன் அவர்களும், ஹெலன் கெல்லர் அவர்களும் உணர்த்துகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Massachusetts மாநிலத்திலுள்ள Tewksbury நகரம், ஒரு காலத்தில் அருவருப்பான பகுதியாக நோக்கப்பட்டது. 1874ம் ஆண்டில், இந்நகரில் "மனநிலை பாதிக்கப்பட்ட கடும் வறியோர்" என்று முத்திரை குத்தப்பட்டவர்கள்,  மது பானத்திற்கு அடிமையானவர்கள் போன்றோர் வாழ்ந்து வந்தனர். இந்நகரத்தில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள், அயர்லாந்து உட்பட ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்த வறியோர். இந்நகரில் வறியோர்க்கென்று செயல்பட்டுவந்த Tewksbury நிறுவனத்தில், பாலியல் முறைகேடுகள், மனித இறைச்சியை உண்ணும் பழக்கம் போன்ற குற்றங்கள் இடம்பெறுவதாக வதந்திகள் பரவிவந்தன. இதனால் அந்நாட்டின் பிறரன்பு அமைப்பு ஒன்று, அந்நிறுவனம் பற்றிய விசாரணையை மேற்கொண்டது. பாஸ்டன் நகரின் Perkins விழிஇழந்தோர் பள்ளியைத் தொடங்கிய Samuel Gridley Howe அவர்கள் தலைமையில் விசாரணையும் இடம்பெற்றது. இந்த நிறுவனத்தில் வாழ்ந்தவர்தான் ஆனி சலிவன் (Annie Sullivan,1866-1936). "அற்புதங்களை ஆற்றுபவர்" என அழைக்கப்படும் இவரும், இவரது சகோதரர் ஜிம்மியும், அவர்களின் அன்னை இறைபதம் சேர்ந்தபின் இந்த கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். ஜிம்மியும் இறந்தபின், Annie தனித்துவிடப்பட்டார். ஆனிக்கு கண்ணில் பிரச்சனை. அதனால், Massachusetts மாநிலத்தில், Lowell நகர் மருத்துவமனை ஒன்றில், அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. அவர் மீண்டும் Tewksbury நிறுவனத்தில் வாழத் தொடங்கினார். இந்த ஆனி சலிவன் யார்? என்ற கேள்வி எழலாம்.

ஆனி சலிவன்

ஒருமுறை, மருத்துவர் ஒருவர், Tewksbury நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில், தரையை சுத்தம் செய்துகொண்டிருந்த வயதான ஒரு பெண்மணி மீது, எதிர்பாராத விதமாக அவர் மோதிவிட்டார். இந்த தர்மசங்கடமான சூழலை சமாளிப்பதற்காக, அந்த மருத்துவர், அந்த பெண்ணிடம், நீங்கள் இங்கு எவ்வளவு காலம் வேலை செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், ஏறத்தாழ இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து வேலை செய்கிறேன் என்று பதில் சொன்னார். அப்போது அந்த மருத்துவர், அந்த பெண்ணிடம், இந்த இடத்தின் வரலாறு பற்றி எனக்குச் சொல்வீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், இந்த இடம் பற்றி எதுவும் என்னால் சொல்ல முடியுமா என்று தெரியாது, ஆனால், இந்த நிறுவனத்தில், ஓர் இடத்தை என்னால் காட்ட முடியும் என்று கூறியதோடு, அந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் மிகப் பழமையான ஓர் இடத்திற்கு, அவரை அழைத்துச் சென்றார். அங்கு, துருப்பிடித்த இரும்புக் கம்பிகளால் சூழப்பட்ட, சிறைபோன்று இருந்த ஒரு சிறிய குகையைக் காட்டினார். அந்தக் குகைக்கூண்டில்தான், ஆனி சலிவன் அவர்களை, அந்த நிறுவனத்தினர் வைத்திருந்தனர் என்று அந்த பெண் கூறினார். உடனே, அந்த மருத்துவர், யார் இந்த ஆனி? என்று வியப்பு மேலிட கேட்டார். அந்த வயதான துப்புரவு பணிப்பெண், ஆனி பற்றி இவ்வாறு விவரித்தார்

