தேடுதல்

Vatican News
எலிப்பொறியைக் கூர்ந்து கவனிக்கும் எலி எலிப்பொறியைக் கூர்ந்து கவனிக்கும் எலி 

விதையாகும் கதைகள் : எலிப்பொறி என்னை ஒன்றும் செய்யாது...

நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்குப் பிரச்சனைகள் வரும்போது, 'எலிப்பொறி என்னை ஒன்றும் செய்துவிடாது' என்று நாம் ஒதுங்கினால், நம் அக்கறையின்மைக்கு, ஏதோ ஒரு வழியில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவசாயி ஒருவர் வீட்டில், கோழி, ஆடு, பசுமாடு ஆகியவை வளர்க்கப்பட்டன. அவ்வீட்டில் ஓர் எலியும் வாழ்ந்துவந்தது. ஒருநாள், அந்த விவசாயி, எலிப்பொறி ஒன்றை வாங்கிவந்து, தன் மனைவியிடம் கொடுப்பதை, அந்த எலி பார்த்தது. உடனே, அது, கோழி, ஆடு, மாடு அனைத்தையும் சந்தித்து, "வீட்டில் ஓர் எலிப்பொறி உள்ளது, எலிப்பொறி உள்ளது" என்று அலறியது. "எலிப்பொறி எங்களை ஒன்றும் செய்துவிடாது. அது உன் பாடு. பத்திரமாக இரு" என்று அவை அறிவுரை வழங்கின. மனமுடைந்த எலி, தன் வளைக்கு வருத்தத்துடன் திரும்பியது.

அன்றிரவு, எலிப்பொறியில் ஏதோ ஒன்று சிக்கிய சப்தம் கேட்டது. சிக்கியது என்ன என்று பார்க்க, வீட்டுத்தலைவி, இருளில் தட்டுத் தடுமாறி அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு, ஒரு நச்சுப்பாம்பின் வால் அந்தப் பொறியில் சிக்கியிருந்தது. வீட்டுத்தலைவி அருகில் வந்ததும், பாம்பு அவரைக் கொத்தியது.

வீட்டுத்தலைவர் தன் மனைவியை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார். மீண்டும் வீட்டுக்கு வந்த மனைவிக்குக் காய்ச்சல் அதிகமாகவே, வீட்டுத்தலைவர், தான் வளர்த்துவந்த கோழியை அடித்து, 'சூப்' செய்து, மனைவிக்குக் கொடுத்தார்.

மனைவியின் உடல்நலம் தேறவில்லை. அவரைக் காணவந்த உறவினர்கள், அங்கேயே தங்கியதால், வீட்டுத்தலைவர் ஆட்டை அடித்து அவர்களுக்கு விருந்து கொடுத்தார்.

இன்னும் இருநாள்கள் சென்று, வீட்டுத்தலைவி இறந்தார். ஊரெல்லாம் கூடிவந்ததால், வீட்டுத்தலைவர், தான் வளர்த்த பசுமாட்டைக் கொன்று விருந்து கொடுத்தார்.

இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த எலி, "வீட்டில் எலிப்பொறி உள்ளது என்று நான் சொன்னபோது, எல்லாரும் அலட்சியம் செய்தனரே" என்று மனம் வருந்தியது.

நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்குப் பிரச்சனைகள் வரும்போது, 'எலிப்பொறி என்னை ஒன்றும் செய்துவிடாது' என்று நாம் ஒதுங்கினால், நம் அக்கறையின்மைக்கு, ஏதோ ஒரு வழியில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

01 December 2020, 15:06