தேடுதல்

Vatican News
மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் உலக நாள் மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் உலக நாள்  (AFP or licensors)

புலம்பெயர்ந்தோரின் நலவாழ்வில் அக்கறை காட்டப்பட

உலகில் 27 கோடியே 10 இலட்சம் புலம்பெயர்ந்தோர், தாங்கள் வாழ்கின்ற நாடுகளின் பொருளாதாரங்களுக்கு மட்டுமல்லாமல், தங்களின் ஊதியத்தால், சொந்த நாடுகளுக்கும் உதவியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர், சமுதாயங்களுக்கு ஆற்றிவரும் நன்மைகளை எடுத்துரைத்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் நெருக்கடிகள் மத்தியிலும், புலம்பெயர்ந்தோர், சமுதாயங்களுக்கு ஆற்றிவரும் பணிகள் பாராட்டப்படவேண்டும் என்றும், இதற்கு மாறாக, அவர்கள், நம் குழுமங்களில் பலநேரங்களில் மறக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடி சூழலில் நோயாளிகள் மற்றும், வயது முதிர்ந்தோரைப் பாரமரித்தல், ஊரடங்கு காலத்தில் உணவுப் பொருள்களை எடுத்துச்செல்லுதல் உட்பட, நம் சமுதாயங்களின் முக்கியத் தேவைகளை, புலம்பெயர்ந்தோர் நிறைவேற்றி வருகின்றனர் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர், நமக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் சட்டப்படி எந்நிலையில் இருந்தாலும், அவர்களின் நலவாழ்வில், குறிப்பாக, பெருந்தொற்றுக்கு தடுப்பு ஊசிகள் வழங்கப்படுவதில் அனைத்து நாடுகளும் அக்கறை காட்டவேண்டும் என, ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு விடுத்துள்ளார். 

2019ம் ஆண்டின் நிலவரப்படி, உலகில் 27 கோடியே 10 இலட்சம் புலம்பெயர்ந்தோர், தாங்கள் வாழ்கின்ற நாடுகளின் பொருளாதாரங்களுக்கு மட்டுமல்லாமல், தங்களின் ஊதியத்தால், சொந்த நாடுகளுக்கும் உதவியுள்ளனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார். (UN)

18 December 2020, 13:48