ஆனி, யாராலும் திருத்தமுடியாத இளம் சிறுமியாக இருந்தார். ஆனி அருகில் யாரும் சென்றால் அவர்களை அவர் கடித்துவிடுவார், உணவை அவர்கள் மீது வீசுவார், மருத்துவர்களும், செவிலியரும் அவரைப் பரிசோதனை செய்யக்கூட முடியவில்லை. ஆனிமீது அவர்கள் துப்புவார்கள், ஆனியும் பதிலுக்கு அவர்களைக் கீறுவார். இவ்வாறு, யாராலும் நெருங்கிச் சென்று எதுவும் செய்ய முடியாத நிலையில் ஆனி இருந்தார். அதனால் ஆனியை இந்த குகைக் கூண்டில் வைத்திருந்தனர். நான் ஆனியைவிட சில ஆண்டுகள் இளையவள். ஆனி போன்று, கூண்டில் நான் அடைக்கப்பட்டிருந்தால், எப்படியிருக்கும், மருத்துவர்களும், செவிலியர்களுமே, ஆனிக்கு உதவமுடியாதபோது, என்னைப் போன்ற யாராவது ஏதாவது செய்ய இயலுமா? என்று அடிக்கடி சிந்தித்துப் பார்த்தேன். ஒருநாள் இரவு வேலை முடிந்து, ஆனிக்காக ஒரு கேக் செய்தேன். அடுத்த நாள், சிறிது அச்சத்துடன், அந்த சிறு கேக்குடன், ஆனி இருந்த இடத்திற்குச் சென்றேன். ஆனி, இந்த கேக்கை உனக்காகவே தயாரித்தேன். இதை இங்கு தரையில் வைக்கிறேன். நீ விரும்பினால் இங்குவந்து இதை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, வெகுவேகமாக அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டேன். ஏனெனில் அந்த இனிப்பை ஆனி என்மீது எறிந்துவிடுவாரோ என்ற அச்சமே அதற்குக் காரணம். ஆனால் அன்று ஆனி அவ்வாறு செய்யவில்லை. மாறாக, அந்த இனிப்பை எடுத்துச் சாப்பிட்டார். அதற்குப்பின் நான் அந்தப் பக்கம் சென்றபோதெல்லாம், அவர் என்னிடம் கொஞ்சம் இனிமையாக இருக்கத் தொடங்கினார். சில நேரங்களில் நான் ஆனியிடம் பேசுவேன். ஒரு நாள், நான் ஆனியை சிரிக்க வைக்கவும் செய்தேன். நானும் ஆனியும் பேசிச் சிரிப்பதை தாதியர் ஒருவர் கவனித்துவிட்டு, ஆனி பற்றி மருத்துவரிடம் சொன்னார். அதற்குப்பின் மருத்துவர்கள் என்னிடம் உதவிகேட்டனர். மருத்துவர்கள் ஆனியைப் பரிசோதிக்க விரும்பிய ஒவ்வொரு நேரமும் நானும் உடன்செல்வேன். முதலில் நான் ஆனி வைக்கப்பட்டிருந்த குகைக் கூண்டிற்குள் சென்று, மருத்துவர்கள் வந்திருக்கும் விவரத்தைச் சொல்வேன், அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு அவரை அமைதிப்படுத்துவேன். மருத்துவர்கள், ஏறத்தாழ ஓராண்டுகாலம் ஆனியை பரிசோதித்தனர். அந்த பரிசோதனையின் முடிவில், ஆனி கண்பார்வையை ஏறக்குறைய இழந்துவிட்டார் என்று கண்டுபிடித்தனர். பின்னர் ஆனி, அந்த நிறுவனத்திற்கு வந்த அரசு அதிகாரிகளிடம் கெஞ்சி, மிகவும் கஷ்டப்பட்டு, Perkins விழிஇழந்தோர் பள்ளியில் சேர்ந்தார். ஆனி, தனது இருபதாவது வயதில் ஆசிரியராகவும், தன்னை உருவாக்கிக்கொண்டார்.

