தேடுதல்

Vatican News
நேபாளத்தில் புத்த மத பகோடா நேபாளத்தில் புத்த மத பகோடா  (AFP or licensors)

விதையாகும் கதைகள்: சிறிய மாற்றுச் சிந்தனைகள், பெரிய பலன்கள்

எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும், புதிய புதிய கோணங்களில் சிந்தித்தால் பலன் நிச்சயம் உண்டு. சிறிய மாற்றுச் சிந்தனைகள், பெரிய பலன்களை நல்கும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு காலத்தில் சீனாவில் பெரிய வியாபாரி ஒருவர், தனக்குப்பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். அவர் தன் மகன்களிடம், அந்த ஊரிலுள்ள புத்த துறவு இல்லத்திற்கு யார் அதிக அளவு சீப்புகளை விற்கிறீர்களோ அவர்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று கூறினார். தலையை வழுக்கையாய் வைத்துள்ள புத்த துறவிகளிடம் சீப்பு வியாபாரமா என்று, மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தாலும், பின்னர் முயற்சி எடுப்பது என்று மூவரும் முடிவு செய்தனர். அவர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த தந்தை வியாபாரி கொடுத்த காலக்கட்டம் நிறைவுற்ற நாளில், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது வெற்றி பற்றி தந்தையிடம் விவரித்தனர். அவரிடம் முதல் மகன், நான் அந்த புத்த துறவிகளிடம், இந்த சீப்பு முதுகு சொறியப் பயன்படும் என்று சொன்னேன், உடனே இருவர் இரு சீப்புகளை வாங்கினார்கள்” என்று கூறினான். இரண்டாவது மகன், “மலைமேல் உள்ள அந்தப் புத்த இல்லத்திற்குப் போகிறவர்களின் தலைமுடி, வழியில் காற்றில் கலைந்துவிடாமல் இருப்பதற்கு இந்த சீப்புகள் பயன்படும் என்று விளக்கினேன், அதனால் பத்து சீப்புகளை அவர்கள் வாங்கினார்கள் என்று கூறினான். மூன்றாவது மகன், “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்” என்று கூறினான். அதை ஆச்சரியத்தோடு கேட்ட தந்தையிடம், “அந்த துறவு இல்லத்திற்கு நன்கொடைகள் வழங்குபவர்களைப் பாராட்டி ஏதாவது நினைவுப் பரிசு வழங்கினால், அது மேலும் பலரை உதவிகள் செய்யத் தூண்டும் என்று ஆலோசனை கூறியதோடு, நான் புத்தரின் பொன்மொழிகளைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை அவர்களிடம் காட்டினேன். உடனடியாக அது இல்லத் தலைவர், புத்தரின் கூற்றுகள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”என்றான் மூன்றாவது மகன்.

ஆம். எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் சோர்ந்துவிடாமல், பார்வையை விரிவுபடுத்தி, புதிய புதிய கோணங்களில் சிந்தித்தால் பலன் நிச்சயம் உண்டு. சிறிய மாற்றுச் சிந்தனைகளால், பெரிய பலன்களை நல்க முடியும்.

10 December 2020, 15:02