தேடுதல்

இறைவனை நோக்கிய செபம் இறைவனை நோக்கிய செபம்   (AFP or licensors)

விதையாகும் கதைகள் : இறைவன் ஒன்றுமே அளிக்கவில்லையே?

இறைவன் நமக்கு கொடுத்த உணவுக்காக மட்டுமல்ல, அவர் கொடுத்த பசிக்காகவும், தாகத்துக்காகவும்கூட அவருக்கு நன்றி கூறுவோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

ஜென் குரு ஒருவர் தன் சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். கடும் வெயில். ஒரு மரம்கூட இல்லை. ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை. நீர்நிலை எதுவும் தென்படவில்லை. குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர். அதைப் பார்த்த குரு, மாலை நேரம் ஆகிவிட்டதால், ஓர் இடத்தில் தங்கலாம் என்று சொன்னார். உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்துவிட்டனர்.

குரு உறங்கச் செல்லும்முன் தியானம் செய்வது வழக்கம். அன்றும் அவர் மண்டியிட்டபடியே, “இறைவா, தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி'' என்று கூறி வணங்கினார்.

பசியில் இருந்த ஒரு சீடருக்கு உடனே கடுமையான கோபம் வந்தது. எழுந்து உட்கார்ந்த அவர், “குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?'' என்றார்.

சிரித்துக்கொண்டே குரு சொன்னார், “யார் அப்படிச் சொன்னது? இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்''

இன்பமும் துன்பமும், வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஞானிகள் உணர்ந்திருக்கின்றனர்.

14 November 2020, 12:10