தேடுதல்

பிரித்தானியாவில் கொரோனா பெருந்தொற்று பிரித்தானியாவில் கொரோனா பெருந்தொற்று  

கோவிட்-19ன் புதிய வடிவம் குறித்து WHO கவலை

ஐரோப்பாவில் 2 கோடியே 30 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், முழு தேசிய ஊரடங்கில் வாழ்ந்து வருகின்றனர் - உலக நலவாழ்வு நிறுவனம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் கொரோனா பெருந்தொற்று, புதிய வடிவில் வேகமாகப் பரவிவருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, இந்த தொற்றுக்கிருமியை ஒழிப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் துரிதமாகச் செயல்படுமாறு, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று புதிய வடிவில் பரவிவருவதைத் தடைசெய்வதற்கு, கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறியுள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இந்த புதிய வகை கிருமி, பிரித்தானியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

வீரியம் கொண்ட இந்த புதிய வகை தொற்றுக்கிருமி, ஐரோப்பாவில் ஏறத்தாழ 22 பகுதிகளில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், 2021ம் ஆண்டு முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ள நம்மையே தயாரித்துவரும் இவ்வேளையில், இந்த புதிய அச்சுறுத்தல் கவலை தருகின்றது என்றும், WHO நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் Hans Kluge அவர்கள் கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று கிருமி மேலும் பரவாமல் தடுப்பதற்கு, நாடுகள், கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள Kluge அவர்கள், ஐரோப்பாவில் 2 கோடியே 30 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், முழு தேசிய ஊரடங்கில் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். (UN)   

09 January 2021, 14:59