தேடுதல்

Vatican News
செயற்கை மரங்களுடன் சீன பெண்மணி செயற்கை மரங்களுடன் சீன பெண்மணி  (ANSA)

விதையாகும் கதைகள் : எதற்கு மதிப்பு அதிகம்?

உண்மையான பொருளுக்கே மதிப்பு அதிகம் என்று பலர் சொல்ல, பீர்பால் மட்டும், போலிக்குத்தான் மதிப்பு அதிகம் என்று வாதிட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அக்பர் ஒரு நாள் அரசவையில்,''எதற்கு மதிப்பு அதிகம்? உண்மையான பொருளுக்கா, போலியான பொருளுக்கா?''என்று கேட்டார். வழக்கம்போல எல்லாரும் உண்மையான பொருளுக்கே மதிப்பு அதிகம் என்று சொல்ல, பீர்பால் மட்டும் போலிக்குத்தான் மதிப்பு அதிகம் என்று வாதிட்டார்.

அரசர் அதை நிரூபிக்கச் சொல்ல, பீர்பாலும்,அதற்கு சிறிது காலம் தேவை என்றார்.

மறுநாள் பீர்பால் ஒரு தச்சரை அழைத்து, ''உன் திறமையைக்கொண்டு உண்மையான காய், கனி, மலர்கள்போலத் தோற்றமளிக்கும் பொருள்களை நீ செய்யவேண்டும்'' என்று சொல்ல, அவரும் ஒரு வாரத்தில் செய்துகொண்டு வந்தார்.

அவர் அப்பொருள்களுடன் அரண்மனைக்கு வந்து அரசரிடம் காட்டவேண்டும் என்றும், அரசர் பரிசு என்னவேண்டும் என்று கேட்டால், ஆயிரம் பொன்வேண்டும் என்று கேட்கவேண்டும் என்றும் சொன்னார்.

அவரும் மறுநாள் அதேபோல அரண்மனைக்கு வந்து அரசரிடம் தான் செய்த பொருள்களைக் காண்பிக்க, அரசர் அவை மிக அழகாக, உண்மையான பொருள்களிலிருந்து எந்த மாறுபாடும் கண்டுபிடிக்க முடியாததைக் கண்டு மிகவும் பாராட்டினார். மிகுந்த மகிழ்ச்சியுடன், அவருக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, அவரும் ஆயிரம் பொன்வேண்டும் என்று சொல்ல, அரசரும் அதைக் கொடுக்க ஆணையிட்டார்.

அவர் மகிழ்வுடன் பீர்பாலுக்கு நன்றி சொல்லிச் சென்றார்.

மறுநாள், பீர்பாலின் ஆலோசனைப்படி ஒரு வியாபாரி அப்போதுதான் தோட்டத்திலிருந்து பறித்த காய்கள், கனிகள், மலர்களைக் கொண்டு வந்தார்.

அரசர் எந்தவித ஆர்வமும் இல்லாமல், அவற்றைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக நூறு பொன் கொடுக்க ஆணையிட்டார்.

அப்போது பீர்பால் அரசரிடம், அவர் எவ்வாறு அசலைவிட, போலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைச் சுட்டிக்காட்ட, அரசரும் பீர்பாலை பாராட்டினார்.

23 December 2020, 13:01