தேடுதல்

சூடானில் கிறிஸ்தவர்கள் சூடானில் கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

உலக அளவில் சமய அடக்குமுறை அதிகரிப்பு

மக்களாட்சி முழுமையாக நடைபெறும் டென்மார்க், ஜெர்மனி, ஹாலந்து, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளிலும்கூட, முஸ்லிம்கள் மற்றும், யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில், அரசுகள் விதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் வழியாக, சமய அடக்குமுறை அதிகரித்து வருகின்றது என்று, 198 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட Pew ஆய்வு மையம், நவம்பர் 10, இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.

உலக அளவில் சமய அடக்குமுறை குறித்து மேற்கொண்ட ஆய்வில், சீனா முதலிடத்தில் உள்ளது என்றும், அதனையடுத்து ஈரான், மலேசியா, தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும், இவற்றைத் தொடர்ந்து, மற்ற 21 ஆசிய நாடுகள் அந்த வரிசையில் உள்ளன என்றும்,  Pew ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது.

சமயக் குழுக்கள் மீது மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள், தடுப்புக்காவல்கள், உடலளவில் துன்புறுத்தல், சொத்துக்களை அழித்தல், நாட்டைவிட்டு வெளியேற்றுதல் போன்ற, பல்வேறு வழிகளில் அதிகரித்து வருகின்றன என்றும், இவ்வாறு அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளில், ஐம்பது விழுக்காட்டுக்கு அதிகமானவை, ஆசியாவில் உள்ளன என்றும், அந்த ஆய்வு கூறுகிறது.

அரசுகளைத் தவிர, தனியார், குழுக்கள் போன்றவற்றால் விதிக்கப்படும், மதம் சார்ந்த கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன என்று கூறும் அந்த ஆய்வு, இவ்வாண்டில் அதிகமாகவும், மிக அதிகமாகவும் கட்டுப்பாடுகளை விதித்த நாடுகள் 56 என்றும், இவைகளில் 25, ஆசிய-பசிபிக் பகுதியைச் சார்ந்தவை என்றும், 18, மத்திய கிழக்கு மற்றும், வட ஆப்ரிக்காவைச் சார்ந்தவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

சீனா உட்பட, ஆசிய-பசிபிக் பகுதியில் சில நாடுகள் எல்லா நேரங்களிலும், அதிக அளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்றும், 198 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில், சீனா முதலிடத்தில் உள்ளது என்றும், Pew ஆய்வு மையம் கூறியுள்ளது.

மக்களாட்சி முழுமையாக நடைபெறும் டென்மார்க், ஜெர்மனி, ஹாலந்து, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளிலும்கூட, முஸ்லிம்கள் மற்றும், யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும், அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. (AsiaNews)

13 November 2020, 15:00