தேடுதல்

Vatican News
கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுக்கப்படுகிறது கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுக்கப்படுகிறது 

விதையாகும் கதைகள்: நீதி நிச்சயம் வெல்லும்

நாட்டின் சட்டங்களை மதித்துச் செயல்பட வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான், அவ்வாறு செயல்படுபவனே உண்மையான குடிமகனாக இருக்க முடியும், ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில், நான் இறக்கத்தான் வேண்டும் - சாக்ரடீஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீஸ் (கி.மு.470-399) அவர்கள், ஏதென்ஸ் நகரின் ஆட்சிக்குழு தலைவர்களுள் ஒருவராக இருந்த காலக்கட்டத்தில் ஆர்கினூசா போர் நடந்தது. அந்தப் போர் நடந்து முடிந்ததும், ஒருசிலர், பத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களைப் பிடித்துக்கொண்டு சாக்ரடீஸ் அவர்களிடம் வந்து, அந்த படைவீரர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டனர். சாக்ரடீஸ் அவர்களோ அவர்களிடம், “இவர்கள் தவறு செய்ததற்கு எந்தவோர் ஆதாரமும் இல்லை. அப்படியிருக்கையில் இவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்! அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை எந்தவிதத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கடுமையாகக் கூறினார். இதனால் அந்த ஒருசிலர், சாக்ரடீஸ் அவர்களை, ஆட்சிக்குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினர். அது மட்டுமல்லாமல், அவர் சிறையில் அடைக்கப்படவும், அவர்கள் காரணமாக இருந்தனர். ஏதென்ஸ் நீதிமன்றம், சாக்ரடீஸ் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கியபோது, சிறையில் அவரைச் சந்தித்த அவரது சீடர்கள், அவரைத் தப்பி ஓடிவிடும்படிக் கூறினார்கள். ஆனால் அவரோ, நாட்டின் சட்டங்களை மதித்துச் செயல்பட வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான்,  அவ்வாறு செயல்படுபவனே உண்மையான குடிமகனாக இருக்க முடியும், ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் நான் இறக்கத்தான் வேண்டும் என்று சீடர்களிடம் சொல்லி, சிறையிலிருந்து தப்பியோட மறுத்துவிட்டார். பின்னர் அவர், சிறை அதிகாரிகள் கொடுத்த நஞ்சை குடித்து இறந்தார். இவ்வாறு, சாக்ரடீஸ் அவர்கள், எச்சூழ்நிலையிலும் நேர்மையின் பக்கமே இருந்தார். இன்றும், விவசாயப் பெருமக்கள், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் உட்பட பலர் இந்தியாவிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும், எவருக்கும், எதற்கும் அஞ்சாமல் நீதி, நேர்மைக்காகப் போராடி வருகின்றனர். நீதி வெல்லும், அநீதி வீழும்.

14 December 2020, 14:58