தேடுதல்

Vatican News
தர்மம் பெற்ற பில்லியும், மோதிரத்தை தவறவிட்ட சாராவும் தர்மம் பெற்ற பில்லியும், மோதிரத்தை தவறவிட்ட சாராவும் 

விதையாகும் கதைகள் : இன்றும், இவ்வுலகில் புதுமைகள்...

புதுமைகள், இவ்வுலகில் இன்றும் தொடர்கின்றன. மனக்கண்களைத் திறந்துவைத்தால், சின்னதும், பெரியதுமாய் புதுமைகள் நம்மைச்சுற்றி நிகழ்வதைக் காணமுடியும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

2013ம் ஆண்டு, மார்ச் மாதம் ஒருநாள், 12-WPRI என்ற தொலைக்காட்சியில், "எந்த ஒரு நற்செயலும், அதற்குரிய வெகுமதியைப் பெறாமல் போவதில்லை" என்ற சொற்களுடன், பின்வரும் செய்தி ஒளிபரப்பானது:

அமெரிக்க ஐக்கிய நாட்டின், கான்சாஸ் நகரில், Billy Ray Harris என்பவர், சாலையோரம் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்துவந்தார். தர்மம் பெறுவதற்கு வைத்திருந்த குவளையை, ஒருநாள் மாலையில் அவர் கவிழ்த்தபோது, அதில், மோதிரம் ஒன்று கிடந்ததைப் பார்த்தார். அவரது குவளையில், யாரோ ஒருவர், நாணயங்களைப் போட்டவேளையில், அந்த மோதிரமும் தவறுதலாக விழுந்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார் பில்லி. ஒரு நகைக்கடையில் அந்த மோதிரத்தின் மதிப்பைக் கேட்டபோது, அந்தக் கடைக்காரர், அவருக்கு உடனே, 4,000 டாலர்கள் தருவதாகக் கூறினார். ஆனால், பில்லி அவர்கள், மோதிரத்தை விற்கவில்லை.

இதற்கிடையே, அந்த மோதிரத்தைத் தொலைத்துவிட்ட Sarah Darling என்ற பெண்மணி, மிகுந்த வேதனை அடைந்தார். அது, அவரது கணவர் அவரை மணந்துகொள்ள விரும்பியதாகக் கூறியபோது தந்த அடையாளப் பரிசு. அந்த மோதிரத்தை அணிந்திருந்த விரலில் காயம் ஏற்பட்டதால், சாரா அவர்கள், அந்த மோதிரத்தைக் கழற்றி, தன் கைப்பையில் வைத்திருந்தார். அன்று, தன் கைப்பையைத் திறந்த நேரங்களையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்தி பார்த்தார் சாரா. சாலையோரம் அமர்ந்திருந்தவருக்குக் கொடுக்க நாணயங்களை எடுத்தபோது, மோதிரத்தையும் எடுத்து போட்டிருக்கவேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்.

அவர் தர்மம் வழங்கிய இடத்திற்கு மீண்டும் சென்று, அங்கு பில்லி அவர்களைச் சந்தித்தபோது, "உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நேற்று, உங்களுக்குத் தர்மம் கொடுத்தபோது, எனக்குரிய விலைமதிப்பற்ற ஒன்றை உங்களிடம் தவறுதலாகக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். பில்லி உடனே, அவரிடம், "அது ஒரு மோதிரமா?" என்று கேட்டபடி, தன் பையிலிருந்த மோதிரத்தை எடுத்து, சாராவிடம் கொடுத்தார்.

பில்லி அவர்களின் இச்செயல், சாராவையும், அவரது கணவரையும் வெகுவாகக் கவர்ந்தது. எனவே, அவர்கள், வலைத்தளத்தில் இந்நிகழ்வைப் பதிவிட்டு, பில்லி அவர்களுக்கு உதவிகேட்டு, ஒரு விண்ணப்பத்தையும் விடுத்தனர். அந்த விண்ணப்பத்திற்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும், நிதி உதவிகள் வந்துசேர்ந்தன. அவர்கள் திரட்டிய 1,80,000 டாலர்கள் நிதி உதவியை, பில்லி அவர்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்வை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பில்லி அவர்கள் அளித்த பேட்டியில், "நம் அனைவரையும்விட மேலே இருக்கும் ஒருவர், இவையனைத்தையும் இயக்குகிறார். அவர், இவ்வுலகிற்கு சொல்லவிழையும் ஒரு செய்திக்கு, என்னை, ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளார்" என்று கூறினார்.

புதுமைகள், இவ்வுலகில் இன்றும் தொடர்கின்றன. மனக்கண்களைத் திறந்துவைத்தால், சின்னதும், பெரியதுமாய் புதுமைகள் நம்மைச்சுற்றி நிகழ்வதைக் காணமுடியும்.

22 December 2020, 13:27