விதையாகும் கதைகள் : கற்றது கையளவு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தன், புத்தரிடம், “குருவே, நான் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.. எப்படி?” என்று கேட்டார்.
புத்தர் அவரிடம், “இந்த மரத்தில் ஏறி இலைகளைப் பறித்து வா!” என்றார்..
ஆனந்தன் அந்த மரத்தின் மேல் ஏறி கைகொள்ளும் அளவுக்கு, இலைகளைப் பறித்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்.
புத்தர் அவரைப் பார்த்து, “ஆனந்தா, இப்போது உன் கையில் என்ன உள்ளது?” என்று கேட்டார்..
“இலைகள், குருவே” என்றார் ஆனந்தன்.
“அப்படியானால், மரத்தில்...?” என்று திருப்பிக் கேட்டார் புத்தர்.
“மரத்தில் நிறைய இலைகள் இருக்கின்றன” என்றார் ஆனந்தன்.
உடனே புத்தர், “ஆனந்தா, இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே...
அது இதுதான். நான் உனக்குப் போதித்தது உன் கையிலுள்ள அளவுதான். நான் உனக்குப்
போதிக்காதது மரத்திலுள்ள இலைகளின் அளவு. அவ்வளவையும் என்னால் போதிக்கமுடியாது. நீ இந்த உலகத்தை உன் அனுபவத்தால்தான் அதிகம் தெரிந்துகொள்ளமுடியும்” என்றார்.