தேடுதல்

Vatican News
இந்திய முதியோர் இல்லம் ஒன்றில் இந்திய முதியோர் இல்லம் ஒன்றில்  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : செல்லமா வளர்த்தது தப்பா?

பிள்ளைகள் கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டு, அன்புக்காக, அவர்களிடமே, கடைசி காலத்தில் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்படும் பெற்றோர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

"நான் சின்ன பையனா இருக்கிறப்போ அஞ்சு ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் பொம்மை வாங்கி தர மாட்டாரு எனது அப்பா. ஆனா நம்ப பையனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு பொம்மை வாங்கி தந்தேன்", என்றார் கணவர். "ஆமா அதுக்கென்ன?" என்று கேட்டார் மனைவி.

"படிக்கிறப்போ எங்க அப்பா எனக்கு வாங்கித் தந்தது எல்லாம் பழைய புத்தகம். ஆனால் நான் நம்ம மகன் கிழிக்க கிழிக்க புது புது புத்தகமா வாங்கித் தந்தேன்" என தொடர்ந்தார் கணவர். "அதான் ஏற்கனவே சொல்லி இருக்கிறீங்களே" என்றார் மனைவி.

"படு கஞ்சத்தனமா இருந்து எங்களை வளத்தாரு எங்க அப்பா. ஆனா நான் நம்ப பையன் கேட்கிறதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தேன்" என்று கணவர் கூற, "ஆமா ‘ஸ்மார்ட் போன்’ கூட வாங்கி கொடுத்தீங்க. அதான் பல தடவை சொல்லிட்டீங்களே" என இடைமறித்தார் மனைவி. "வசதியே இல்லாம என்னை வளர்த்தாலும், என்னை பெத்தவங்கள நான் உயர்ந்த இடத்தில வச்சி அழகு பார்த்தேன்", என்று பெருமைப்பட்டார் கணவர்.

"நீங்க எல்லா வசதியோடும் பிள்ளையை வளர்த்தும், அவன் நம்மை இந்த முதியோர் இல்லத்துல வச்சி அழகு பார்க்கிறான். ரொம்ப செல்லமா வளர்த்ததும் தப்பு போல. உங்க அப்பா கண்டிப்பா வளர்த்து, அதன் பலனை அனுபவிச்சுட்டு சந்தோசமா போயிட்டாரு. நீங்களோ, அவன் கேட்டதையெல்லாம் கொடுத்துட்டு, இப்போ அன்புக்காக அவன்கிட்டேயே கையேந்தி நிற்கும் நிலைக்கு வந்திருக்கீங்க. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்", என்று சொல்லி அடக்க முடியாமல் அழுதார் அந்த தாய், தன் கணவனின் நிலையை நினைத்து.

27 November 2020, 15:00