தேடுதல்

உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் அடையாளமாக விளங்கும் சிலுவை உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் அடையாளமாக விளங்கும் சிலுவை 

வாரம் ஓர் அலசல்: நம்பினால் சாதிக்கலாம்

ஒருவர் கடவுளைத் தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு நாளும் அன்பில் வளர்கிறார். மற்றவரை அன்புகூர்வதைத் தேர்ந்தெடுத்தால், வாழ்வில் உண்மையான மகிழ்வைக் கண்டடைகிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஓர் ஊரில் ஆறு வயது சிறுவன் ஒருவனும், 11 வயது சிறுவன் ஒருவனும் நெருங்கிய நண்பர்கள். எதிலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்தனர், ஒருவர் ஒருவர் நலனில் அக்கறை உள்ளவர்களாய், நல்ல நணபர்களாக வளர்ந்து வந்தனர். ஒரு நாள் இந்த இரு சிறுவர்களும் பட்டம்விட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். பட்டம் பறந்துசெல்லும் திசையை நோக்கி இருவரும் ஓடினர். அப்படியே ஊருக்கு வெளியே சற்று தொலைவில் வந்துவிட்டனர். பட்டம் சென்ற வழியில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, மூத்த சிறுவன் கிணறு ஒன்றில் தவறி விழுந்துவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியவில்லை. கிணற்றுக்குள் இருந்து உதவிக்காக கத்தினான். மேலே நின்ற ஆறு வயதுச் சிறுவனும் பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தப் பகுதியில் ஓர் ஆளைக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு நிமிடம் சிந்தித்த இளையவன், அங்கு கயிறு கட்டியிருந்த வாளியைக்  கிணற்றுக்குள் இறக்கினான். தனது நண்பனிடம், நீ இந்த வாளியை இறுகப் பிடித்துக்கொள். நான் எனது சக்தியையெல்லாம் கூட்டி மேலே இழுக்கிறேன் என்றான். அவ்வாறே மூத்தவனும் செய்ய, இளையவன் கஷ்டப்பட்டு, வாளியின் கயிற்றைப் பிடித்து இழுத்து தன் நண்பனைக் காப்பாற்றினான். இதை ஊருக்குள் சொல்வதற்கு இருவருமே அச்சமுற்றனர். ஆயினும், ஒருவித துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நடந்ததை அவர்கள் விவரித்தனர்.

அந்த இரு சிறாரும் அச்சமுற்றது போன்று, ஊர் மக்கள், அவர்கள் மீது வசைச்சொற்களை வீசவில்லை, அதேநேரம் அவர்கள் கூறியதையும் நம்பவில்லை. ஆறு வயதுச் சிறுவன், அவனைவிட மூத்த சிறுவனைக் காப்பாற்றி இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த வாளித் தண்ணீரைக்கூட தூக்க முடியாத அவனால், எப்படி இதைச் சாத்தியமாக்கியிருக்க முடியும் என்று கூறியதோடு, அச்சிறாரை கேலி செய்தும் சிரித்தனர். ஆனால், அந்த ஊரில் இருந்த தாத்தா ஒருவர் மட்டும், அச்சிறார் கூறியதை நம்பினார். அது, அந்த ஊர் மக்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்தது. அவருக்கு அந்த ஊரில் மதிப்பும் அதிகம். எனவே ஊர் மக்கள் தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்த தாத்தாவிடம் சென்றனர். அப்போது தாத்தா, ஊர் மக்களிடம் இவ்வாறு சொன்னார்.

ஆறு வயது சிறுவன்

அந்த நேரத்தில், அந்தச் சூழலில், உன்னால் இந்தச் செயலை செய்ய முடியாது, உன்னைவிட அதிக எடையுள்ள ஒருவரை உன்னால் தூக்கவே முடியாது என்று அந்தச் சிறுவனிடம் சொல்வதற்கு யாருமே இல்லை. அதுதான் இவன் தனது நண்பனைக் காப்பாற்றிய சாதனைக்கு முதல் காரணம். அடுத்து, அந்த ஆறு வயது சிறுவனுக்கு தன் மீது சந்தேகமே வரவில்லை. என்னால் முடியுமா? என்று, அவன் தனது சக்தியைக் குறித்து ஒரு விநாடிகூட சந்தேகிக்கவே இல்லை. தன்னைப் பற்றிய ஓர் எதிர்மறையான சிந்தனைக்கு அவன் இடம்கொடுக்கவே இல்லை. அந்த நேரத்தில் தனது நண்பன் ஆபத்தில் இருக்கிறான். அவனைக் காப்பாற்ற வேண்டும். இந்த ஒரேயோர் எண்ணம் மட்டுமே அவனது மனதில் இருந்தது. (Emotional story of Two friends K.Madhan)