ஹெலன் கெல்லர்

Tewksbury நிறுவனத்தில் துப்புரவு பணியாற்றிய அந்த வயதான பெண், ஆனி சலிவன் பற்றி, அந்த மருத்துவரிடம் இவ்வாறு விவரித்தார். ஆனி, தன்னை ஆசிரியராக உருவாக்கிக்கொண்ட பின்னர், தான் வளர்ந்த Tewksbury நிறுவனத்திற்கு, ஏதாவது உதவிகள் செய்ய நினைத்தார். அதனால் அவர், அந்த நிறுவனத்தின் இயக்குனரை அணுகினார். முதலில் அந்த இயக்குனர், எந்தப் பதிலும் சொல்லவில்லை. பின்னர் அப்போதுதான் தனக்கு வந்த ஒரு மடல் பற்றிய நினைவு அவருக்கு வந்தது. தனது மகள், பார்வைத்திறனையும், செவித்திறனையும் இழந்துவிட்டாள். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல், முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறாள். அவளை எந்தவொரு கருணை இல்லத்திலும் நான் சேர்க்க விரும்பவில்லை. யாராவது ஆசிரியர் ஒருவர், தன் வீட்டிற்கு வந்து தன் மகளோடு இருப்பதற்கு விருப்பம் தெரிவித்தால் தனக்கு அறிவிக்குமாறு அந்த மடலை எழுதியவர் கேட்டிருந்தார்.. எனவே Tewksbury நிறுவன இயக்குனர், ஆனி சலிவன் அவர்களை, அந்த மடலை எழுதியவரின் மகளான ஹெலன் கெல்லர் (Helen Keller, ஜூன் 27, 1880 – ஜூன் 1, 1968) வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது ஆனிக்கு வயது இருபது. ஹெலனுக்கு வயது ஆறு. அதற்குப்பின் ஆனி சலிவன் அவர்கள், 49 ஆண்டுகள், ஹெலனோடு இருந்து, உலகை மாற்றிய பெண் என, அவர் போற்றப்படும் அளவுக்கு, அவரது வாழ்வில் அற்புதங்கள் ஆற்றுபவராக விளங்கினார்.

ஹெலன் கெல்லருக்கு ஒன்றரை வயது நடந்தபோது, அவர் மூளைக்காய்ச்சலால் தாக்கப்பட்டார். இதனால் பார்வைத்திறன், கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். அவருக்கு ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய, ஆனி சலிவன் அவர்கள், பிறர் பேசும்போது, ஹெலன் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள்மூலம் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை, அவருக்குக் கற்பித்தார். ஹெலனின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்துகொள்ள பழக்கினார். இப்படி ஹெலன், ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டுத் உணர்ந்து கற்றார். பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக்கொண்ட ஹெலன், பார்வையற்றோருக்கான பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக்கொண்டார். பத்து வயதை எட்டுவதற்குமுன்னரே, ஹெலன், பார்வையற்றோருக்கான பிரெயில் முறையில், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றார். 1963ம் ஆண்டில், ஹெலன் கெல்லரும், ஆனி சுலிவானும், ஆஸ்கர் விருதைப் பெற்றனர். ஹெலன் கெல்லர் அவர்கள், விருதுபெற்ற நிகழ்வில் ஒன்றில், அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார் என்று அவரிடம் கேட்டனர். ஹெலன் அவர்கள், உடனடியாக, "ஆனி சலிவன்" (Annie Sullivan) என்று கூறினார். அப்போது ஆனி அவர்கள், இல்லை ஹெலன், நம் இருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரும் நல்தாக்கத்தைக் கொண்டிருந்தவர், Tewksbury நிறுவனத்தில், தரையைச் சுத்தம் செய்யும் வேலை செய்த அந்த பணிப்பெண் என்று பதில் சொன்னார்.   

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றிகொண்டு வாழ்வது என்பதை இவ்விருவரும் உணர்த்துகின்றனர். இவர்கள், 'வலி தந்த வலிமையால், வாழ்வுப் பயணத்திற்குப் புதிய வழி கண்டவர்கள். இயற்கை தந்த சோதனையை தங்களின் தளரா மனஉறுதியால் எதிர்கொண்டவர்கள். விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் உலகை இவர்கள் மலைக்க வைத்தவர்கள். ஆனி சலிவன் அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றிய, அந்த வயதான துப்புரவு பணிப்பெண் போன்று, யாராவது ஒருவர் தனக்குத்தானே கேள்விகேட்டாலே, வரலாறு மாறும் என்று, அந்த நிகழ்வைப் பதிவுசெய்தவர் கூறியிருக்கிறார். நம் வாழ்வில், நம்மை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் மிக்கவர்கள். அவரவர்க்கென்று தனித்தனி குணங்கள் இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும்தான் ஒருவரை உலகத்தில் வாழ வைக்கும். இந்த பக்குவத்தை அடைந்துவிட முயற்சித்தால் எத்துன்பமும் யாரையும் நெருங்காது. இலட்சியம் எதுவோ அதை நோக்கியே வாழ்க்கைப் பயணம் தொடரவேண்டும். சிரமம் தாண்டிய சிகரங்களாகிய ஆனி சலிவன், ஹெலன் கெல்லர் ஆகிய இவர்களது வெற்றிப் பயணம் இதைத்தான் கற்றுத்தருகிறது. அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களே, முன்னேற்றத்தின் படிகளாக அவர்களுக்கு அமைந்தன.

22 February 2021, 15:12