தேடுதல்

ஏழைகளுக்கு உணவு ஏழைகளுக்கு உணவு 

விதையாகும் கதைகள்: தீர ஆராயாமல் குறை கூறுவது நல்லதல்ல

எப்போதோ யாரோ ஒருவர் செய்த தவறை திரும்பத் திரும்பச் சொல்லி வேதனைப்படுத்தக் கூடாது. மேலும், தவறு நடந்ததற்கு காரணம் என்ன என்று சிறிதுகூட ஆராயாமல், ஒருவர் மீது பழிசுமத்தவும் கூடாது.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு காலத்தில் கிராமம் ஒன்றில் வாழ்ந்த செல்வந்தர் ஒருவர், பெரிய சத்திரம் ஒன்றை அமைத்து, ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம், மூவாயிரம் ஏழைகள் மற்றும்,  வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி வந்தார். ஒவ்வொரு நாளும், திறந்த வெளியில் பெரிய பாத்திரங்களில் வைத்து உணவைத் தயாரித்து வந்தார். ஒரு நாள், அந்த இடத்திற்கு நேரே மேலே, ஒரு கருடனும் பாம்பும் சண்டை போட்டன. கருடனின் காலில் சிக்கிய பாம்பு, தனது நெஞ்சை, கீழே சமைத்துக்கொண்டிருந்த பாத்திரத்தில் சிந்தாமல் இருப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தது. ஆயினும் ஒரு துளி நஞ்சை, உணவு பாத்திரத்தில் சிந்திவிட்டது. அந்நேரத்தில் பணியாளர்கள் எவரும் அதை கவனிக்கவில்லை. அன்று முதல் பந்தியில் அமர்ந்து அந்த உணவை உண்ட ஏறத்தாழ முன்னூறு பேர் இறந்துவிட்டனர். இதைப் பார்த்த அந்த செல்வந்தர் மிகுந்த வேதனைப்பட்டு அந்த சத்திரத்தை சிலகாலம் மூடி வைத்திருந்தார். அன்று இறந்த அந்த 300 பேரின் பாவக்கணக்கை யார் மீது சுமத்துவது என்று, விண்ணுலகில் ஒரு விவாதம் நடந்தது. பின்னர் இரண்டு மூன்று ஆண்டுகள் சென்று அந்த செல்வந்தர் மீண்டும் அந்த சத்திரத்தைத் திறந்து உணவு வழங்கத் தொடங்கினார். அச்சமயத்தில் அந்த செல்வந்தர் முதலில் உணவை தான் உண்ட பின்னரே மற்றவருக்குப் பரிமாறச் சொன்னார். ஒருநாள் அந்த கிராமத்துப் பக்கம் வந்த சில துறவிகள், வழியில் அவர்கள் சந்தித்த பாட்டி ஒருவரிடம், இந்த ஊரில் நல்ல உணவு கிடைக்கும் சத்திரம் இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு அந்த பாட்டி, அந்த செல்வந்தர் நடத்திவரும் சத்திரத்திற்குப் பாதையைக் காட்டினார், அதோடு, அவர்களிடம், நீங்கள் அங்கு உணவருந்திவிட்டு திரும்பி வருவீர்களா என்பது சந்தேகம்தான் என்றும் சொன்னார். அதற்கு அந்த துறவிகள் பாட்டியிடம் காரணம் கேட்டனர். பாட்டியும் சில ஆண்டுகளுக்குமுன் 300 பேர் இறந்தது  பற்றிச் சொன்னார். பாட்டி சொன்னதைக் கேட்ட யமதர்மன், அந்த 300 பேரின் பாவக்கணக்கை இந்த பாட்டியின் மீது எழுதுங்கள் என்று கூறினார். ஆம். எப்போதோ யாரோ ஒருவர் செய்த தவறை திரும்பத் திரும்பச் சொல்லி வேதனைப்படுத்தக் கூடாது. மேலும், தவறு நடந்ததற்கு காரணம் என்ன என்று சிறிதுகூட ஆராயாமல், ஒருவர் மீது பழிசுமத்தவும் கூடாது. அதேநேரம் நாம் செய்யாத தவறுக்காக நம்மீது குற்றம் சுமத்தப்படும்போது அதற்காக கவலைப்படவும் தேவையில்லை. (Motivational stories in tamil யமன் கணக்கு குட்டிக்கதை Sabari)

05 November 2020, 15:40