தேடுதல்

Vatican News
சிரியாவிலிருந்து வெளியேறிய மக்கள் உணவுக்காக காத்திருக்கும் காட்சி சிரியாவிலிருந்து வெளியேறிய மக்கள் உணவுக்காக காத்திருக்கும் காட்சி  (AFP or licensors)

சிரியாவில் கோவிட்-19ஐவிட பசிக்கொடுமையே அதிகம்

சிரியாவில் ஏறத்தாழ ஒரு கோடியே 24 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். அந்நாட்டில் நடைபெற்றுவரும் போரினால், ஏறத்தாழ நான்கு இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பத்தாண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சிரியா நாட்டில், பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும்வேளை, அம்மக்களுக்கு கோவிட்-19 உருவாக்கியிருக்கும் துன்பத்தைவிட, பசிக்கொடுமையே அதிகமாக உள்ளது என்று, அந்நாட்டு அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.

சிரியாவில் மக்களின் இப்போதைய நிலைமை பற்றி ஆசியச் செய்தியிடம் விளக்கிய, தமாஸ்கஸ் நகரின் பாத்திமா அன்னை பங்குப் பணியாளர் அருள்பணி அமெர் காசார் (Amer Kassar) அவர்கள், ஏறத்தாழ 2 கோடிக்கு அதிகமான மக்கள், போதுமான, மதிய அல்லது இரவு உணவின்றி துன்புறுகின்றனர் என்று கூறினார்.

மக்கள், மிகுந்த சோர்வோடு அதிகாலை மூன்று மணிக்கே தெருக்களில் வரிசையாக உணவுக்காக காத்திருந்து, பின்னர் எட்டு மணிக்கு வேலைக்குச் செல்வதைக் காண முடிகின்றது என்றும், அருள்பணி காசார் அவர்கள் கூறினார். 

ஒரு ரொட்டியின் விலை, சிரியா நாட்டு 250 பவுண்டு என்றும், அதை வாங்குவதற்கு மக்கள் மணிக்கணக்காய்க் காத்திருக்கின்றனர் என்றும், சிறார், பள்ளிக்குச் செல்லாமல் தெருவில் விளையாடுவதைக் காணமுடிகின்றது என்றும், அருள்பணி காசார் அவர்கள் கூறினார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலக உணவுத் திட்ட அமைப்பின் (WFP) கணிப்புப்படி, சிரியாவில் ஏறத்தாழ ஒரு கோடியே 24 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். அந்நாட்டில், ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரினால், ஏறத்தாழ நான்கு இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

சிரியாவில், ஏறத்தாழ 83 விழுக்காட்டு மக்கள், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது. அந்நாட்டில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போர், ஜிகாதிகளின் வன்முறை, புலம்பெயர்ந்தோரின் அவசரகாலத் தேவைகள், பன்னாட்டு பொருளாதாரத் தடை, லெபனான் வங்கிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை போன்ற விடயங்கள், சிரியாவை மிகக் கடுமையான துன்பச்சூழலில் சிக்கவைத்துள்ளன. (AsiaNews)

26 February 2021, 14:25