தேடுதல்

Vatican News
UNDP நடத்திய இணையவழி கூட்டம் UNDP நடத்திய இணையவழி கூட்டம் 

தேவையான, அடிப்படையான, உண்மையான மாற்றங்கள்

இந்தக் கொள்ளைநோயை உலகிலிருந்து விரட்டும் முயற்சிகளில், உலகின் வறிய நாடுகளையும் இணைத்து, செல்வம் மிகுந்த நாடுகள் திட்டங்களை வகுக்கவேண்டும் - ஐ.நா. தலைமைச் செயலர் கூட்டேரஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள இந்த நெருக்கடி நிலையை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, இவ்வுலகிற்குத் தேவையான, அடிப்படையான, உண்மையான மாற்றங்களைக் கொணரவேண்டும் என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், நவம்பர் 24 இச்செவ்வாயன்று ஒரு வலைத்தள சந்திப்பில் கூறினார்.

"நீடித்து நிலைத்திருக்கக்கூடிய முன்னேற்றத்தை அனைவருக்கும் வழங்க, உலக பொருளாதாரத்தை மீண்டும் பிறக்கச் செய்வது" என்ற தலைப்பில், ஐ.நா.வின் முன்னேற்ற செயல்திட்டங்கள் அவை (UNDP) நடத்திய ஓர் இணையவழி கூட்டத்தில், கூட்டேரஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

இந்தக் கொள்ளைநோயினால், இதுவரை, 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், மற்றும், 10 கோடிக்கும் அதிகமான மக்கள் மிகக் கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை, தன் உரையில் குறிப்பிட்ட கூட்டேரஸ் அவர்கள், வறுமை, ஏற்றத்தாழ்வு, பட்டினி ஆகிய கொடுமைகளை நீக்க, உலகெங்கும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று எடுத்துரைத்தார்.

இந்தக் கொள்ளைநோயை அடுத்துவரும் காலத்தில், நாம், சுற்றுச்சூழலுக்கு மதிப்பு கொடுக்கும் வண்ணம் மறுசுழற்சி முறைகளையும், நீடித்து நிலைத்திருக்கும் வழிகளில் சக்திகளைப் பயன்படுத்துவதையும் குறித்து மிகத் தீவிரமாகச் சிந்திக்கவேண்டும் என்று கூட்டேரஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இந்தக் கொள்ளைநோயை உலகிலிருந்து விரட்டும் முயற்சிகளில், உலகின் வறிய நாடுகளையும் இணைத்து, செல்வம் மிகுந்த நாடுகள் திட்டங்களை வகுக்கவேண்டும் என்று ஐ.நா. தலைமைச் செயலர் கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.(UN)

25 November 2020, 14:55