தேடுதல்

Vatican News
மன்னிப்பின் தேவை மன்னிப்பின் தேவை 

விதையாகும் கதைகள் : காலணியிடம் மன்னிப்பா?

நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம்தான் செய்கிறோம். பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே, கோபம் அடங்கி விடும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு மகானைத் தேடி ஒருவர் படபடப்போடும் கோபத்தோடும் வந்தார். கால் செருப்பை கழற்றிக் கோபமாக ஒரு மூலையில் வீசி எறிந்தார். கதவை வேகமாக அடித்துச் சாத்தினார். அப்புறம் மகானுக்கு வணக்கம் தெரிவித்தார்.

மகான், “அப்பா, உன் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு வா” என்றார்.

“உயிரற்ற அப்பொருட்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது?” என்று கேட்டார், வந்தவர்.

“அந்தச் செருப்புக்கும், கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய். மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா?” எனக் கேட்டார் மகான்.

அவர் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டார். அவரது மூர்க்க குணம் அடங்கியது.

“நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம்தான் செய்கிறோம். பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே, கோபம் அடங்கி விடும்” என்றார் மகான்.

11 November 2020, 14:24