எனவே, இந்த ஆறு வயது சிறுவன் ஆற்றிய செயல் பற்றி கேட்டபோது நம் ஒவ்வொருவருக்குமே நமது சக்தி மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். மேலும், நம் வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும், ஒரு செயலைச் செய்யவேண்டும் என்று சிந்திக்கும்போது, குறைந்தது ஒருவராவது நம்மிடம், உன்னால் இது முடியாது, எதற்கு வீணாக முயற்சி செய்து நேரத்தையும், பணத்தையும் விரயமாக்க நினைக்கிறாய் என்று நம்மை ஊக்கமிழக்கச் செய்யலாம். அதற்கு அவர் தடையாகவும் இருக்கலாம். அந்த மாதிரி நேரங்களில், முன்வைத்த காலை பின்வைக்காமல், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும். இந்தச் செயலை ஆற்ற என்னால் முடியும் என்று உறுதியாக நம்பினால், நிச்சயம் நினைத்ததை செய்து முடிக்கலாம் என்பதையே இந்த கதை உணர்த்துகிறது.

நம்பிக்கை என்ற செடி

வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று நினைத்து, நாம் கஷ்டப்பட்டு முயற்சி செய்துகொண்டிருக்கையில், அந்த முயற்சியைக் கைவிடுவதற்கு சிலர் நம்மைத் தூண்டலாம், அதற்கு திருவாளர் சுகி சிவம் அவர்கள் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்கிறார். ஒரு செடி வளரும்போது அதை ஆடு தின்றுவிடும். நம் நம்பிக்கை எனும் செடி வளர்கின்றபோது, சமுதாயம் என்ற ஆடு அதை மேய்ந்துவிடும். அதாவது நம் நம்பிக்கைச் செடி வளர்ந்துவரும்போது, சிலர் வந்து நம்மிடம், உனக்கு எதற்கு வீண்வேலை, இது நடக்கிற காரியமே இல்லை என்று சொல்வார்கள். அப்போது அதை இறைவாக்காக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு செடி, தடைகளை உடைத்தெறிந்துவிட்டு, கவனமாக வளர்ந்து மரமாகிவிட்டால், அதன் நிழலில் ஒதுங்குவதற்கு அதே ஆடு வரும். அதேபோல் நமது நம்பிக்கையை பிறர் பறித்துத் தின்றுவிடாதபடி கவனமாக இருந்தால், பின்னாளில் அந்த நம்பிக்கையின் நிழலில் அதே ஆட்கள் அடைக்கலம் தேடுவார்கள், தலைவா எது எப்படியிருந்தாலும், உங்கள் துணிச்சல் எனக்கு வராது என்று சொல்வார்கள். எனவே நம்பிக்கை என்பது, சிறு செடிபோன்றதாகும். அதைப் பாதுகாத்து வளர்த்து மேலே கொண்டுவரவேண்டும்.

கரங்களைத் தட்டும் போட்டி

ஒரு சமயம், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற கைதட்டும் போட்டி பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்நகரில் ஓர் அரங்கத்தில் பலரை அமரவைத்து தொடர்ந்து கைதட்டுகின்றவர்களுக்கு பரிசு என்று அறிவித்தனர். போட்டியும் ஆரம்பமானது. மேலேயிருந்து ஓர் ஒளி அந்த அரங்கத்தை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. யார் அதிகநேரம் தட்டுகிறார்களோ அவர்கள் மீது அந்த ஒளிவந்து நிற்கும். அந்த அரங்கத்தில் இருந்த ஏறத்தாழ எல்லாருமே கைதட்டி சோர்ந்து, கரங்களைத் தட்டுவதை நிறுத்தி விட்டனர். கடைசியாக ஐந்து மணிநேரம் தொடர்ந்து கைதட்டல் கேட்ட இடத்தில் அந்த ஒளி வந்து நின்றது. அந்த இடத்தில் இருந்தவரை மேடைக்கு வருமாறு பரிசுக்குழுவினர் அழைத்தனர். ஆனால் ஒருவர் எழுந்து வராமல், இருவர் எழுந்து நின்றனர். அவர்களை எல்லாருமே ஆச்சரியமாகப் பார்த்தனர். ஏனெனில் அந்த இருவரில் ஒருவருக்கு வலது கையும், மற்றொருவருக்கு இடது கையும் இல்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து தட்டலாம் என்ற முடிவோடு, அந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வையும் மேடைப் பேச்சு ஒன்றில் கூறிய திருவாளர் சுகி சிவம் அவர்கள், கைதட்டும் போட்டியில் இரு கைகளும் இல்லாமல் இருவர் கலந்துகொள்வேன் என்று தீர்மானித்ததே வெற்றிபெற்றதைவிட மேலானது. ஒருவர் வலக்கை இன்றியோ, இடக்கை இன்றியோ வாழலாம், ஆனால் நம்பிக்கை இன்றி ஒரு நொடிகூட வாழ முடியாது என்பதை, இந்த நிகழ்வு உணர்த்துகிறது என்று சொல்லியுள்ளார். கோவிட்-19 கொள்ளைநோய் பலரில் வாழ்க்கை மீது அச்சத்தையும், நம்பிக்கையின்மையையும், நிச்சயமற்ற ஒரு நிலையையும் உருவாக்கியுள்ளது. ஆயினும் அவற்றுக்கு மத்தியில்,  நம்பிக்கையுடன் வாழ்ந்து, துன்புறுவோருக்கு பல நல்ல உள்ளங்கள் உதவிவருகின்றன.

