தேடுதல்

இரட்டைக் குழந்தைகள் ஜேமி, எமிலி ஆகியோருடன், பெற்றோர், கேட், டேவிட் இரட்டைக் குழந்தைகள் ஜேமி, எமிலி ஆகியோருடன், பெற்றோர், கேட், டேவிட் 

விதையாகும் கதைகள் : நோயைக் கடந்துவாழும் இறையன்பு

இளம் தாய் Kate அவர்களின் அணைப்பில், ஜேமி உயிர் பெற்றதற்கு, அறிவியல் விளக்கங்கள் எதையும், மருத்துவர்களால் தர இயலவில்லை.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

Kate Ogg என்ற இளம் தாயின் கருவில் வளர்ந்துவந்த இரட்டைக் குழந்தைகள், 6 மாதங்களிலேயே பிறந்துவிட்டனர். அவ்விரு குழந்தைகளில், ‘எமிலி’ என்ற பெயர் கொண்ட பெண் குழந்தை, பிழைத்துவிட்டதாகவும், 'ஜேமி' என்ற பெயர் கொண்ட ஆண் குழந்தை, பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

ஜேமியை தன்னிடம் கொண்டுவரும்படி, தாய் Kate மருத்துவர்களிடம் கெஞ்சிக் கேட்டார். அவர் தன் மகனுக்கு இறுதி விடை வழங்க உதவியாக, அக்குழந்தையை அவரிடம் கொடுத்தனர். அக்குழந்தையை தன் மார்போடு அணைத்து, இளம் தாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த வேளையில், அக்குழந்தையிடம் இலேசான அசைவுகள் உருவானதை, தாய் Kate உணர்ந்தார்.

இறந்த உடலில் இத்தகைய சிறு அசைவுகள் எழுவது சாத்தியம் என்று மருத்துவர்கள் சொன்னபோது, அந்த அன்னை மட்டும், தன் மகன் ஜேமியை இன்னும் இறுக்கமாக தன்னுடன் அணைத்துக்கொண்டார். சில நொடிகள் சென்று, அக்குழந்தையின் கண்கள் திறந்தன. தன் மகன் ஜேமிக்கு பிரியாவிடை வழங்க அந்த அன்னை வழங்கிய அணைப்பு, அவனை இவ்வுலகிற்கு வரவேற்க, அவர் தந்த அணைப்பாக மாறியது.

இளம் தாய் Kate அவர்களின் அணைப்பில், ஜேமி உயிர் பெற்றதற்கு, அறிவியல் விளக்கங்கள் எதையும், மருத்துவர்களால் தர இயலவில்லை. தற்போது, எமிலியும், ஜேமியும், 10 வயதுள்ள சிறுமியாக, சிறுவனாக, நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மருத்துவத்தால் விளக்கமுடியாத இத்தகைய நிகழ்வுகள், உலகில் ஒவ்வொருநாளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும், கொள்ளைநோய்களைக் கடந்து, இறைவனின் அன்பு என்றும் நிலைக்கும் என்ற செய்தியை, சுமந்து வந்துள்ளது.

29 December 2020, 12:54