தேடுதல்

புத்தர் சிலை முன் புத்தர் சிலை முன்  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : புத்தர் போட்ட முடிச்சு

நம்முடையச் சிக்கல்களுக்கு நாமேக் காரணம். நம்மை அறியாமல், நாம் போட்டுக்கொள்ளும் முடிச்சுகளில் சிக்கித் தவிக்கிறோம். அந்த முடிச்சுகளை அவிழ்க்கமுடியாமல் திணறுகிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

புத்தரின் வருகைக்காகக் காத்திருந்தனர் சீடர்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் புத்தர் வந்தார். அவரது கையில் கைக்குட்டையை விடக் கொஞ்சம் பெரிய துணி இருந்தது. சீடர்களுக்கு எதிரே இருந்த மேடையில் அமர்ந்த புத்தர், எதுவும் பேசாமல் கையில் இருந்த துணியில் முடிச்சுகளைப் போடத் தொடங்கினார். மொத்தம் 5 முடிச்சுகள்.

தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்த சீடர்களைப் பார்த்த புத்தர், “நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப்போகிறேன். அதற்கு முன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்போகிறேன். என்னுடைய முதல் கேள்வி; இப்போது முடிச்சுகள் விழுந்துள்ள இந்தத் துணி, முன்பிருந்த அதே துணிதானா? முடிச்சுகள் இல்லாததும், உள்ளதும் ஒன்றுதானா?” என்று கேட்டார்.

புத்தரின் முக்கியச் சீடர்களில் ஒருவரான அனந்தன் எழுந்து, “சுவாமி! ஒரு வகையில் முன்பிருந்ததும், இப்போது இருப்பதும் ஒன்றுதான். ஆனால் அதில் இருக்கும் முடிச்சுகள் மட்டுமே வேறுபாடு. முன்பு இருந்த துணி சுதந்திரமானது. இப்போதுள்ள துணி அடிமைப்பட்டு கிடக்கிறது”, என்றார்.

உடனே புத்தர், “சரியாகச் சொன்னாய். எவரும் இயல்பில் கடவுள்தான். ஆனால் முடிச்சுப் போட்டுக்கொண்டு, சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு போய்விடுகிறார்கள். நாம் அனைவரும் புத்தர்களே. ஆனால் தனித்தனி உலகங்களை உருவாக்கிக்கொண்டு, அதில் சிக்கிக்கொண்டு தனிமைப்பட்டு போய்விடுகிறோம், இந்த முடிச்சுகளைப் போல. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

பின்னர் சற்று நேரம் அமைதியாக இருந்த புத்தர், “என்னுடைய இரண்டாவது கேள்வி, இந்த முடிச்சுகளை அவிழ்க்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். இப்போது மற்றொரு முக்கிய சீடர், சாரி புத்தன் எழுந்து நின்றார்.

“குருவே! அந்த முடிச்சுகளை அவிழ்க்க, நான் அருகில் வர அனுமதிக்க வேண்டும். முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்க வழியில்லை. ஏனெனில் சில சமயங்களில் நினைவின்றி போடப்படும் முடிச்சுகளை, அவிழ்க்கவேமுடியாமல் போகலாம்”, என்றார்.

“சரியாகச் சொன்னாய். அதுதான் வாழ்க்கை. அதுதான் வாழ்க்கையின் இரகசியம். நம்முடையச் சிக்கல்களுக்கு நாமே காரணம். நம்மையறியாமல், நாம் போட்டுக்கொள்ளும் முடிச்சுகளில் சிக்கித் தவிக்கிறோம். அந்த முடிச்சுகளை அவிழ்க்கமுடியாமல் திணறுகிறோம். அவரவர் முடிச்சை அவரவர்தான் அவிழ்க்கவேண்டும். இதுதான், இன்று நான் உங்களுக்குக் கூறும் பாடம்”, என்றார் புத்தர்.

14 November 2020, 12:39