பேராசிரியர் தமிழ்நாயகம்

பழநி ஆண்டவர் கலைக் கல்லுாரி பேராசிரியர் தமிழ்நாயகம் அவர்கள், கடந்த பதினைந்து ஆண்டுகளாக பழநி அருகே அணைக்கட்டுகள் மற்றும், நீர்நிலைகளில் கிடக்கும் நெகிழிப் மற்றும் கண்ணாடி பாட்டில்கள், சாலையின் இருபுறமும் வீசப்படும் டாஸ்மாக் பாட்டில்கள் ஆகியவற்றை, இளையோர் மற்றும், வனத்துறையினருடன் இணைந்து துாய்மைப்படுத்தி வருகிறார். மேலும், தற்போதைய கொரோனா கொள்ளைநோய் ஊரடங்கு காலத்தில், மலைப்பகுதிகளில் சிரமப்படும் பளியர் இன மக்களுக்கு உதவுமாறு வனத்துறையினர் தமிழ்நாயகம் அவர்களிடம் கேட்கவே, இவரும், அப்பகுதியின் எண்பது மலைக்கிராமங்களில், 47 கிராமங்களுக்கு, உணவுப் பொருள், போர்வை, துண்டு, சேலை போன்ற  தேவையானவற்றை வழங்கியுள்ளார். மேலும் வனத்துறையினரோடு இணைந்து காடுகளில் விதைப்பந்து வீசுதல், மரம் நடுதல் போன்றவற்றிலும் பேராசிரியர் தமிழ்நாயகம் அவர்கள் ஈடுபட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ்

நவம்பர் 22, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் அடையாளமாக விளங்கும் சிலுவையை பானமா நாட்டு இளையோர், போர்த்துக்கல் நாட்டு இளையோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அத்திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வாழ்வில் எதைத் தேர்ந்துகொள்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்று இளைஞர்களுக்கு கூறினார். ஒருவர் திருடுவதை தேர்ந்தெடுத்தால், திருடராக மாறுகிறார். தன்னைப்பற்றியே நினைப்பதற்கு தீர்மானித்தால் தன்னலவாதியாக மாறுகிறார். வெறுப்பைத் தேர்ந்தெடுத்தால் கோபமுள்ளவராக மாறுகிறார். மணிக்கணக்காய் கைபேசியில் நேரத்தைச் செலவிடத் தீர்மானித்தால் அதற்கு அடிமையாகிவிடுகிறார். ஆயினும் கடவுளைத் தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு நாளும் அன்பில் வளர்கிறார். மற்றவரை அன்புகூர்வதைத் தேர்ந்தெடுத்தால், வாழ்வில் உண்மையான மகிழ்வைக் கண்டடைகிறார் என்று திருத்தந்தை கூறினார். வாழ்க்கை மீது நம்பிக்கையை இழக்கவைக்க எத்தனை பிரச்சனைகள் நேர்ந்தாலும், நம்மைப் படைத்து பராமரிக்கும் கடவுள் நம்மை அன்புகூர்கிறார், அவர், நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையில் வாழ்வோம். கடவுள் நம்பிக்கையோடு, தன்னம்பிக்கையையும் சேர்த்து, வாழ்வில் முன்னேறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2020, 13:47