தேடுதல்

கரையில் ஒதுங்கியிருக்கும் நட்சத்திர மீன் கரையில் ஒதுங்கியிருக்கும் நட்சத்திர மீன் 

விதையாகும் கதைகள் : நற்செயல்களை ஆரம்பித்தால் போதுமே

"எல்லா மீன்களையும் என்னால் காப்பாற்றமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்றமுடியும்" என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒரு நாள் மாலை, ஓர் அறிவாளி, இந்த உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தவண்ணம், கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். உலகின் பிரச்சனைகள், மலைபோல் அவர் மனதில் குவிந்திருந்ததால், எங்கு, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், குழம்பிப் போயிருந்தார். அவருக்கு முன், ஏழை மீனவர் ஒருவர், கடற்கரையில், எதையோ பொறுக்கியெடுத்து, கடலில் எறிந்துகொண்டிருந்தார். அறிவாளி கூர்ந்து கவனித்தபோது, அந்த மீனவர், கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த சின்னச் சின்ன நட்சத்திர மீன்களை எடுத்து, கடலில் எறிந்ததைப் பார்த்தார். அவரை அணுகி, "என்ன செய்கிறீர் நண்பரே?" என்று கேட்டார் அறிவாளி. மீனவர் அவரிடம், "கடல் நீர்மட்டம் குறைந்துவிட்டதால், இந்த மீன்கள் கரையில் ஒதுங்கிவிட்டன. இவை இங்கேயே தங்கிவிட்டால், இறந்துவிடும். அதனால், இவைகளை மீண்டும் கடலுக்குள் அனுப்பிவைக்கிறேன்" என்றார். "அது தெரிகிறது. ஆனால், நீர் இப்படி செய்வதால் என்ன பயன்? இந்தக் கடற்கரையில் பல ஆயிரம் மீன்கள் கரையில் கிடக்கின்றன. அதேபோல், உலகத்தின் பல கடற்கரைகளில், பல கோடி மீன்கள் கிடக்கின்றனவே. நீர் இவ்வாறு செய்வதால், எத்தனை மீன்களைக் காப்பாற்றமுடியும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டார். அந்த மீனவர், "எல்லா மீன்களையும் என்னால் காப்பாற்றமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்றமுடியும்" என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தார்.

நல்ல செயல்களை யாராவது ஒருவர், எங்காவது ஓரிடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தால் போதுமே.

08 December 2020, 13:25