தேடுதல்

புத்தாண்டில் பிறந்த குழந்தை புத்தாண்டில் பிறந்த குழந்தை 

2021ம் ஆண்டை சிறார்க்கு நலம்நிறைந்த உலகாக மாற்ற...

எப்போதும் போலவே இந்த ஆண்டின் முதல் நாளில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஃபீஜி தீவிலேயே முதல் குழந்தை பிறந்துள்ளது - யுனிசெப்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2021ம் புதிய ஆங்கில ஆண்டின் முதல் நாளில், உலக அளவில் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தனர் என்று கணக்கிட்டுள்ள, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் யுனிசெப் அமைப்பு, இந்த புதிய ஆண்டை, சிறார்க்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுக்கும் ஆண்டாக மாற்றுமாறு, உலக சமுதாயத்திற்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

இப்புதிய ஆண்டின் முதல் நாளில் பிறந்த குழந்தைகள், கடந்த காலங்களைவிட, வித்தியாசமான ஓர் ஆண்டில் நுழைந்துள்ளனர் என்றும், புதிய ஆண்டு, புதிய வாய்ப்புகள்பற்றி மீள்கற்பனை செய்துபார்க்க வைத்துள்ளது என்றும், ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பான யுனிசெப்பின் இயக்குனர் Henrietta Fore அவர்கள் கூறினார்.

எப்போதும் போலவே இந்த ஆண்டின் முதல் நாளில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஃபீஜி தீவிலேயே முதல் குழந்தையும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடைசிக் குழந்தையும் பிறந்துள்ளனர் என்றும், Fore அவர்கள் கூறினார்.

உலக அளவில், 2021ம் புதிய ஆண்டின் முதல் நாளில் பிறந்துள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர், இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எத்தியோப்பியா, அமெரிக்க ஐக்கிய நாடு, எகிப்து, பங்களாதேஷ், காங்கோ சனநாயக குடியரசு ஆகிய நாடுகளில் பிறந்துள்ளனர்.

இந்தியாவில் 59,995, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 10,312, எகிப்தில் 9,455, பங்களாதேஷில் 9,236, காங்கோ சனநாயக குடியரசில் 8,640 என்ற எண்ணிக்கையில், 2021ம் ஆண்டு, சனவரி முதல் நாளில் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

2021ம் ஆண்டு முழுவதும் பிறக்கவிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள 14 கோடி குழந்தைகளின் ஆயுள்காலம் சராசரி 84 ஆண்டுகளாக இருக்கும் என்றும், யுனிசெப் கூறியுள்ளது.

2021ம் ஆண்டில் யுனிசெப் அமைப்பு, தன் 75ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் நிலையில், இந்த உலகை, சிறார் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற நம்மையே அர்ப்பணிப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. (UN)

02 January 2021, 15:11