தேடுதல்

ஜம்முவில் தெருவில் துணி கடைகள் ஜம்முவில் தெருவில் துணி கடைகள் 

விதையாகும் கதைகள் : வியாபார தந்திரம்

இலாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும்போது, விற்பவரும் சரி, வாங்குபவரும் சரி, அங்குள்ள நியாயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ராஜா, செல்வம் என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், தனக்கு காது சரியாக கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் ராஜா. அது உண்மையில்லை. அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு துணி எடுத்து, அதன் விலையை ராஜாவிடம் கேட்பார். கடைக்குப் பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் செல்வத்திடம், ‘இந்த துணி என்னப்பா விலை’ என்று கத்துவார் ராஜா. செல்வம் அங்கிருந்து ‘நூற்றி நாற்பத்தி இரண்டு ரூபாய்’ என்பார். ராஜா உடனே, ‘எவ்ளோ’ என்று மீண்டும் கத்திக் கேட்பார். ‘நூற்றி நாற்பத்தி இரண்டு ரூபாயடா, செவிடே’ என்று செல்வம் பதிலுக்கு கத்துவார். துணி வாங்க வந்தவரிடம் ராஜா திரும்பி, ‘நூற்றி இருபத்திரண்டு ரூபாயாம்’ என்பார். துணி வாங்க வந்தவரும், செவிட்டுக் காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு, துணியோடு விரைவாக வெளியேறிவிடுவார்.

நூற்றி நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு நூற்றி இருபத்திரண்டு என்பது மகா சின்னதாய் தெரிகிறது, உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. ஆனால், அந்த துணியின் உண்மையான மதிப்பு நூற்றி பத்து ரூபாய்தான்!

02 December 2020, 15:33