தேடுதல்

One Planet Summit கூட்டத்தில் உரை வழங்கும் பிரான்ஸ் அரசுத்தலைவர் Emmanuel Macron One Planet Summit கூட்டத்தில் உரை வழங்கும் பிரான்ஸ் அரசுத்தலைவர் Emmanuel Macron 

புதுப்பாதையை அமைத்துக்கொள்ள அழைக்கும் கோவிட்-19

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் இக்காலம், நமது பழைய நிலைக்கு திரும்பாமல், புதுப்பாதையை அமைத்துக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கும் காலம் - ஐ.நா. பொதுச்செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் இக்காலம், நமது பழைய நிலைக்கு திரும்பாமல், புதுப்பாதையை அமைத்துக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கும் காலம் என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

ஒரே கோளம் உச்சி மாநாடு என்ற பன்னாட்டு கூட்டத்தில் சனவரி 11, இத்திங்களன்று, பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு கூட்டேரஸ் அவர்கள் வழங்கிய உரையில், இவ்வுலகையும், அதன் வளங்களையும் நம் சுயநலத்தின் விளைவாக சுரண்டி வந்ததற்கு தகுந்த பதிலை இவ்வுலகம் வழங்கியுள்ளது என்று கூறினார்.

கோவிட் -19
கோவிட் -19

காற்று, நிலம், நீர் அனைத்திலும் நஞ்சைக் கலந்து, நமது பெருங்கடல்களில் நெகிழியை நிரப்பி, நாம் சிறுகச் சிறுகக் கொன்றுவந்த இயற்கை, புயல், வெள்ளம், காட்டுத்தீ போன்ற சக்திமிகுந்த எச்சரிக்கைகளை தந்தவண்ணம் இருந்தது என்றும், இன்று, மீண்டும் ஒருமுறை இந்தப் பெருந்தொற்றின் வழியே மற்றொரு எச்சரிக்கையை விடுத்துள்ளது என்றும், கூட்டேரஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.[ Photo Embed: பெருந்தொற்று]

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் வேளையில், நம்மைச் சுற்றியுள்ள சூழலையும், சுற்றியுள்ள மக்களையும், குறிப்பாக, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் மக்களையும் நாம் கருத்தில் கொள்வது, வருங்காலத்தை உறுதியுள்ளதாக மாற்றும் என்று கூட்டேரஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. நிறுவனம், உலக வங்கி ஆகியவற்றின் உதவியோடு, பிரெஞ்சு அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரே கோளம் உச்சி மாநாட்டில், இந்த பெருந்தொற்றின் காரணமாக உலகத்தலைவர்கள் இணையதளத்தின் வழியே கலந்துகொண்டனர்.

ஆப்ரிக்காவின் சாஹெல் மற்றும் சகாராப் பகுதிகளில், 'பெரும் பசுமை சுவர்' (Great Green Wall) என்ற பெயரில், சகாரா பாலை நிலத்தின் வறட்சியையும், விரிவாக்கத்தையும் தடுக்கும் முயற்சிகளுக்கு, உலகத் தலைவர்கள், 1400 கோடி டாலர்கள் நிதி உதவி செய்வதாக, ஒரே கோளம் உச்சி மாநாட்டில் உறுதி அளித்துள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

13 January 2021, 14:38