தேடுதல்

Vatican News
தாவி குதிக்கும் தவளை தாவி குதிக்கும் தவளை 

விதையாகும் கதைகள் : கேட்கச் செவியின்றி இருப்பதும் நலமே!

அந்தத் தவளை, "எனக்கு காது சரியாகக் கேட்காது. எனவே, நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காகத்தான் கத்துகிறீர்கள் என்றெண்ணி, இன்னும் அதிகமாக முயற்சி செய்தேன்" என்று புன்சிரிப்புடன் சொன்னது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தவளைக் கூட்டமொன்று காட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென, அக்கூட்டத்திலிருந்த மூன்று தவளைகள் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டன. இதைக் கண்ட தவளைக் கூட்டம் அந்தக் குழியைச் சுற்றி நின்று கீழே பார்த்தன. அந்த மூன்று தவளைகளும் மீண்டும் மேலே வரும் முயற்சியில் குதிக்க ஆரம்பித்தன. அவை எவ்வளவு முயன்றும், அந்தக் குழியின் ஆழத்தைத் தாண்டி, வெளியில் வருமளவு குதிக்க முடியவில்லை.

இந்தப் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற தவளைகள், ஒன்று சேர்ந்து, கத்த ஆரம்பித்தன. "நீங்கள் என்னதான் முயன்றாலும் வெளியே வரமுடியாது. எனவே, அங்கேயே தங்கிவிடுங்கள்" என்று தவளைகள் அனைத்தும் சேர்ந்து கத்தின. அந்தக் கத்தலையும் மீறி, மூன்று தவளைகளும் தொடர்நது குதித்தன. அவற்றில் இரு தவளைகள், விரைவில் சோர்வுற்று, மற்ற தவளைகள் கத்தியதற்கு ஏற்ப, குதிப்பதை நிறுத்திவிட்டன.

மூன்றாவது தவளை மட்டும், இன்னும் அதிக முயற்சி எடுத்தது. இறுதியில் அந்தத் தவளை குழியின் ஆழத்தையும் தாண்டி மேலே குதித்து, குழியைவிட்டு வெளியேறியது. இதைக் கண்ட மற்ற தவளைகள், "குதிக்கவேண்டாம் என்று நாங்கள் அவ்வளவு கத்தியும் நீ ஏன் கேட்கவில்லை?" என்று கோபமாகக் கேட்டன. அப்போது அந்தத் தவளை, "எனக்கு காது சரியாகக் கேட்காது. எனவே, நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காகத்தான் கத்துகிறீர்கள் என்றெண்ணி, இன்னும் அதிகமாக முயற்சி செய்தேன்" என்று புன்சிரிப்புடன் சொன்னது.

வார்த்தைகள்... ஆக்கவும், அழிக்கவும் வலிமை வாய்ந்தவை. அழிக்கும் வார்த்தைகள், ஓங்கி ஒலிக்கும்போது, அவற்றைக் கேட்காமல் இருப்பது, கூடுதலான வலிமையைத் தரக்கூடும்.

24 November 2020, 12:27