தேடுதல்

Vatican News
பிரான்ஸ் காலால் படை பிரான்ஸ் காலால் படை 

விதையாகும் கதைகள்: திறமையைவிட பெரிது ஆர்வம்

உன்னால் முடியாது, உனக்குத் திறமையில்லை என்று, உன்னை உலகம் ஒதுக்கினாலும், என்னால் முடியும் என்று ஆர்வமாகப் பயிற்சிகள் எடுத்துக்கொண்டால், அது வெற்றியைத்தரும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருசமயம், கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில் அவர்கள், மன்னர் பிலிப்புவின் அரண்மனை பூங்காவில் உட்கார்ந்திருந்தார். அப்போது அவர்  அந்த பக்கமாய் சில படைவீரர்கள் சோகமாய்ச் சென்றுகொண்டிருந்ததைக் கவனித்தார். உடனே  அரிஸ்டாட்டில் அவர்கள், படைத்தளபதியிடம் சென்று, அதற்கு காரணம் கேட்டார். கடந்த ஓராண்டளவாக அந்த வீரர்களை கவனித்து வந்தேன், அவர்களிடம், எந்த திறமையோ, வீரமோ கிடையாது. அவர்களைப் பார்த்து மற்றவர்களும் கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக, அவர்களைப் படையிலிருந்து நீக்கிவிட்டேன் என்று சொன்னார், அந்த தளபதி. இது நடந்து ஏறத்தாழ ஏழு மாதங்கள் சென்று, அந்த நாடு, வேறோர் நாட்டோடு போர் தொடுத்தது. அந்தப் போரை அந்த படைத்தளபதிதான் தலைமை தாங்கி நடத்தினார். போர் தொடங்கி சில நாள்களிலேயே அவரது படைகள் பின்னடைவைக் கண்டு வந்தன. குறிப்பிட்ட நாளன்று படைத்தளபதியும் படுகாயமடைந்தார். அவ்வளவுதான் நாம் தோற்றுவிட்டோம் என அவரும், மற்ற வீரர்களும் அஞ்சத் தொடங்கினர். அந்நேரத்தில் தொலைவிலிருந்து நூறு வீரர்கள் வேகமாக குதிரையில் வந்து அந்த தளபதியின் பக்கம் நின்று எதிரியோடு மிகத் திறமையாகப் போரிட்டு, வெற்றியும் கிட்டினர். பின்னர் அந்த படைத்தளபதியை குதிரையில் ஏற்றிக்கொண்டு தங்களது கூடாரம் சென்று, அவருக்கு சிகிச்சையும் அளித்தனர். தளபதியோ, நடப்பது எல்லாவற்றையும் கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் அங்கு வந்த அரிஸ்டாட்டில் அவர்கள், அந்த படைத்தளபதியிடம், சற்று அந்த வீரர்களை ஏறெடுத்துப் பாருங்கள், இவர்கள் அனைவரும், சில மாதங்களுக்குமுன் நீங்கள் நீக்கிவிட்ட படைவீரர்கள். இன்று உங்கள் உயிரையே காப்பாற்றும் அளவுக்கு திறமையானவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் படையிலிருந்து அகற்றப்பட்டபின், நான் அவர்களைத் தேடிச்சென்று தனித்தனியாகச் சந்தித்துப் பேசினேன். நாட்டுக்காகப் பணியாற்றவேண்டும் என்ற ஆர்வம் அவர்களில் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். திறமையையவிட ஆர்வம் பெரிது என்பது எனது நம்பிக்கை. அதனால் அவர்களுடன் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் சேர்த்து ஒரு சிறிய படையை உருவாக்கினேன். அந்த வீரர்கள் ஒவ்வொருவரும் மேலும் மூன்று பேருக்கு, தொடர்ந்து போர்ப் பயிற்சி அளித்தார்கள், இன்று அந்தப் படை வெற்றியையும் குவித்தது என்று கூறினார். ஆம். உன்னால் முடியாது, உனக்குத் திறமையில்லை என்று, உன்னை உலகம் ஒதுக்கினாலும், என்னால் முடியும் என்று ஆர்வமாகப் பயிற்சிகள் எடுத்துக்கொண்டால், அது வெற்றியைத்தரும். சாதாரணமான திறமைகள் இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

02 November 2020, 13:55