தேடுதல்

செருப்பு தைப்பவர் செருப்பு தைப்பவர்  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : செருப்பு தைப்பவரின் போதனை

மற்றவர்களுடைய கருத்துக்களையெல்லாம், உங்கள் தலையில் சுமந்துகொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்களுடைய செருப்பை, உங்கள் காலில் அணியக் கூடாதா?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அவர் அதிகம் படித்தவர். அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். ஏராளமான நூல் நிலையங்கள் ஏறி இறங்கியிருக்கிறார். ஏராளமான புத்தகங்கள் படித்துள்ளார். அறிவில் தனக்கு நிகர் எவருமில்லை என்ற கர்வம் அவருக்கு இருந்தது.

ஒரு நாள் நூலகத்திலிருந்து வரும் வழியில், அவருடைய செருப்பு அறுந்துவிட்டது. வழியில் இருந்த செருப்புத் தைப்பவர் ஒருவரிடம் கொடுக்க, அவர், அதை சரிசெய்ய ஒரு நாள் ஆகும் என்றார். ஒரு நாள் முழுவதும் செருப்பின்றி எவ்வாறு நடப்பது என்று அவர் கேட்க, செருப்புத் தைப்பவர்,  வேறொருவருடைய செருப்பை ஒரு நாளைக்குத் தருவதாகக் கூறினார்.

''மற்றவர் செருப்பை என் காலில் அணிவது எப்படி?'' என்றார் அவர் கோபத்துடன். செருப்புத் தைப்பவர் அவரிடம், '' மற்றவர்களுடைய கருத்துக்களையெல்லாம், உங்கள் தலையில் சுமந்துகொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்களுடைய செருப்பை, உங்கள் காலில் அணியக் கூடாதா?'' என்று மறுகேள்வி கேட்டார்.

அன்று அவர் முதல்முறையாக சுயமாக சிந்திக்கத் தொடங்கினார். ஒரு புத்தகத்தைப் பார்ப்பது போல், அந்தத் தொழிலாளியைப் பார்த்தார். அவர் கைகள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தன, அவர் சொன்ன வார்த்தைகளோ, இவர் நெஞ்சைத் தைத்துக் கொண்டிருந்தன.

தலைக்கனம் மெல்ல தரைக்கு வர ஆரம்பித்தது.

 

20 November 2020, 12:05