தேடுதல்

Vatican News
இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி டாட்டா இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி டாட்டா 

விதையாகும் கதைகள்: மதிப்பை உணர்ந்து செயல்பட...

வாழ்க்கையில் நாம் பல விடயங்களைத் தொலைத்துவிட்டு, அவற்றைத் தேடிக்கொண்டே இருப்போம். அவை எப்போது நம் கையைவிட்டுச் செல்கின்றதோ அப்போதுதான் அவற்றின் மதிப்பு நமக்குப் புரியும்

மேரி தெரேசா: வத்திக்கான்

பெரிய தொழிலதிபர் ஒருவர், தொழிலதிபர் அமைப்பு நடத்தும் கூட்டங்களில் தவறாது பங்குகொண்டு வந்தார். அந்நேரங்களில், எத்தனையோ கோடிகளுக்குச் சொந்தமான மற்றொரு தொழிலதிபர் பயன்படுத்தும் பேனாவைக் கவனித்து வந்தார். ஒரு நாள் அவர், அந்த கோடீஸ்வர தொழிலதிபரிடம், ஏன் நீங்கள் எப்போதும் மிகச் சாதாரணமான, மலிவு விலையுள்ள பேனாவைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த  கோடீஸ்வரர், என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது. நான் எங்கு, எப்போது, எந்த இடத்திற்குச் சென்றாலும், எனது பேனாவைத் தொலைத்துவிடுவேன். இந்தப் பழக்கம் பல வருடங்களாக என்னிடம் இருக்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்கு நானும் எத்தனையோ முறை முயற்சி செய்தேன், முடியவில்லை, அதனால்தான், தொலைந்துபோனாலும் பரவயில்லை என, இந்த மாதிரி பேனாவை பயன்படுத்தத் தொடங்கினேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். அதைக் கேட்ட பெரிய தொழிலதிபர், நீங்கள், மிக விலையுயர்ந்த பேனாவைப் பயன்படுத்தத் தொடங்குங்கள், அதற்குப் பிறகு உங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே கவனிப்பீர்கள் என்று ஆலோசனை சொன்னார். சரி முயற்சி செய்கிறேன் என்று கூறிய அந்த கோடீஸ்வரர், 24 காரட் தங்க பேனா ஒன்றைப் பயன்படுத்த ஆரம்பித்தார். இது நடந்து ஆறு மாதங்கள் சென்று, ஆலோசனை சொன்ன தொழிலதிபர், அந்த கோடீஸ்வரரை தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம், மிக விலையுயர்ந்த பேனாவைப் பயன்படுத்துகிறீர்களா, அப்படி பயன்படுத்தினால் அதை எத்தனை முறை தொலைத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த கோடீஸ்வரர், புன்னகைத்துக்கொண்டே இந்த முறை நான் மிகவும் கவனமாக இருக்கிறேன், அதை ஒருமுறைகூட தொலைக்கவில்லை என்றார். அதற்கு அந்த தொழிலதிபர், சார், இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கின்றேன், தொலைப்பது உங்கள் பழக்கம் அல்ல, மாறாக, நீங்கள் வைத்திருக்கும் பொருளின் மதிப்பைக் குறைத்து மதிப்பீடு செய்ததே அதற்கு காரணம். எனவே எந்த ஒருபொருள் மீதும் உங்களுக்கு உண்மையாகவே மதிப்பு இருந்தால், அதை கண்டிப்பாக நீங்கள் தொலைக்கவே மாட்டீர்கள் என்று சொன்னார். இவ்வாறு ஆலோசனை கூறிய பெரிய தொழிலதிபர் வேறு யாருமல்ல, அவர்தான் இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி டாட்டா (Jahangir Ratanji Dadabhai Tata). இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தோற்றுவித்தவர்.

வாழ்க்கையில் நாம் பல விடயங்களைத் தொலைத்துவிட்டு, அவற்றைத் தேடிக்கொண்டே இருப்போம். அவை நம்மிடம் இருக்கும்போது அவற்றின் மதிப்பை உணர்ந்திருக்கவே மாட்டோம். ஆனால் அவை எப்போது நம் கையைவிட்டுச் செல்கின்றதோ அப்போதுதான் அவற்றின் மதிப்பு நமக்குப் புரியும். நம் உடலின் மதிப்பு தெரிந்தால், அதன்மீது எப்போதுமே கவனமாக இருப்போம். நம் நண்பர்களின் மதிப்புத் தெரிந்தால், அவர்களை மரியாதையோடு நடத்துவோம். பணத்தின் மதிப்புத் தெரிந்தால், அதை மிகக் கவனமுடன் செலவழிப்போம். நேரத்தின் மதிப்பு தெரிந்தால், அதை ஒருபோதும் வீணாக்கமாட்டோம். உறவுகளின் மதிப்புத் தெரிந்தால் அவற்றை நிச்சயமாக முறித்துக்கொள்ளமாட்டோம். (ShareChat வலைக்காட்சி) 

07 December 2020, 15:09